ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி
NAVIGATION
3. Page
ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி
• ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி அவர்கள் இஸ்பார்த்தாவிலுள்ள 'கல்துஉனு' எனும் கிராமத்தில் 1937ல் பிறந்தார். அவரது தந்தை ஹாபிழ் முஸ்தபா அவர்கள் 'ஆறு தூண்கள்' என அழைக்கப்படுகின்ற இமாம் நூர்ஸி அவர்களின் மிக நெருங்கிய ஆறு மாணவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.
• 'கல்துஉனு' எனும் பகுதி இமாம் நூர்ஸி அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ரஸாஇலுந்நூர் பிரதிசெய்யப்பட்டு துருக்கி பூராகவும் பரப்பப்பட்ட மிக முக்கிய கேந்திர நிலையங்களில் ஒன்றாகும். ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி அவர்கள் தனது சிறுபராயம் முதலே இத்தகு சூழலிலேயே வளர்ந்து வந்தார்.
• ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி அவர்கள் பிறந்தவுடன் அவரது தந்தை அவருக்கு 'ஸஈத் நூர்ஸி' என பெயர்சூட்ட விரும்பினார். எனினும் இமாமவர்கள் அவரது பெயரை 'ஸஈத் நூரி' என மாற்றுகின்றார். இதன் மூலம் இவர்களுக்கும் ரஸாஇலுந் நூருக்கும் இடையே இருந்த பலமான உறவை இமாமவர்களே 'அமீர்தாஃ பின்னிணைப்பு' எனும் நூலில் விளக்கியுள்ளார்கள்.
• ஷெய்க் ஸஈத் நூரி அவர்கள் சிறுபராயத்திலேயே தனது தந்தையின் பராமரிப்பின் கீழ் அறிவு பெற்று குர்ஆனையும் மனனம் செய்கின்றார்கள். பின்னர் ஏனைய ஷெய்க்மார்களிடம் அறிவுத்தாகம் தீர்க்கின்றார்கள். தனது பன்னிரெண்டாம் வயதில் தந்தையுடன் 'அப்யூன்' மாநிலத்தில் இமாம் நூர்ஸிக்கெதிரான நீதிமன்ற விசாரனையை நேரடியாகக் கண்டு இமாமவர்களின் ஆசிர்வாதத்தையும் துஆவையும் பெறுகின்றார்கள்.
• ஷெய்க் ஸஈத் நூரி அவர்கள் சிறுபராயத்திலேயே ரஸாஇலுந் நூரை பரப்பும் பணியில் அனைத்து சிரமங்களையும் சகித்துக் கொண்டார்கள். இப்பாதையில் தனது தந்தை சொல்லென்னா துன்பங்களுக்கு ஆளாகி கைதுசெய்யப்பட்ட போதும் இறையடிசேர்ந்த போதும் அழகிய பொறுமையைக் கடைபிடித்தார்கள். அவரது தாய் இப்பாதையில் கணவனுக்கு துணையாக நின்று தனது பிள்ளைகளை சீராக வளர்த்தெடுப்பதில் பல சிரமங்களைப் பொருத்துக்கொண்டாள்.
• 1950ம் ஆண்டு அவரது தந்தை மரணித்த போது தந்தை வழிநின்று இப்பணியை மும்முரமாக நிறைவேற்றி வந்தார்கள். இமாம் நூர்ஸி இஸ்பார்த்தாவில் தங்கியிருந்த போது அடிக்கடி அவரை சந்தித்து அறிவும் ஆலோசனையும் பெறுவதை வழக்கப்படுத்திக் கொண்டார்.
• 1958ல் ஷெய்க் ஸஈத் நூரி அவர்கள் அரச இராணுவப் பயிற்சிக்குப் புறப்பட ஆசிர்வாதம் பெற இமாம் ஸஈத் நூர்ஸி அவர்களை இறுதியாக சந்தித்தார்கள். 'ஹாபிழ் ஸஈத்! நீ பயிற்சி பெற்று திரும்பியதன் பின்னர் உன்னை தஃவாப் பணியில் எனக்கு அருகாமையில் கொண்டுவருவேன்' என உபதேசம் செய்கின்றார்கள்.
• 1960ம் ஆண்டு இமாம் நூர்ஸி அவர்களின் மரணத்தை செவியேற்று பயற்சியிலிருந்து திரும்பிய ஷெய்க் ஸஈத் நூரி அவர்கள் இஸ்பார்த்தாவில் அறபு மொழியையும் குர்ஆனையும் கற்பதில் அதிக நேரத்தை செலவிட்டார்கள்.
• பின்னர், இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி அவர்களின் பின் தலைமைத்துவப் பதவியைப் பொறுப்பேற்ற ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்களின் தஃவாப் பணியில் பக்கபலமாக செயற்பட்டு வந்தார். பதினைந்து வருடங்கள் ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்களின் தலைமையில் கூட்டாக தஃவாப்பணியை மேற்கொண்டார்கள்.
• இஸ்பார்த்தாவிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் உரைகளை நிகழ்த்தினார்கள், பாடங்களை நடத்தினார்கள், புதிய நிலையங்களை உருவாக்கி பல மாணவர்களை உருவாக்கினார்கள். இதனால் ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்களின் மிக நெருங்கிய மாணவராகவும் ஆலோசகராகவும் நண்பராகவும் பிள்ளையாகவும் கணிக்கப்பட்டார்.
• 1964ம் ஆண்டு ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் மற்றும் ஷெய்க் ஸஈத் நூரி ஆகியோர் தமது தஃவாப் பணியின் விளைவாக ஆறுமாதம் இஸ்பார்த்தாவிலும் (1971-1974) மூன்று வருடங்கள் அஸ்கிஷஹ்ரிலும் சிறைவாசகம் அனுபவித்தார்கள்.
• 1974ம் ஆண்டு ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்கள் 'வக்புல் ஹைராத்' நிறுவனத்தை இஸ்தன்பூலில் நிறுவி மீண்டும் தமது பணியைத் தொடர்ந்தார்கள். அதில் ஷெய்க் ஸஈத் நூரி அவர்களும் தோழர்களும் இணைந்து முழுமையான பங்களிப்பை வழங்கினார்கள்.
• ஷெய்க் அஹ்மத் ஹுஸ்ரவ் அவர்கள் மரணிக்க முன் ஷெய்க் ஸஈத் நூரி அவர்களை அழைத்து 'வக்புல் ஹைராத்'இன் பணியையும் ரஸாஇலுந் நூரின் தலைமைப் பொறுப்பையும் எழுத்துவடிவில் அவரிடம் ஒப்படைத்தார். பின்னர் 1977ம் ஆண்டு இறையடி எய்துகின்றார்கள். 1977 முதல் இன்று வரை அதன் மூன்றாவது தலைவராக ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி அவர்கள் கருதப்படுகின்றார்கள்.
• இக்காலத்தில் ரஸாஇலுந் நூரின் வளர்ச்சி, பரவல் குறிப்பிடத்தக்கதொன்றாகும். அதன் அடிப்படையிலிருந்து சிறிதும் விலகாது இன்னும் தூய வடிவில் அதன் பணி தொடர்கின்றது. நாட்டின் நாலா புறங்களிலும் குர்ஆனிய எழுத்துக்களை பேணிப்பாதுகாத்த வண்ணம் பல கிளை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு இளைய தலைமுறையினர் குர்ஆனிய பணியை சுமந்தவர்களாக உருவாக்கப்படடுகின்றனர்.
• ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி அவர்கள் அனைத்து சோதனைகளையும் சவால்களையும் முறியடித்து வெற்றிகரமாக இப்பணியை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அன்னார் பணிவும் அடக்கமும் விடாமுயற்சியும் கொண்டவர், ஆராவாரமற்றவர். இக்காலத்தில் இஸ்தன்பூலிலும் இஸ்பார்த்தாவிலும் பாரிய பதிப்பகம் ஒன்றை நிறுவி ரஸாஇலுந்நூரும், முஸ்ஹபுத் தவாபுகாதும் அதன் மூலவடிவிலேயே அச்சிடப்பட்டு நாடுபூராகம் விநியோகிக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது.
• தற்போது இப்பணி நாடுகடந்த தனது பயணத்தை தொடர்ந்துள்ளது. சுடான், எகிப்து, நைஜர், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனாசியா போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் அமெரிக்கா, பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ், ஒல்லாந்து போன்ற மேற்கு நாடுகளிலும் கிளை நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டு 'ரஸாஇலுந் நூர்' மொழிபெயர்க்கப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றது.
• குறிப்பாக மிக அண்மிய காலத்தில் 'ரஸாஇலுன் நூர்' மூலமொழியுடன் பிசகாத வகையில் அரபுக்கு மொழிபெயர்க்கப்பட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
• ஷெய்க் ஹாபிழ் ஸஈத் நூரி அவர்கள் இஸ்தன்பூல், ஸ்பார்த்தா ஆகிய நகரங்களை தமது உத்தியோகபூர்வ தலைமையகமாகக் கொண்டு நாடுபூராகவும் தனது பணியை செவ்வனே நிறைவேற்றி வருகின்றார்.


