ஆறாம் தலைப்பு தெனிஸ்லி சிறைச்சாலையின் விளைச்சலிலிருந்து
NAVIGATION
14. Page
08. ஆறாம் தலைப்பு தெனிஸ்லி சிறைச்சாலையின் விளைச்சலிலிருந்து
ரஸாஇலுந் நூரின் அதிகமான இடங்களில் அல்லாஹ்வை ஈமான் கொள்வது பற்றிய எண்ணிலடங்கா ஆதாரங்களை முன்வைத்துள்ளோம். அத்தகைய பல்லாயிரம் ஆதாரங்களிலிருந்து ஒன்றை இங்கு சுருக்கமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கஸ்தமுனி பிரதேசத்தில் உயர்தர வகுப்பில் கற்கும் சில மாணவர்கள் என்னை சந்திக்க வந்தார்கள். அவர்கள் 'எம்மைப் படைத்தவனைப் பற்றி சொல்லித் தாருங்கள். எமது ஆசிரியர்கள் அல்லாஹ்வைப் பற்றி எதுவும் பேசுகிறார்கள் இல்லை' எனக் கூறினார்கள்.
நான் எனது கருத்துக்களை அவர்களுக்கு இவ்வாறு விளக்கினேன்:
நீங்கள் படிக்கின்ற எல்லாக் கலைகளும் தமக்குரிய மொழியில் எப்பொழுதும் அல்லாஹ்வைப் பற்றிப் பேசுகின்றன. அவனை அறிமுகப்படுத்துகின்றன. நீங்கள் ஆசிரியர்களிடமல்ல கலைகளிடம் அல்லாஹ்வைப் பற்றி வினவுங்கள், அவற்றுக்கு செவிசாயுங்கள்!! உதாரணமாக, பல மருந்துக் குப்பிகளை கொண்டுள்ள மருந்தகக் கலையில் எத்தனையோ விதமான இரசாயனப் பதார்த்தங்கள், மூலிகைகள் உள்ளடங்கியுள்ளன. அவை அற்புதமான, நுணுக்கமான அளவில் கலக்கப்பட்டுள்ளன. நிச்சயமாக அவை அபார ஆற்றல்மிக்கதொரு மருந்தகரை, இரசாயனவியலாளரை, அறிவாளியை சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறுதான் இந்தப் பூமிப் பந்தின் மருந்தகம் கண்ணியமிக்க அறிவுபடைத்தோனை –குருட்டுக் கண்களுக்குக் கூட- சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கின்றது. அவன்தான் அந்த மருந்தகத்தின் உரிமையாளன். அது நீங்கள் கற்கின்ற மருத்துவக் கலைக்கேற்ப சந்தையிலுள்ள மருந்தகத்தை விடவும் நுணுக்கத்திலும் பிரமாண்டத்திலும் மிக விரிவாகவே அதன் உரிமையாளனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. மிருகங்களையும் தாவரங்களையும் கொண்ட வனாந்தரங்களில் காணப்படும் ஆயிரத்து நானூறு வகையான மருந்து, மூலிகைகளை சந்தையிலுள்ள மருந்தகங்கள் கொண்டுள்ளன.
உதாரணமாக, சாதாரண மூலப் பொருளிலிருந்து ஆயிரக்கணக்கான பிடவைகளை நெய்கின்ற அற்புதமான தொழிற்சாலை சந்தேகமின்றி அதன் உரிமையாளன் கைதேர்ந்தவன் என்பதை சுட்டிக்காட்டுகின்றது. அவ்வாறே இந்த பூமிப் பந்தெனும் ஓடும் தெய்வீக இயந்திரத்துக்கு பல்லாயிரம் தலைகள் உண்டு. அந்த ஒவ்வொரு தலையிலும் அற்புதமான பல்லாயிரம் தொழிற்சாலைகள் உண்டு. அது நீங்கள் கற்கின்ற இயந்திரவியலுக்கேற்ப உருவாகும் மனித தொழிற்சாலையை விட பிரமிக்கத் தக்க வகையில் மிக நுணுக்கமானதும் பூரணத்துவமான அமைப்பில் அதன் உரிமையாளனை அறிமுகப்படுத்துகின்றது. ஏனையோர்களையும் விரும்பச் செய்கின்றது.
உதாரணமாக, பூரண அமைப்பிலுள்ள ஓர் உணவுக் களஞ்சியசாலையில் பல்லாயிரக்கணக்கான உணவுகள் அடுக்கடுக்காக ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்கப்படுள்ளன. நிச்சயமாக அந்தக் களஞ்சியசாலைக்கு ஓர் உரிமையாளன்; உணவுகளுக்கு ஒரு சொந்தக்காரன் இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறுதான் அருளாளனுடைய இந்தக் களஞ்சியசாலை இருபத்து நான்காயிரம் வருடத்தை கடக்கும் வட்டப்பாதையில் ஒரே ஒழுங்கில் நீந்திச் செல்கின்ற இந்த தெய்வீக கப்பலைப் போன்றது. அது பல்லயிரக்கணக்கான இனங்களையும் அவை ஒவ்வொன்றுக்கும் தேவையான விஷேட உணவுகளையும் சுமந்து கொண்டு பல பருவ காலங்களை கடந்து செல்கின்றது.
அது பல்வகைப்பட்ட பல்லாயிரக் கணக்கான உணவுகளைக் கொண்ட ஒரு பெரிய புகைவண்டியைப் போன்று வசந்த காலத்தை நிரப்புகின்றது. மாரி காலத்தில் தமது ஜீவனோபாயம் நிறைவடைந்த அப்பாவி ஜீவராசிகளுக்குத் தேவையானவற்றை கொண்டு வந்து கொடுக்கின்றது. பல்வகைப்பட்ட கருவிகளையும் பொருட்களையும் செல்வங்களையும், உணவு வகைகளையும் சுமந்து நிற்கும் இந்தக் களஞ்சிய சாலை, தெய்வீக கடை மேலே உதாரணத்துக்குக் குறிப்பிடப்பட்ட கடையை விட இந்தப் புவிப் பந்தின் சொந்தக்காரனை, நிர்வாகியை நீங்கள் கற்ற அல்லது கற்கப் போகின்ற சமையல் கலையின் அளவீடுகளுக்கேற்ப அதிகமாகவே அறிமுகப்படுத்துகின்றது. ஏனையோரையும் விரும்பச் செய்கின்றது.
15. Page
அவ்வாறே ஆயிரத்து நானூறு இனங்களைக் கொண்ட ஒரு படை, அதில் ஒவ்வொரு இனத்துக்கும் விஷேட உணவுகள், விஷேட ஆயுதங்கள், விஷேட ஆடைகள், விஷேட பயிற்றுவிப்புகள், விஷேட பணி என இருந்தால் அந்தப் படையின் தளபதி அற்புதமான தளபதியாகவே இருப்பார். அவரே ஒவ்வொரு இனத்துக்கும் தேவையான பலவகைப்பட்ட விஷேட உணவுகளையும் ஆயுதங்களையும் ஆடைகளையும் கருவிகளையும் வழங்குகின்றார். அதனை குழப்பிக்கொள்ளாமல் எவரையும் மறந்துவிடாமல் அவர் நடப்பாரெனில் இந்த இராணுவப் படையே அந்த மகத்தான தளபதியை ஆச்சரியத்தோடு சுட்டிக்காட்டுகின்றது, ஏனையோரும் அவனை விரும்பச் செய்கின்றது என்பதில் சந்தேகமில்லை. முழுமையாக இந்த உதாரணத்தில் உள்ளதைப் போன்று அல்லாஹ்வுடைய படையிலுள்ள தாவரங்கள், மிருகங்கள் போன்ற ஆயிரத்து நானூறு இனங்களும் ஏக தளபதியின் கட்டளையின் படி நடக்கின்றன. ஒவ்வொரு வசந்தத்திலும் எவரையும் மறக்காமலும் குழம்பிக் கொள்ளாமலும் மிகக் கட்சிதமான முறையில் ஒவ்வொருவருக்குமான பல்வகைப்பட்ட விஷேட ஆடைகளும் உணவுகளும் ஆயுதங்களும் பயிற்றுவிப்புக்களும் பணிகளும் ஒழுங்காக வழங்கப்படுகின்றன.
மனித படையை விட பூமியிலுள்ள பிரமாண்டமான பூரணத்துவமிக்க தெய்வீக இராணுவப் படை நீங்கள் கற்கப் போகின்ற இராணுவ கலைக்கேற்ப இந்தப் பூமியின் நிர்வாகியை, இயக்குனரை, தலைவனை அறிவுடையவர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றது. ஆச்சரியத்தோடு ஏனையோரும் துதி செய்து, புகழும் வகையில் அவனை விரும்பச் செய்கின்றது. அவ்வாறே ஓர் அபூர்வ நகரில் பல மில்லியன் மின்சார விளக்குகள் உள்ளன. அந்நகரில் பல இடங்களில் அவை சுற்றித்திரிகின்றன் அவற்றின் எரிபொருள் தீர்ந்துவிடுவதில்லை எனில் அந்த ஒளி விளக்குகளும் அவற்றின் தொழிற்சாலையும் கோசத்தோடு வாழ்த்துத் தெரிவிக்கும்: 'அவர் மின்சாரத்தைக் கொண்டு ஓடும் விளக்குகளை தயார் செய்துள்ளார்! தொழிற்சாலையை நிறுவி எரிபொருளை கொண்டுவருகின்றார்! அத்தகைய அற்புதமிகு தொழிலதிபர் வாழ்க! அபூர்வ திறமைமிக்க மின்சார இயக்குனர் வாழ்க!'
முழுமையாக இந்த உதாரணத்தில் உள்ளதைப் போன்று உலகம் எனும் இந்நகரில் நட்சத்திரங்கள் எனும் ஒளி விளக்குகள் பூமி எனும் மாளிகைக் கூரையின் கீழ் -அதில் ஒரு பகுதி பூமியை விட ஆயிரம் மடங்கு பெரிதாக இருந்தாலும்- வானியலின் கருத்துப்படி துப்பாக்கியிலிருந்து வெளியெறும் தோட்டாவை விட எழுபது மடங்கு வேகத்தில் வலம் வருகின்றன. நிச்சயமாக அவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதுமில்லை, தனது பயண ஒழுங்கை சீர்குலைப்பதுமில்லை. அவற்றின் ஒளி அணைவதுமில்லை, எரிபொருள் தீர்வதுமில்லை.
சூரியன் பூமியை விட பல மில்லியன் மடங்கு பெரியது, அது பல மில்லியன் வருடங்கள் வாழ்ந்து வருகின்றது, அது அருளாளனின் விருந்துபசார வீட்டிலுள்ள ஒரு ஒளி விளக்கு. இப்படியிருக்க நீங்கள் கற்கின்ற வானியல் கூற்றுப்படி ஒவ்வொரு நாளும் சூரியன் அணையாமல் தொடர்ந்தும் உதிப்பதற்கு பூமியிலுள்ள கடலளவு எரிபொருளும் மலையளவு கரியும் ஆயிரம் பூமியளவு விறகுக் கட்டுகளும் அவசியமாகும்!! இந்த மின்சார விளக்குகள் விறகோ, எரிபொருளோ, கரியோ இன்றி அணையாமல் ஒளிர்ந்துகொண்டிருக்கும் சூரியனையும் அதனைப் போன்ற நட்சத்திரங்களையும் ஒளிரவைத்துக்கொண்டு, எவ்வித மோதலும் ஏற்படாத வகையில் அனைத்தையும் வேகமாக இயக்கிக் கொண்டிருக்கும் சக்தியையும் வல்லமையையும் சுட்டிக் காட்டுகின்றன..... பிரபஞ்சம் எனும் இந்தப் பாரிய நகரிலுள்ள உலகம் எனும் மாளிகைக்கான அத்தகைய மின்சார விளக்குகளும் அவற்றின் நிர்வாக முறையும் நீங்கள் கற்ற அல்லது கற்கப் போகின்ற மின்சாரவியல் கலையின் அளவீடுகளுக்கேற்ப இந்தப் பிரபஞ்சத்தின் தலைவனை, இயக்குனரை, நிர்வாகியை, ஒளி வழங்குனரை அறிமுகப்படுத்துகின்றது. பக்தியோடு ஏனையோரும் துதி செய்து, புகழும் வகையில் அவனை விரும்பச் செய்கின்றது.
உதாரணமாக, இங்கே ஒரு நூல் இருக்கின்றது. அதன் ஒவ்வொரு வரியிலும் மிக நுணுக்கமான எழுத்தில் ஒரு புத்தகம் எழுதப்பட்டுள்ளது. அதன் ஒவ்வொரு வார்த்தையிலும் நுண்ணிய பேனாவின் மூலம் ஒரு குர்ஆன் ஸூரா உள்ளடக்கப்பட்டுள்ளது எனின் அதனை உருவாக்கியவர் ஆச்சரியமிக்க எழுத்தாளர் ஒருவர் என்பதில் ஐயமில்லை. நிச்சயமாக அந்த நூல் அவர் அபார ஆற்றல்களையும் திறமைகளையும் கொண்டவர் என்பதை பகலைப் போன்று தெளிவாகவே அறிமுகப்படுத்துகின்றது. அவரது திறமைகளையும் ஆற்றல்களையும் சுட்டிக்காட்டுகின்றது. அது 'மாஷா அல்லாஹ், பாரகல்லாஹ்' போன்ற வாழ்த்துக்களை அவருக்கு பெற்றுக் கொடுக்கின்றது.
முழுமையாக இந்த உதாரணத்தில் உள்ளதைப் போன்று இந்தப் பாரிய பிரபஞ்சம் எனும் புத்தகத்தில் ஒரு பேனா தொழிற்படுவதை நாம் எமது கண்களாலே தெளிவாகக் காண்கின்றோம். அப்புத்தகத்தின் ஒரு பக்கம் போன்றிருக்கும் பூமியின் மேற்பரப்பில்; முன்னூறாயிரம் மிருக, தாவர இனங்களின் உருவாக்கத்துக்கு அத்தியவசியமானதொன்றான வசந்த காலத்தில் -அவை வித்தியாசமான முன்னூராயிரம் புத்தகங்களைப் போன்றன- எவ்வித மறதியோ, தவறோ, குழப்பமோ இன்றி ஒழுங்காக அப்பேனை எழுதிக் கொண்டிருக்கின்றது. சிலபோது மரத்தைப் போன்ற ஒரு வார்த்தையில் ஒரு பாடலடியை எழுதுகின்றது. சிலபோது விதை போன்ற ஒரு புள்ளியில் மொத்தப் புத்தகத்தினதும் பொருளடக்கத்தை எழுதுகின்றது.
நிச்சயமாக பிரபஞ்சம் எனும் இந்தப் புத்தகம், அகன்ற உலகம், முடிவுறா கருத்துக்களை சொறிவதோடு அதன் ஒவ்வொரு சொல்லிலும் பாரிய சிந்தனைகளையும் அறிவு ஞானங்களையும் சுமந்துள்ள உருவப்படுத்தப்பட்ட குர்ஆன் இந்தப் பாரிய பிரபஞ்சத்தை செதுக்கியவனை, தன்னிகரற்ற அதன் எழுத்தாளனை நீங்கள் கற்கின்ற காரண காரிய அறிவுக்கும் வாசிப்பு, எழுத்துக் கலைகளுக்கும் ஏற்ப அறிமுகப்படுத்துகின்றது. 'ஸூப்ஹானல்லாஹ்' என்பதன் மூலம் அவனை அறிமுகப்படுத்தி 'அல்ஹம்துலில்லாஹ்' என்பதன் மூலம் அவனை விரும்பச் செய்கின்றது. இந்தக் கலைகளைப் போன்றே பிற நூற்றுக்கணக்கான கலைகள் ஒவ்வொன்றும் இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளனை அவனது பெயர்களுடன், பண்புகளுடன், பூரணத்துவத்துடன் தொலைகாட்டியை ஒத்த விஷேட மூக்குக் கண்ணாடியின் மூலம், படிப்பினை பெரும் பார்வையால் அறிமுகப்படுத்துகின்றன.
நான் இந்த இளம் மாணவர்களுக்குக் கூறினேன்: நிச்சயமாக குர்ஆன் எமக்கு பல்வேறு இடங்களில் அடிக்கடி எம்மைப் படைத்தவனை அறிமுகப்படுத்துகின்றது. 'அவன்தான் வானங்கள் பூமியின் இரட்சகன்' 'அவனே வானங்களையும் பூமியையும் படைத்தான்' இதன் மூலம் அவன் மகத்துவமிக்க ஏகத்துவத்துக்கான ஆதாரத்தை எமக்கு கற்பிக்கவே முயற்சிக்கின்றான். அவர்கள் தமது சார்பாக என்னை முத்தமிட்டு எனது வார்த்தைகளை உண்மைப்படுத்தினார்கள். 'நாம் ஒரு ஆன்மீகப் பாடத்தைக் கற்றோம். எமது இரட்சகனுக்கு வரையறையற்ற நன்றிகள் உரித்தாகட்டும். அல்லாஹ் உங்களைப் பொருந்திக்கொள்வானாக!' என்று கூறினார்கள்.
நான் அவர்களுக்குச் சொன்னேன்:
மனிதன் பல்லாயிரக் கணக்கான இன்பங்களை சுவைக்கக்கூடிய, பல்லாயிரக் கணக்கான வேதனைகளை அனுபவிக்கக் கூடிய வாழ்வைப் பெற்ற ஓர் உயிருள்ள இயந்திரமாக இருக்கின்றான். அவன் ஓர் அப்பாவியான படைப்பு. அவன் மிகவும் பலவீனனாக இருக்க அவனுக்கு சடரீதியான மற்றும் உளசரீதியான எதிரிகள் ஏராளம்! அவன் மிகவும் ஏழ்மையானவனாக இருக்க அவனுக்கு வெளிப்படையான மற்றும் மறைமுகமான தேவைகள் முடிவற்றவை! அவன் அழிவு, பிரிவு எனும் சடரீதியான தாக்குதல்களை எதிர்கொள்கின்ற அற்ப படைப்பு. இத்தகைய நிலையில் அவன் ஈமான் மற்றும் அடிமைத்துவத்தின் மூலம் சங்கைமிகு எஜமானை சார்ந்திருப்பதால் தனது அனைத்து எதிரிகளையும் எதிர்கொள்ளத் தேவையான பலத்தையும், தனது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான உதவியையும் பெற்றுக்கொள்கின்றான்.
ஈமான் கொள்வதன் மூலம் சர்வ வல்லமையும் அருளும் கொண்ட எஜமானை சார்ந்து நின்று அவனுக்கு அடிபணிவதன் மூலம் இல்லாமை எனும் மரணப் பிரகடனத்தை, பணியை கைமாற்றுகின்ற சீட்டாக (ஏளைய) மாற்றுவதால் அவன் எவ்வளவு சந்தோசமானவனாகவும் நன்றியுடையவனாகவும் இருப்பான். ஒவ்வொருவரும் தான் சார்ந்திருக்கும் தலைவனின் கண்ணியம், மதிப்பில் பெருமை கொள்வதைப் போல இவன் நன்றி செலுத்துவதன் மூலம் எவ்வளவு பெருமை கொள்வான். இதனை ஒப்புநோக்கிப் பாருங்கள்!! நான் இந்த மாணவர்களுக்குக் கூறியதைப் போல் சிறையில் சோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கைதிகளுக்கும் மீண்டும் கூறுகின்றேன்: 'அல்லாஹ்வை அறிந்து அவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவன் -கொடூர சிறைச்சாலையில் இருந்தாலும்- சந்தோசமாக இருப்பான். அவனை மறந்து வாழ்பவன் -மாட மாளிகைகளில் வாழ்ந்தாலும் - சிறையிலும் கஷ்டத்திலுமே வாழுகின்றான்'
ஏன்! சந்தோசத்தில் வாழும் அநீதிக்குட்பட்டவனும் தனது மரணத் தறுவாயில் கஷ்டத்தில் புரழும் அநியாயக்காரர்களைப் பார்த்து இவ்வாறு கூறுவார்: 'நான் மரணிப்பதன் மூலம் இல்லாமையை நோக்கி நகரமாட்டேன். மாறாக பணியை கைமாற்றுகின்ற சீட்டைப் (ஏளைய) பெற்று சந்தோசத்தை நோக்கி நகர்கின்றேன். எனினும் நீங்கள் உங்களுக்கு நிரந்தர இல்லாமையை வழங்குவதைக் காண்பதன் மூலம் உங்களை நான் முழுமையாகப் பழிவாங்குவேன்' அவன் 'அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள் இல்லை' என்று கூறி தனது உயிரை சந்தோசமாக ஒப்படைக்கின்றான். எமதிரட்சகனே! நீ எமக்கு கற்றுத் தந்தவற்றைத் தவிர எங்களிடம் வேறு அறிவு இல்லை. நீ தூய்மையானவன். நிச்சயமாக நீ யாவற்றையும் அறிந்தவனும் ஞானமுடையவனும் ஆவாய்.


