ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அபன்தி
NAVIGATION
2. Page
ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அபன்தி
• இஸ்பார்த்தாவிலுள்ள 'ஸனீர்ஜா' எனும் கிராமத்தில் 1889ல் (ஹி 1315) பிறந்தார். இவர் உஸ்மானிய கிலாபத்தின் கீழ் இஸ்பார்த்தாவின் கவர்னாக இருந்த அலி அபன்தியின் பேரனாவார். இவரது தந்தையின் பெயர் முஹம்மத், தாயின் பெயர் ஆயிஷா.
• இவர் ஓர் உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை வழிப் பரம்பரை அபூபக்கர் (ரழி) அவர்களையும் தாய்வழிப் பரம்பரை ஹூஸைன் (ரழி) அவர்களையும் சென்றடைகின்றது.
• ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்கள் தனது உயர்கல்வியை உஸ்மானிய கிலாபத்தின் கீழ் பூர்த்தி செய்தார். பின் முதலாம் உலக மகா யுத்தத்திலும் சுதந்திரப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். கிரேக்கர்களுடன் போரிட்டு கைதியாக இரு வருடங்கள் சிறைபிடிக்கப்பட்டார்.
• அதன் பின் எட்டு வருடங்கள் இஸ்பார்த்தாவில் தொழில் முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் தனக்குரிய இமாம் ஒருவரை தேடிக்கொண்டிருந்தார். 1931ல் இஸ்பார்த்தாவுக்கு நாடுகடத்தப்பட்ட இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்களின் அறிமுகம் கிடைக்கின்றது.
• பின்னர் இமாமவர்களிடமிருந்து கற்று தனது அறிவுத் தாகத்தை தீர்க்கின்றார்கள். இருவருக்குமிடையில் கடிதத் தொடர்பும் வலுப்பெறுகின்றது. தனது தொழிலை கைவிட்டுவிட்டு இமாம் பதீஉஸ் ஸமான் அவர்களின் வழிகாட்டலின் கீழ் அவரது சிந்தனைகளைப் பரப்பும் முழுநேர ஊழியராக மாறுகின்றார்.
• இமாமவர்களின் ஆக்கங்களை தனது அழகிய கையெழுத்தால் பிரதிசெய்து நாடுபூராகவும் பரப்பினார். பல தடைவ இராணுவத்தால் இவரது வீடு சோதனையிடப்பட்டது. சில போது அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.
• ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்கள் ரஸாஇலுந் நூரை துருக்கியின் நாலா புறங்களிலும் பரப்புவதில் தனது முப்பது ஆண்டுகளை செலவழித்து தஃவாப் பணியில் மும்முரமாக ஈடுபட்டதன் மூலம் இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்களின் நேசத்தையும் கௌரவத்தையும் பெற்றார்கள்.
• இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: 'ஹுஸ்ரவ் துருக்கி மக்களின் மானசீக வீரரும் இந்த நாட்டின் பாதுகாவலுரும் துருக்கி மக்கள் பெருமைப்படும் தியாகியும் ஆவார்' மேலும் 'எனக்கு நாற்பது உயிர்கள் இருந்தாலும் அவற்றை நான் அவருக்காக அர்பணிப்பேன் '
• ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்களுக்கென இமாமவர்களிடமிருந்த மதிப்பையும் அடுத்த தலைமைத்துவப் பொறுப்பை சுமக்கும் தகைமையையும் கண்ட இஸ்லாத்தின் எதிரிகள் அவர் மீது போலிக் குற்றங்களைச் சுமத்தி நூர்ஸிய மாணவர்களிடமிருந்து அவரை தூரப்படுத்தும் கைங்கரியத்தை சூட்சுமமாக மேற்கொண்டார்கள். இதனை அறிந்து கொண்ட இமாமவர்கள் 'அவரிடம் ஆயிரம் தவறுகள் இருந்தாலும் அவருக்கெதிராக செயற்பட அஞ்சுகின்றேன். அவருக்கெதிராக செயற்படுவது நான் எனக்கெதிராகவும் ரஸாஇலுந் நூருக்கெதிராகவும் செயற்படுவதைப் போன்றது. மேலும் அது எமக்கு அநீதியிழைத்தோருக்கு வக்காலத்து வாங்கும் மாபெரும் துரோகச் செயலாகும்' எனக் குறிப்பிடுகின்றார்கள்.
• இவ்வாறு ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்கள் இமாம் பதீஉஸ் ஸமான் அவர்களின் மிக நெருங்கிய மாணவராக இருந்தார். அவர் உயிர் வாழும் காலத்திலேயே அவரது இஹ்லாஸ் மற்றும் அறிவு முதிர்ச்சி என்பவற்றால் நூர்ஸிய மாணவர்களால் 'இரண்டாம் ஆசான்' எனவும் அழைக்கப்பட்டார்.
• இமாம் பதீஉஸ் ஸமான் அவர்களின் வேண்டுகோலுக்கு இணங்க 'முஸ்ஹப் தவாபுகாத்' எனும் குர்ஆனின் அற்புதக் கோர்வையை தொகுத்து இமாமின் அங்கீகாரத்தையும் பெற்றார். 'இத்தகையதொரு முஸ்ஹபை ஸஹாபாக்களது காலம் முதல் இன்று வரை எவரும் தொகுக்கவில்லை' என இமாம் பதீஉஸ் ஸமான் அவர்கள் புகழ்ந்து குறிப்பிடுகின்றார்கள்.
• 1974ல் ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்கள் 'வக்புல் ஹைராத்' எனும் நிறுவனத்தை ஸ்தாபிக்கின்றார். அதன் மூலம் நூர்ஸிய சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்பினார். 77 வருட வாழ்வில் 46 வருடங்கள் இஸ்லாமிய சிந்தனையை காப்பதிலும் வளர்ப்பதிலும் பாடுபட்டார். 1977ல் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றார்கள்.
• அவரின் பின் நூர்ஸிய சிந்தனைகளைப் பாதுகத்துப் பரப்பும் பொறுப்பு இமாம் பதீஉஸ் ஸமான் அவர்களின் மாணவர்களில் ஒருவரான 'ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி' அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அல்லாஹ் இவர்களது பணியை ஏற்று அங்கீகரிப்பானாக!


