நான்காம் வார்த்தை
NAVIGATION
10. Page
நான்காம் வார்த்தை
بسم الله الرحمن الرحيم – الصلاة عماد الدين
'தொழுகை மார்க்கத்தின் அடிப்படை'
தொழுகைக்கு ஓர் உயர் பெறுமானமும் அதிமிகுந்த முக்கியத்துவமும் உண்டு. அதனை நிறைவேற்றுவது இலகுவானதுளூ குறைந்த செலவுடையது. தொழுகையை விடுபவன் மதியிழந்த ஓர் நஷ்டவாளி என்பதை மிக உறுதியாக -இரண்டை இரண்டால் பெருக்கினால் நான்கு என்பதைப் போல்- நம்பிக்கை கொள்ள விரும்பினால் நீர் இந்தச் சிறிய உருவகக் கதையை உற்றுநோக்குங்கள்! முன்னொரு காலத்தில் மகத்துவமிகு ஆட்சியாளன் ஒருவன் தனது இரு பணியாட்களை இரு மாதப் பயணத்தூரத்தில் அமைந்துள்ள தனது சொந்த, அழகிய பயிர்நிலத்துக்குப் போய் தங்குமாறு அனுப்பி வைத்தான். மேலும், அவ்விருவருக்கும் தலா இருபத்து நான்கு தங்க நாணயங்களைக் கொடுத்து தமக்குத் தேவையான பயணக் கட்டுச்சாதத்தையும், பயணச்சீட்டையும், அங்கே வசிப்பதற்குத் தேவையான வேறு சிலதையும் வாங்கிக் கொள்ளுமாறும் ஏவல் விடுத்தான். அங்கே ஒரு நாள் பயண தூரத்தின் பின்னரே போக்குவருத்து நிலையமும், அதிலே ஒவ்வொருவரும் தமது பொருளாதார வசதிக்கேற்ப விரைவாகப் பயணிக்கக்கூடிய பஸ், கப்பல், புகையிரதம், விமானம் ஆகியனவும் காணப்பட்டன.
இருவரும் தமக்குரிய போதனைகளைப் பெற்று பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்களில் ஒருவன் அதிஷ்டசாலியாக இருந்தான். தன்னிடமுள்ள பணத்தில் சிறியதொரு தொகையை செலவளித்து போக்குவருத்து நிலையத்தை அடைந்தான். மேலும், தனது எஜமானை வியப்படையச் செய்யுமளவு வியாபாரத்தில் இலாபம் உழைத்து தனது மூலதனத்தை ஒன்றிலிருந்து ஆயிரம் வரை அதிகரித்தும் கொண்டான். அடுத்த பணியாளனைப் பொருத்தவரையில் அவன் துரதிஷ்டமிக்கவனாகவும் பொறுப்பற்றவனாகவும் இருந்தான். அவன் போக்குவருத்து நிலையத்தை அடைய முன்னரே தன்னிடமுள்ள இருபத்தி மூன்று தங்க நாணயங்ளையும் சூதிலும் கேளிக்கையிலும் செலவழித்து வீணடித்துவிட்டான். தற்போது அவனிடம் ஒரேயொரு தங்க நாணயத்தைத் தவிர வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை. அப்போது அவனது நண்பன் கூறினான்:
'நண்பனே! இந்த ஒரேயொரு நாணயத்தைக் கொண்டேனும் உனது பயணச்சீட்டை வாங்கிக் கொள்! இல்லாவிடின் இந்த நீண்ட பயணப்பாதையில் நீ நடந்தும் பசி, பட்டனியுடனும் தான் பயணிக்க வேண்டிவரும். எமது எஜமான் தயாள குணம் கொண்டவர். அவர் உன்மீது இரக்கம் காட்டி நீ செய்த தவறை மன்னித்து உன்னை விமானத்தில் அழைத்துச் செல்லப் போதுமானவர். அப்போது நாம் இருவரும் செல்ல வேண்டிய இடத்தை ஒரே நாளிலே சென்றுவிடலாம். இல்லாவிடின், நீ மாத்திரம் இரு மாதகால பயணதூரத்தை பசி, பட்டனியுடன் பாலைவனத்தில் நடைபயணமாக செல்ல நிர்ப்பந்திக்கப்படுவாய்...'
11. Page
ஐயோ! இந்த மனிதன் பிடிவாதம் பிடித்து அதிஷ்டப் புதையலினது சாவியின் தரத்திலுள்ள அந்தப் பயணச்சீட்டை தன்னிடமுள்ள ஒரு தங்க நாணயத்தைக் கொடுத்தேனும் வாங்காது அதனையும் தற்காலிக இன்பத்தைப் பெறுவதற்காக மடத்தனத்திலே செலவழித்துவிட்டால் அவன் ஒரு முழு முட்டாள், துரதிஷ்டசாலி, நஷ்டவாளி என்பதை எவரும் –குறை புத்தியுடையவர்களும்- ஏற்றுக் கொள்வார்கள்.
தொழுகையை விடுபவனே! தொழுகையை சுமையாகக் கருதும் எனது ஆத்மாவே!
• அந்த ஆட்சியாளன் தான் எமது இரட்சகன்ளூ எம்மைப் படைத்தவன்.
• பயணிக்கும் பணியாட்களில் ஒருவர் தொழுகையை ஆசையோடு நிறைவேற்றும் மார்க்கவாதி. மற்றவர் தொழுகையை விடக்கூடிய பொடுபோக்காளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.
• அந்த இருபத்தி நான்கு தங்க நாணயங்கள் என்பது மனித ஆயுளில் ஓவ்வொரு நாளும் கொண்டுள்ள இருபத்தி நான்கு மணித்தியாளங்கள்.
• அந்த விஷேட பயிர்நிலம் என்பது சுவனம்.
• அந்தப் போக்குவருத்து நிலையம் என்பது கப்று.
• அந்தப் பயணம் என்பது கப்று, மஹ்ஷர் மற்றும் நிரந்தர வாழ்வை நோக்கி மனிதன் செல்லும் பயணம். ஒவ்வொருவரும் அந்த நீண்ட பயணத்தை தமது செயல் மற்றும் தக்வாவின் பலம் என்பவற்றின் தராதரங்களுக்கேற்ப கடந்து செல்வார்கள். இறையச்சம் கொண்டவர்கள் ஆயிரம் வருட தூர பயணத்தை ஒரே நாளில் மின்னலைப் போன்று கடந்துவிடுவார்கள். இன்னொரு சாரார் ஐம்பதாயிரம் வருட தூர பயணத்தை ஒரே நாளில் கற்பனை போன்று கடந்து முடிப்பார்கள். மகத்துவமிகு குர்ஆன் இந்த உண்மையை தனது இரு வசனங்களில் சுட்டிக்காட்டுகின்றது.
• அந்தப் பயணச்சீட்டு என்பது தொழுகை. வுழூவுடன் ஐவேளைத் தொழுகையை நிறைவேற்ற குறைந்தது ஓர் மணித்தியாலம் போதுமானதாகும்.
ஐயோ! மிகக் குறுகிய உலக வாழ்வுக்காக இருபத்து மூன்று மணித்தியாலங்களை செலவழித்துவிட்டு ஒரேயொரு மணித்தியாலத்தை மாத்திரம் நீண்ட, நிரந்தர வாழ்வுக்காக செலவழிக்காதிருப்பவன் தனக்குத்தானே எவ்வளவு பெரிய நஷ்டத்தையும் அநீதியையும் இழைத்துக் கொள்கின்றான்..!! இத்தகையோரின் செயற்பாடு சாதாரண புத்திக்கே முரண்படுகின்றதல்லவா..!! ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் லொத்தர் சீட்டிலுப்பில் ஒருவனுக்கான வெற்றி வாய்ப்பு ஆயிரத்தில் ஒன்றாய் இருக்க அதில் மனிதன் தனது அரைவாசிப் பணத்தையே செலவழிக்கின்றான். இதனை பகுத்தறிவு ஏற்குமாயின் தொன்னூற்று ஒன்பது வீதம் உறுதியான இலாபத்தைக் கொண்ட நிரந்தர அருட்கடாட்சத்திற்காக தனது செல்வத்திலிருந்து இருபத்தி நான்கில் ஒன்றையேனும் செலவழிக்காத இந்த மனிதனின் செயல் எவ்வளவு தூரம் பகுத்தறிவுடன் முரண்படுகின்றது..? இது புத்திசாதுரியமான செயலன்று..? தன்னை புத்தசாலியாகக் கருதுவோர் இதனை விளங்கிக் கொள்ள மாட்டார்களா?
உண்மையில் தொழுகை உடலுக்கு சுமையல்ல. அதில் ஆன்மாவுக்கும், உள்ளத்துக்கும், பகுத்தறிவுக்கும் மிகப் பெரிய ஓய்வும், அமைதியுமுண்டு. தொழுகையை நிறைவேற்றுபவனுக்கு ஏனைய ஆகுமான லோகாயுத செயற்பாடுகள் கூட நல்லெண்ணத்தின் அடிப்படையில் இபாததாக மாறுகின்றது. இதன்மூலம் அவன் தனது வாழ்க்கை எனும் முழு மூலதனத்தையும் மறுமைக்கான சம்பாத்தியமாக மாற்ற சக்தி பெறுகின்றான். இன்னொரு வகையில் அவன் தனது அழியும் வாழ்நாளை நிரந்தரமானதாக மாற்றிக் கொள்கின்றான்.


