எட்டாம் வார்த்தை

18. Page



எட்டாம் வார்த்தை


بسم الله الرحمن الرحيم – الله لا إله هو الحي القيوم – إن الدين عند الله الإسلام


'அல்லாஹ்வையன்றி வேறு கடவுள் இல்லை அவன் நித்திய ஜீவன்' (ஆல இம்ரான் -2)

'நிச்சயமாக அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம்' (ஆல இம்ரான் -19)

     இந்த உலகின் யதார்த்தத்தையும் அதிலுள்ள மனித ஆன்மா, மார்க்கத்தின் நிலை, மனிதனிடத்தில் அதன் பெறுமதி என்பவற்றையும்ளூ சத்திய மார்க்கம் மாத்திரம் இல்லாவிட்டால் இவ்வுலகம் சிறைச்சாலையாக மாறியிருக்கும் என்பதனையும்ளூ படைப்பாளனை மறுக்கின்ற நாஸ்திகன்தான் மிகக் கேடுகெட்ட படைப்பு என்பதனையும்ளூ 'யா அல்லாஹ்!' 'அல்லாஹ்வையன்றி வேறு கடவுளில்லை' என்ற மூலநாதமே இந்த உலகின் புதிர்களை அவிழ்த்து மனித ஆன்மாவை இருள்களிலிருந்து காப்பாற்றக்கூடியது என்பதையும் நீ அறிய விரும்பினால் இந்தச் சிறிய உருவகக் கதைக்கு செவிசாய்ப்பீராக!

    முன்னொரு காலத்தில் இரு சகோதரர்கள் ஒன்று சேர்ந்து நெடும் பயணம் ஒன்றை மேற்கொண்டார்கள். அவர்கள் சிறிது தூரத்தை அடைந்த போது தமது பாதை இரண்டாகப் பிரிகின்ற ஓர் முற்சந்தியை அடைந்தார்கள். அச்சந்தியில்; கண்ணியமான மனிதரொருவர் நிற்பதைக் கண்டு 'இவ்விரு பாதைகளில் எது சிறந்த பாதை?' என அவ்விருவரும் வினவினார்கள். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்: 'வலப்புறப் பாதை- சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்றிச் செல்லவேண்டிய பாதை. அந்தக் கட்டுப்பாடுகளில் பாதுகாப்பும் சந்தோசமும் இருக்கும். ஆனால், இடப்புறப் பாதை- கட்டுப்பாடற்ற சுதந்திரமாகப் பயணிக்கக் கூடிய பாதை. அந்தக் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தில் அபாயமும் துரதிஷ்டமும் கலந்திருக்கும். இப்;போது நீங்களே உங்கள் பயணப் பாதையை தெரிவு செய்து கொள்ளுங்கள்.

             இந்த உபதேசத்தை செவியேற்ற இருவரில் நற்குணமுடைய சகோதரர், 'நான் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்றேன்' எனக் கூறிக் கொண்டு வலப்புறப் பாதையில் பயணத்தைத் தொடர்ந்தார். மேலும் சட்டம், ஒழுங்குகளுக்குக் கட்டுப்படுவதை திருப்தியோடு ஏற்றுக்கொண்டார். ஆனால், துர்க்குணமுடையவன் சுதந்திரத்தை விரும்பி இடப்புறப் பாதையைத் தெரிவு செய்தான். புறத்தோற்றத்தில் மென்மையையும் யதார்த்தத்தில் பெரும் சுமையையும் சுமந்துகொண்டு பயணிக்கும் இந்த மனிதனை நாம் கற்பனையில் பின்தொடர்வோம். அவன் தனது பயணத்தில் மேடு பள்ளங்களையும் குன்று குழிகளையும் கடந்து ஓர் வெற்றுப் பாலைவனத்தை சென்றடைகின்றான். அப்போது திடீரென திடுக்கிடும் ஓர் பெரும் சத்தத்தை செவியேற்று பார்வையைத் திருப்புகின்றான். அங்கே பயங்கரமான சிங்கமொன்று கர்ஜித்துக் கொண்டு தன்னை தாக்கத் தயாராகுவதைக் கண்டு 'தப்பினேன், பிழைத்தேன்' என ஓட்டமெடுத்தான். பின்னர் அச்சத்தால் தன்னைக் காத்துக்கொள்ள அறுபது முழம் கொண்ட ஓர் பாழ் கிணற்றில் குதித்தான்.

அந்த கிணற்றின் மத்தியிலே காணப்பட்ட ஓர் மரத்தை தனது கரங்களால் பற்றிப் பிடித்துக் கொண்டான். இந்த மரத்துக்கு இரு மூல வேர்கள் இருந்தன. அவை கிணற்றின் இரு சுவர்களிலும் பதித்திருந்தன. அவற்றை இரு எலிகள் கொரித்துக் கொண்டிருந்தன. ஒன்று வெள்ளை நிற எலி. மற்றது கறுப்பு நிற எலி. இந்த மனிதன் கிணற்றின் வாயை கீழிருந்த நிலையில் உற்றுநோக்கினான். அங்கே சிங்கம் காவல் காரனைப் போன்று காத்துக் கொண்டிருந்தது. கிணற்றின் கீழ்ப்பகுதியை உற்றுநோக்கினான். அங்கே அச்சுறுத்தும் நாகப் பாம்பொன்று தனது தலையை தூக்கி முப்பது முழம் உயர்த்திலுள்ள அவனது பாதங்களைத் தொட்டுக் கொண்டிருந்தது. அதன் வாய் கிணற்றின் சுற்றுவட்ட விசாலத்தைக் கொண்டிருந்தது. அவனைச் சூழவுள்ள கிணற்றின் உற்சுவரிலே கொட்டித் தீங்கிழைக்கக் கூடிய பூச்சி புழுக்களையும் கண்டான். மர உச்சியை அவதானித்தான். அது அத்தி மரமாக இருந்த போதும் -வழமைக்கு மாற்றமாக- சாதாரண பழம் முதல் மாதுளம் வரை வகை வகையான எண்ணற்ற பழங்களை சுமந்து நின்றது.


19. Page

தனது பிழையான புரிதலினதும் மடத்தனத்தினதும் விளைவாக இந்த மனிதன், 'இந் நிகழ்வுகள் இயற்கையோ, திட்டமிடல்களற்ற எதேர்ச்சையோ அன்று. இவ்வாறான அதிசயிக்கத்தக்க நிகழ்வுகளில் மறைமுக இரகசியங்கள் பொதிந்துள்ளன' என்பதை புரியத் தவறிவிட்டான். அவ்வாறே இந் நிகழ்வுகளை நிர்வகிக்கும் 'ஓர் மாபெரும் நிர்வாகி' இருப்பதையும் அவன் விளங்கிக் கொள்ளவில்லை. இப்பொழுது வேதனைமிக்க இச் சூழ்நிலையில் -அந்த மனிதனின் பகுத்தறிவு, ஆன்மா, உள்ளம் என்பவற்றின் இரகசிய அழுகுரல்கள், ஓலங்களுக்கு மத்தியிலும்- தீமையைத் தூண்டும் அவனது ஆன்மா தன்னைச் சூழ நடப்பவற்றை கண்டுகொள்ளாமலும், எதுவும் நடக்காததைப் போலவும், தான் ஓர் பூங்காவனத்தில் இருப்பதாகவும் நினைத்துக் கொள்கிறது. அது தனக்குத்தானே மோசடி செய்து உள்ளத்தினதும் ஆன்மாவினதும் அழுகைக்கு முனனால்; செவிடாகி அம்மரத்தின் பழங்களை சுவைக்கத் தொடங்கியது. அதில் சில பழங்கள் விஷமூட்டப்பட்டு கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தன. 

ஹதீஸுல் குத்ஸியில் , 'எனது அடியான் என்னைப் பற்றி நினைப்பதைப் போன்றே நானும் இருப்பேன்' என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அதாவது, எனது அடியான் என்னைப் பற்றி எப்படி அறிந்து வைத்தள்ளானோ, என்னிடம் எதனை எதிர்பார்க்கின்றானோ அப்படியே நானும் அவனுடன் நடந்து கொள்வேன். இவ்வாறு பிழையான புரிதலினாலும் மடத்தனத்தினாலும் துரதிஷ்டவானான அந்த மனிதன் தான் கண்டவற்றை சாதாரணமானதாகவும், உண்மையானதாகவும் கருதினான். இதனால் அவன் அவனுடைய மனப்பதிவுக்கு ஏற்ப நடாத்தப்பட்டான்; நடாத்தப்படுகின்றான். அதுபோன்றே அவன் நடாத்தப்படுவான். இந்நிலையிலிருந்து அவன் விடுதலை பெறுவதற்கு அவனால் மரணத்தைத் தழுவவோ அல்லது தொடர்ந்தும் வாழ்வை அனுபவிக்கவோ முடியவில்லை. இவ்வாறு அவன் வேதனையில் புரண்டான். 

வேதனையில் புரளும் இந்த துரதிஷ்ட மனிதனை விட்டுவிட்டு நல்ல மனிதனின் நிலையைப் பற்றி அறிய நாம் முயற்சிப்போம். இந்த அருள்பெற்ற புத்திசாலி மனிதன் தனது பயணத்தைத் தொடர்கிறான். தனது சகோதரனைப் போன்று எந்தவொரு நெருக்கடியையும் அவன் எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் அவன் நற்பண்புள்ளவனாக இருந்தான். எப்பொழுதும் நல்ல விடயங்களைப் பற்றியே சிந்தித்தான். எதிர்பார்ப்புக்கள் வைப்பதிலும் சிந்திப்பதிலும் அவன் நல்லதையே விரும்பினான். நான் மட்டும்தானே! என்று அவன் சங்கடப்படவில்லை. அவனுக்கு ஆறுதலாக அவனையே அவன் கண்டுகொண்டான். இதனால் அவன் அடுத்த சகோதரனைப் போல் கஷ்டத்தையோ களைப்பையோ எதிர்கொள்ளவில்லை. ஏனெனில் சட்டம், ஒழுங்குகளை அறிந்து, ஏற்று, அவற்றுக்குக் கட்டுப்பட்டு அவன் பயணம் செய்கிறான்.

அதன் மூலம் வசதி வாய்ப்புக்கள் சிலதைப் பெற்று பாதுகாப்புடன் சுதந்திரமாகப் பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் ஓரு தோட்டத்தை சென்றடைந்தான். அதிலே அழகிய பூக்களும், மரங்களும் இருந்தன. சிறந்த முறையில் பராமரிக்கப்படாததன் காரணமாக அங்கே அழுக்குகளும் அசுத்தங்களும்; உருவாகியிருந்தன. முன்னைய சகோதரன் இத் தோட்டத்தில் நுழைந்த போது அங்கிருந்து வெளியாகிய அழுக்குகளின் துர்வாடையை மாத்திரம் அவதானித்து, தனது வயிற்றை மாசுபடுத்திக் கொண்டான். இத்தோட்டத்தில் குறிப்பிட்டதொரு காலம் தங்கியிருந்தாலும் அவனால் எவ்வித மனநிம்மதியையும் பெறமுடியவில்லை; வெளியேறிவிட்டான். எனினும், இந்நல்ல மனிதர் 'அனைத்திலும் நல்லதையே பார்' எனும் விதிக்கமைய அழுக்குகளை ஏறெடுத்தும் பார்க்காமல் நல்ல விடயங்களை மாத்திரம் அவதானித்;து அவற்றின் மூலம் பயன்பெற்று பூரண ஓய்வை எடுத்துக் கொண்டார். பின்னர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.


20. Page

தனது தொடர் பயணத்தில் முன்னைய சகோதரன் சென்ற மாதிரியே ஓரு பெரிய பாலைவனத்தை அவர் சென்றடைந்தார். அங்கே அவனைத் தாக்குவதற்கு காத்திருக்கும் சிங்கத்தின் கர்ஜனையை திடீரென செவியேற்றபோது அஞ்சினான். எனினும் அவன் தனது சகோதரன் போன்று பெரிதாக அச்சம் கொள்ளவில்லை. ஏனெனில் 'இந்தப் பாலைவனத்துக்கு ஓர் ஆட்சியாளன் இருக்க வேண்டும் இந்தச் சிங்கம் அந்த ஆட்சியாளனின் கட்டளையின் கீழ் செயற்பட வேண்டும்' என்ற அவனது அழகிய சிந்தனையினதும் நல்லெண்ணத்தினதும் விளைவாக மனஆறுதலைப் பெற்றுக்கொண்டான். இருப்பினும் முன்னைய சகோதரனைப் போல் இவனும் விரண்டோடி அறுபது முழம் கொண்ட பாழ்கிணற்றில் குதித்தான். அவனது இரு கரங்களும் கிணற்றின் மத்தியிலுள்ள மரத்தைப் பற்றிப்பிடித்துக் கொண்டு அண்டவெளியில் தொங்கிக் கொண்டிருந்தான். அப்போது அந்த மரத்தின் வேர்கள் இரண்டையும் அரித்துக் கொண்டிருக்கும் இரு மிருகங்களைக் கண்டான்.

மேலே பார்த்த போது -தனது சகோதரன் கண்டதைப் போன்று- ஓர் சிங்கத்தையும் கிழே உற்றுநோக்கிய போது ஓர் நாகப் பாம்பையும் கண்டு திடுக்கிட்டான்; ஆச்சரியப்பட்டான். எனினும் இவனது ஆச்சரியம் முன்னைய சகோதரனின் ஆச்சரியத்தை விட ஆயிரம் மடங்கு குறைவானதாகவே இருந்தது. ஏனெனில் அவனது அழகிய பண்புகள் அவனுக்கு அழகியதொரு சிந்தனையை வழங்கியிருந்தது. அந்த அழகிய சிந்தனை அவனுக்கு அனைத்து விடயங்களிலும் உள்ள அழகிய பக்கங்களை காட்டியிருந்தது. இதனால் 'இந்த ஆச்சரியமான செயற்பாடுகள் ஒவ்வொன்றும் மற்றதுடன் தொடர்புபட்டது எனவும், ஒருவனின் கட்டளையின் பெயரிலேயே அவை நடைபெறுகின்றன எனவும், அப்படியாயின் இச்செயற்பாடுகளில் புரியாத ஒரு புதிர் இருக்கிறது' எனவும் அவன் சிந்தித்தான். 

  'ஆம், இந் நிகழ்வுகள் மறைமுகமான ஓர் ஆட்சியாளனின் கட்டளைப்படி நடக்கின்றதெனின் நான் தனித்து விடப்பட்டவனல்ல. இந்த மறைமுக ஆட்சியாளன் என்னை அவதானித்துக் கொண்டிருக்கின்றான்ளூ என்னை சோதிக்கின்றான். ஏதோ ஓர் நோக்கத்திற்காக என்னை அழைக்கின்றான். ஏதோ ஓர் திசையில் என்னை அழைத்துச் செல்கின்றான். இவ்வாறான இனிய அச்சத்தாலும் அழகிய சிந்தனையாலும் 'ஐயோ! என்னை சோதிப்பவர் யார்? தன்னை என்னிடம் அறிமுகப்படுத்த விரும்பும் அந்நபர் யார்?; குறித்ததொரு நோக்கத்துக்காக ஆச்சரியமான வழிமுறையொன்றின் மூலம் என்னை வழிநடாத்துபவர் யார்?.' என்ற கேள்விகள் தோன்றி 'அவனை' அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு ஏற்பட்டது. இந்த ஆர்வத்தினால் அப்; புதிருக்குரியவனை நேசிக்க வேண்டும் என்ற ஆசை அவனில் மேலெழுந்தது. அவ்வாசையின் காரணமாக அப்புதிருக்கு எப்படியாவது விடைகாண வேண்டும் என்ற விருப்பம் தோன்றியது. அவ் விருப்பத்தினால் அப்புதிரின் சொந்தக்காரனை திருப்திப்படுத்தி அவனைக் கவருவதற்காக நல்லதொரு நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வமும் உருவானது.

பின்னர் அவன் மரத்தின் உச்சியை அவதானித்தான். அது பல்லாயிரம் வகை மரங்களின் கனிகளை சுமந்து நிற்கும் ஓர் அத்தி மரம் என அடையாளம் கண்டு கொண்டான்;. அதன் பின்னர்தான் அவனது அச்சம் முழுமையாக நீங்கியது. இந்த அத்தி மரம் ஓர் பெயர்பட்டியலும், ஓர் உள்ளடக்கமும்; ஓர் கண்காட்சியும் மட்டுமே. இந்த மர்ம ஆட்சியாளன் தன் தோட்டங்களிலிருக்கும் மாதிரிக் கனிகளை ஒரு புதிராகவும் அற்புதமாகவும் மாலையாகவும் மரத்தில் அணிவித்துள்ளான். தனது விருந்தாளிகளுக்காக அவன் தயார்படுத்தி வைத்திருக்கும் உணவு வகைகளை விளம்பரப்படுத்தும் முகமாக இம்மரத்தை அலங்கரித்துள்ளான். அவ்வாறில்லையாயின் எவ்வாறு ஒரு மரம் பல்வகை மரங்களினது பல்லாயிரம் கனிவர்க்கங்களை உற்பத்தி செய்ய முடியும். எனவே இதன் பின்னணியில் ஒருவன் இருக்கிறான் என அவன் உறுதியாக நம்பினான். பிறகு அவன் பிராயச்சித்தத்தில் ஈடுபடலானான். உடனே, அவனுக்கு அப்புதிரை திறக்கும் சாவி கிடைக்கப் பெற்றது. அப்போது அம்மனிதன் இவ்வாறு அழைக்க ஆரம்பித்தான்;


21. Page

'அகிலங்களின் ஆட்சியாளனே! நான் உனது கதவை தட்டிவிட்டேன். உனது பாதுகாப்பில் நுழைந்துவிட்டேன். நான் உனது பணியாளன். உனது திருப்தியை வேண்டுகின்றேன். உன்னைத் தேடுகின்றேன். உன்னிடமே மன்றாடுகின்றேன்.' இப் பிராயச்சித்தத்தின் பின் கிணற்றின் சுவர் திடீரெனப் பிளந்தது. அதிலிருந்து ஒரு வாசல் உருவானது. அதுவே அழுக்கற்ற, கவர்ச்சிமிகு அழகிய தோட்டத்திற்கான வாயில். நாகப் பாம்பின் வாயே வாயிலாக மாறியது. சிங்கமும் பாம்பும் இரு பணியாட்களாக மாறி அவனை உள்நுழையுமாறு அழைத்;தன. அச் சிங்கம் அவருக்கு வசப்பட்ட குதிரையாக மாறியது.

எனது சோம்பேரி ஆத்மாவே! கற்பனையில் சஞ்சரிக்கும் என் தோழனே! நன்மை நன்மையையே கொண்டுவரும்ளூ தீமை தீமையையே கொண்டுவரும் என்பதை அறிந்து கொள்ள இவ்விரு சகோதரர்களின் நிலையையும் நான் உங்களுக்கு ஒப்பிட்டு விளக்குகின்றேன். வாருங்கள் !!

• இடப்புறப் பாதையில் பயணிக்கும் துரதிஷ்டவாலி தான் நாகப்பாம்பின் வாயில் விழப்போவதாக எண்ணி ஒவ்வொரு கணப்பொழுதும் நடுநடுங்குகின்றான். ஆனால் அந்த அதிஷ்டசாலி பழங்கள் நிறைந்த, அழகிய, கவர்ச்சிமிகு தோட்டத்துக்கு தான் அழைக்கப்படுவதாக உணர்கின்றான்.

• துரதிஷ்டமிக்கவனின் உள்ளம் பெரும் அச்சத்தாலும், வலியை ஏற்படுத்தும் திடுக்கத்தாலும் சுக்குநூறாகிக் கொண்டிருக்க, அந்த அதிஷ்டசாலியோ அந்நியமான, ஆச்சரியமான விடயங்களை இனிய படிப்பினையாகவும், நேசிக்கும் அறிவாகவும் பார்க்கின்றார்.

• துரதிஷ்டசாலி தனிமையிலும், விரக்தியிலும், பரிதவிப்பிலும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்க அந்த அதிஷ்டசாலி நட்பாலும், எதிர்பார்ப்பினாலும், அன்பாலும் சந்தோசப் பெருமூச்சு விடுகின்றான்.

• துரதிஷ்டசாலி பயங்கர காட்டு மிருகங்களின் தாக்குதலுக்கு அகப்பட்டுக் கொண்ட ஒருவனாக தன்னைக் கருதும் நிலையில், அந்த அதிஷ்டசாலி தான் நம்பிக்கை கொண்டுள்ள தயாளனின் ஆச்சரியமிக்க பணியாட்களுடன் சகவாசம் கொண்டு, சந்தோசப் பேருவாகையுடன் சங்கைமிகு விருந்தாளியாக வீட்டிருக்கின்றான்.

•துரதிஷ்டசாலி புறத்தோற்றத்தில் சுவையும், யதார்த்தத்தில் விஷத்;தன்மையும் கொண்ட பழங்களை அவசரப்பட்டு சாப்பிட்டதன் மூலம் தனக்குத் தானே தண்டனை வழங்கிக் கொண்டான். உண்மையில் அப் பழங்கள் ஒருவன் சுவைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட மாதிரிகளேயாகும். ஆனால், அதன் மூலம் அவற்றின் மூலங்களைப் பெற முயற்சிக்கும் வாடிக்கையாளனாக அவன் மாற வேண்டும். மாறாக, மிருகத்தைப் போன்று அவற்றை விழுங்கி ஏப்பமிட அவன் அனுமதிக்கப்படவில்லை. மறுபுறத்தில், அந்த அதிஷ்டசாலி அவற்றை சுவைக்கின்றான். அதன் யதார்த்தத்தைப் புரிந்துகொள்கின்றான். அவற்றை அவசரப்பட்டு சாப்பிடுவதைப் பிற்படுத்துகின்றான். அதற்காகக் காத்திருப்பதில் இன்பம் காண்கின்றான்.

• துரதிஷ்டவாளி தனது தீட்சண்யத்தை இழந்து தனக்குத்தானே அநீதியிழைத்துக் கொண்டு, வெள்ளிடை மலையாக காட்சியளிக்கும் அந்த உண்மையை, வெளிச்சத்தை ஊகமாகவும் காரிருள்; சூழ்ந்த நரகமாகவும் மாற்றிக் கொண்டான். எனவே தன்னிலையை எடுத்துக்கூறி எவரிடமும் அன்பைப் பெறவோ, முறையிடவோ, அவனுக்கு எவ்வித தகுதியும் கிடையாது.

உதாரணமாக, ஒரு மனிதன் வசந்தகாலத்திலே அழகிய பூங்காவனமொன்றில் தனது தோழர்கள் பங்கு கொள்ளும் விருந்துபசாரத்தில் திருப்திப்படாமல், தீமை பயக்கும் போதை வஸ்துக்களால் தன்னை மதிமயக்கிக் கொள்கின்றான். அதனால், தான் மாரிகாலத்தில் குரூர மிருகங்களுக்கு மத்தியில் பசியோடும், ஆடையின்றியும் நிற்பதாக எண்ணி அழுது புலம்பிக் கதறுகிறான். இப்படியானவன் அன்பு காட்டப்படத் தகுதியானவனன்று. ஏனென்றால், அவன் தனக்குத் தானே அநீதியிழைத்துக் கொண்டான். தனது தோழர்களை கொடிய விலங்குகளாகக் கருதி இழிவுபடுத்திவிட்டான்.... இம்மனிதனை ஒத்ததுதான் அந்த துரதிஷ்டமிக்க மனிதனின் நிலை.

அதிஷ்டசாலியைப் பொருத்தவரையில் அவர் யதார்த்தத்தைக் காண்கிறார். யதார்த்தம் தன்னளவில் அழகானது. அந்த யதார்த்தத்தை நல்லமுறையில் அறிந்துகொள்வதன் மூலம் அதன் சொந்தக்காரனின் பூரணத்துவத்தை அவர் மதிக்கின்றார். இதன் மூலம் அவனது அருளுக்குப் பாத்திரமானவனாக அவ்வதிஷ்டசாலி மாறுகின்றார். இங்குதான் அல்குர்ஆனுடைய கட்டளையின் இரகசியம் புலப்படுகின்றது. 'உங்களைப் பீடிக்கின்ற எந்தவொரு நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே வந்ததாகும். உங்களைப் பீடிக்கின்ற எந்தவொரு தீங்கும் நீங்கள் தேடிக்கொண்டதே'