உஸ்தாத் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி (ரஹ்)
NAVIGATION
1. Page
இஸ்லாமிய உம்மத் ஈன்றெடுத்த ஓர் அரும் சொத்து
உஸ்தாத் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி (ரஹ்)
• உஸ்மானிய கிலாபத்தின் இறுதிக் காலத்தில் துருக்கியில் தோன்றிய மாபெரும் அபூர்வ ஆளுமை இமாம் பதீஉஸ் ஸமான் ஸஈத் நூர்ஸி (ரஹ்) அவர்கள். கி.பி 1877ம் ஆண்டு பிறந்த இமாமவர்கள் 1960 ஆண்டு வரையிலான 84 வருட வாழ்வை அறிவு தேடுவதிலும், ஜிஹாதிலும், கற்பித்தலிலும், தனது சீடர்களைப் பயிற்றுவிப்பதிலும் செலவழித்தார்கள்.
• இமாமவர்கள் தனது கூர்மையான விவேகத்தால் உஸ்மானிய சாம்ராஜ்யத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த 15 வருட கற்கை நெறியை மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்தார்கள். இமாமவர்கள் தனது பதினான்கு வயதிலேயே அறிவிலும் வாதத் திறமையிலும் கலந்துரையாடல் முறையிலும் துருக்கிய அறிஞர்கள் மத்தியில் பெரும் கௌரவத்தையும் புகழையும் பெற்றிருந்தார்கள்.
• கேட்போர் வியக்கத்தகு அபாற ஆற்றல்களையும், ஆளுமைகளையும், மனன சக்தியையும், வாதத் திறமையையும், சிந்தனா பலத்தையும் இமாமவர்கள் பெற்றிருந்தார்கள். முழுக் குர்ஆனையும் வெறும் இரண்டு வாரங்களில் மனனம் செய்து முடித்தார்கள். சிறுபராயத்திலேயே பல்வேறு கலைகளுடன் தொடர்புபட்ட 90க்கும் மேற்பட்ட இஸ்லாத்தின் மூலாதார நூல்களை வாசித்து, கிரகித்துக் கொண்டது மாத்திரமன்றி அவற்றை மனனமும் செய்து கொண்டார்கள். இதனால் இமாமவர்கள் தனது ஆசான் 'முல்லா பத்ஹூல்லா' அவர்களால் 'பதீஉஸ் ஸமான்' - காலத்தின் அற்புதம் என அழைக்கப்பட்டார்.
• அவர் அரபு, பாரசீகம், துருக்கி, குர்திஷ் ஆகிய மொழிகளில் விற்பன்னராகத் திகழ்ந்தார். தனது புத்தகங்களை துருக்கி மொழியிலேயே எழுதியதோடு மூன்று முக்கிய புத்தகங்களை அரபு மொழியிலும் எழுதியுள்ளார்.
• மேற்கின் தத்துவக் கலைகளை துறைபோக, ஆழமாகக் கற்ற இமாமவர்கள் தனது நூல்களிலே குர்ஆனிய சிந்தனைக்கும் மேற்கின் தத்துவத்திற்கும் மத்தியில் நுணுக்கமான ஒப்பீட்டாய்வை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் மேற்கின் போலி முகங்களை தோலுறித்துக் காட்டியுள்ளார்.
• இஸ்லாமிய கலைஞானத்துடன் நவீன விஞ்ஞான கலைகளையும் கூடிய ஈடுபாடுடன் அவர் கற்றார். ஏனெனில் இஸ்லாமிய சிந்தனையை மனித மனங்களில் பகுத்தறிவின் திருப்தியுடன் ஆழமாகப் பதிய வைக்க நவீன விஞ்ஞானக் கலைகளின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருந்தார். இஸ்லாமிய கலைகளையும் நவீன விஞ்ஞானக் கலைகளையும் ஒருசேர கற்பிப்பதற்காக 'ஜாமிஅதுஸ் ஸஹ்ரா' எனும் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்காக இமாமவர்கள் அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டும் இறுதியில் அது கைகூடவில்லை.
• மறுபுறத்தில் இயற்கை, பௌதீகம், சடவாதம் போன்ற நாஸ்திக தத்துவங்களை மிகப் பலமான ஆதாரங்களைக் கொண்டு தவிடு பொடியாக்குகின்றார். அவர் தனது முழு முயற்சியையும் இஸ்லாமிய உலகில் குர்ஆன், சுன்னா ஒளியில் உறுதியும் உயிரோட்டமும் உள்ள ஈமானைக் கட்டியெழுப்புவதில் செலவழித்தார்.
• 1ம் உலக மகா யுத்தத்தில் இஸ்லாமிய கிலாபத்தின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக இமாமவர்கள் தனது மாணவர்களுடன் இணைந்து ரஷியர்களுக்கெதிராக 'ஜிஹாத்' புரிந்தார்கள். பின்னர் அவர்களிடமே கைதியாகப் பிடிபட்டு வட ரஷியாவிலுள்ள 'கஸ்தர்ம' நகரில் இரு வருடங்கள் சிறைவாசகம் அனுபவித்தார்கள்.
• உஸ்மானிய கிலாபத்தை வீழ்ச்சியடையச் செய்து துருக்கியில் உருவான கமாலிய மதச்சார்பின்மை அரசின் அராஐகத்துக்கு மத்தியில் இமாமவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும் சிறைச்சாலையில் அல்லது நாடுகடத்தப்பட்ட நிலையிலேயே கழித்தார்கள். எனினும் இமாமவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் மாணவர்களும் அவரைப் புடைசூழ்ந்து கொண்டனர். இதனால் சிறைச்சாலை 'யூஸுபின் பள்ளிக் கூடம்' ஆக மாறியது.
• நவீன மதச்சார்பற்ற அரசுக்கு பெரும் சவாலாக விளங்கிய 'இஸ்லாமிய இயக்கத்தை' துருக்கியில் முதன் முதலில் இமாமவர்களே உருவாக்கினார்கள். இஸ்லாத்தை மிகச் சாதாரணமாக வெளிக்காட்டினாலே பேரிழப்பை எதிர்கொள்ள வேண்டியிருந்த அச் சூழலில் இஸ்லாத்தைக் காக்க 'சிந்தனா ரீதியான ஜிஹாதில்' இமாமவர்கள் அஞ்சா நெஞ்சுடனும், துணிவுடனும் ஈடுபட்டார்கள். இப் பாதையில் அவர் எதிர்கொண்ட அனைத்துவித சோதனைகளும் வேதனைகளும் அவரை ஒருபோதும் இந்த சிந்தனாப் புரட்சியை விட்டும் திசை திருப்பவில்லை.
• இமாமவர்கள் தனது சிந்தனைகளையும் கருத்துக்களையும் மாணவர்களுக்கு மொழிய அவர்கள் அசுர வேகத்தில் அவற்றைப் பதிந்து கொண்டார்கள். இதற்கென குறித்த நேரமோ, இடமோ அவர் ஒதுக்கவில்லை. தனது அநேக நூல்களை ஒன்றில் சிறைச்சாலையில் அல்லது நாடுகடத்தப்பட்ட நிலையிலேயே எழுதினார்கள். பின்னர் அவை அவரது மாணவர்களால் கையெழுத்துப் பிரதிகளாக பிரதிசெய்யப்பட்டு மிகக் கட்சிதமான முறையில் துருக்கி பூராகவும் விநியோகிக்கப்பட்டது.
• அவரது கட்டுரைகள் உள்ளடங்கிய 14 பாகங்களைக் கொண்ட 'ரஸாஇலுன் நூர்' ஒர் மாபெரும் இஸ்லாமிய கலைக் களஞ்சியம் என்பதில் ஐயமில்லை. அது முஸ்லிம் சமூகத்தின் முக்கிய பிரச்சினைகளை வினயமிக்க தீர்வுத் திட்டங்களுடன் அதற்கே உரிய தனித்துவமான மொழிநடையில் அலசி ஆராய்கின்றது.
• சமகால முஸ்லிம் உம்மத்தைத் தொற்றியுள்ள மிகப் பெரிய நோயாக இமாமவர்கள் 'பலவீனமான ஈமான்' ஐ இனங்காட்டுகின்றார்கள். இந் நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு ஏகத்துவம், நபித்துவம், மறுமை போன்ற ஈமானின் அடிப்படைகள், யதார்த்தங்களை இஸ்லாத்தின் பரம எதிரியும் வாயடைத்தும் போகும் வகையில் பலமான ஆதாரங்களுடன் நிறுவுகின்றார்.
• இவ்வாறு தொகுக்கப்பட்ட நூலே 'ரஸாஇலுந் நூர்' ஆகும். அதனை வாசிக்கும் எவரும் இமாமவர்களின் எழுத்துக்களில் குர்ஆன் வசனங்களின் கருத்துக்கள் இழையோடியிருப்பதை அவதானிப்பார்கள். இதனாலே 'ரஸாஇலுந் நூர்' குர்ஆனுடைய யதார்த்தங்களுக்கான கருத்தியல் விரிவுரையாகக் -தப்ஸீர்- கருதப்படுகின்றது.
• இமாமவர்கள் சிறையில் தனது வாழ்வைக் கழித்தாலும் அவரது சிந்தனைகளும், கருத்துக்களும் மக்கள் மனங்களில் பதிவதை விட்டும் எதிரிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. போலிக் குற்றச்சாட்டின் பெயரில் எண்ணற்ற தடவைகள் இமாமவர்கள் நீதி மன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும் அன்னாரின் வாதத் திறமையால் அக்குற்றங்களை எதிரிகளால் நிறுவ முடியவில்லை. சிறைச்சாலையில் இமாமவர்களைக் கொலை செய்வதற்காக இருபதுக்கு மேற்பட்ட தடவைகள் நஞ்சூட்டப்பட்டிருக்கின்றார்கள். அல்லாஹ் தனது நோக்கம் -தவணை- நிறைவேறும் வரை அன்னாரின் உயிரைப் பாதுகாத்தான்.
• இமாமவர்கள் தனது இறுதி மூச்சுவரை எதிரிகளின் சதிவலைக்கும் சோதனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உட்பட்டார்கள். 1960ம் ஆண்டு இமாமவர்கள் தனது 84ம் வயதில் இவ்வுலகுக்குப் பிரியாவிடை அளித்தார்கள். அன்னார் அடக்கப்பட்டு இரண்டு மாதங்களின் பின்னர் துருக்கியில் ஏற்பட்ட இராணுவப் புரட்சியால் இமாமவர்களின் பூத உடல் கப்றிலிருந்து மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு இனந்தெரியாத ஓர் இடத்துக்கு நகர்த்தப்பட்டது. அல்லாஹ் அன்னாரின் பிழைகளைப் பொருத்து மேலான ஜன்னதுல் 'பிர்தௌஸ்' எனும் சுவனத்தை வழங்குவானாக!


