அவன் தூய்மையானவன். அவனது பெயரைக் கொண்டே ஆரம்பிக்கின்றேன். அனைத்தும் அவனது புகழைத் துதி செய்கின்றன.

27. Page

12. அவன் தூய்மையானவன். அவனது பெயரைக் கொண்டே ஆரம்பிக்கின்றேன். அனைத்தும் அவனது புகழைத் துதி செய்கின்றன.


என்றும் எப்பொழுதும் அல்லாஹ்வின் அருளும் சாந்தியும் உங்களுக்கு உண்டாவதாக!


கண்ணியமும் விசுவாசமுமிக்க எனது சகோதரர்களே!

முதலாவது: இந்தப் பெருநாள் தினம்- ஹஜ் செய்கின்ற ரஸாஇலுந்நூரை விரும்புகின்றவர்களுக்கான பெருநாள் வாழ்த்தோடு நூர்ஸிய மாணவர்கள் அனைவருக்குமான பெருநாள் வாழ்த்தையும் சுமந்த நிலையில்- இஸ்லாமிய உலகின் மாபெரும் பெருநாளுக்கான முன்கூட்டிய வாழ்த்துச் செய்தியை எமக்கு அறிவிக்கின்றது. ஏனெனில் இந்தியா, அரபுத் தேசம் போன்ற இஸ்லாமிய உலகின் பெரிய நாடுகள் தனித்துவமான நாடுகளாக மாறிவிட்டன. அதாவது இந்தியாவில் நூறு மில்லியன் சனத்தொகையோடும், ஜாவாவில் ஐம்பது மில்லியனுக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்டும் இஸ்லாமிய நாடு உருவானது. அரபுத் தேசத்தில் நான்கு அல்லது ஐந்து அரசுகள் இஸ்லாமிய ஒன்றியத்துடன் அரபு ஒன்றியத்தில் ஐக்கிய குடியரசுகள் என்றவகையில் ஒன்றுபட்டன.

இரண்டாவது: ஸெய்யித் ரஃபத் மற்றும் இஸ்தான்பூலிலுள்ள முஸ்தபா ஓவ்ரூஜ் ஆகியோரின் தரவுகளுக்கேற்ப பாதுகாப்பு மற்றும் இராணுவ அமைச்சின் -இஸ்லாமிய படையை நீண்ட காலமாக வழிநடாத்தி பின்னர் பல்கலைக் கழகமாக மாறிய- கட்டிடத்துக்கு- முன்னால் எழுதப்பட்டிருந்த 'நிச்சயமாக நாம் உங்களுக்கு தெளிவான வெற்றியைத் தந்துள்ளோம்' 'அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்' என்ற குர்ஆன் வசனங்கள் பளிங்குக் கற்களால் மறைக்கப்பட்டு அவற்றின் பேரொளிகள் திரையிடப்பட்டுள்ளன. அவை மீண்டும் குர்ஆனுடைய எழுத்தக்களைக் கொண்டு எழுதுவதற்கான அனுமதி கிடைப்பதற்கான ஓர் முன்னுதாரணமாகவும் ரஸாஇலுந்நூர் பயணிக்கின்ற இலக்குக்கான வழிமுறையாகவும்  இந்த வசனம் மாறும் என்பதையும் அந்தப் பல்கலைக் கழகம் எதிர்காலத்தில் (நூர்ஸிய) நூரிய பாசறையாக மாறும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரபல்யமிக்க சிந்தனையாளர், மிகப் பெரும் தத்துவஞானி பிஸ்மார்க் எழுதிய நூலிலிருந்து தெனிஸ்லி நகரில் வசிக்கும் இரு நூர்ஸிய மாணவர்கள் (இருவரது பெயரும் அஹ்மத்) சுட்டிக்காட்டிய பந்தியில் பிஸ்மார்க் பின்வருமாறு குறிப்பிடகின்றார்: 'நான் பல கோணங்களில் குர்ஆனை ஆழமாக ஆராய்ந்தேன். அதன் ஒவ்வொரு வசனங்களிலும் பாரிய சிந்தனைகளைக் கண்டேன். அதற்கு நிகர் எதுவுமில்லை. அதனையன்றி வேறு எந்தப் புத்தகத்தாலும் மனித சமூகத்தை நிர்வகிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை.

அவர் நபியவர்களை முன்னிலைப்படுத்தி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: 'முஹம்மத்! நான் மிகவும் கவலைப்படுகின்றேன். நான் உங்களோடு சமகாலத்தில் வாழவில்லை. மனித சமூகம் உங்களைப் போன்ற அரிய ஆளுமையை ஒரு தடவை கண்டுவிட்டது. மீண்டும் ஒருமுறை அத்தகையதொரு ஆளுமையை காணவே மாட்டாது. இதனால் நான் உங்களுக்கு முன்னால் சங்கையோடு தலை சாய்க்கின்றேன்' என்று அதன் இறுதியில் பிஸ்மார்க் கைச்சாத்திட்டுள்ளார். இந்த வசனங்கள் எழுதப்படக் கூடாது என நான் சுட்டிக்காட்டினேன். ஏனெனில் இந்தப் பந்தி திரிபிக்குட்பட்ட, சட்டம் நீக்கப்பட்ட முன்னைய வேதங்களின் தரத்தை பாரியளவு குறைகாண்கின்றது.

இந்த மனிதன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய மிகப் பெரிய தத்துவஞானி மற்றும் மானிட சமூக அரசியல் துறையில் தோன்றிய மிக முக்கிய ஆளுமை என்பதும்; இஸ்லாமிய உலகம் இந்தளவேனும் தனது சுதந்திரத்தைப் பெறுவதும்; அந்நிய அரசாங்கங்கள் குர்ஆனிய உண்மைகளை தேடுவதும்; மேற்கிலும் வட மேற்கிலும் குர்ஆனுக்கு ஆதரவான மாபெரும் அலையொன்று உருவாகிவருவதும் சிறந்த எழுச்சி அடையாளங்களாகும். பிஸ்மார்க் கூறியதைப் போன்றே அமெரிக்க பிரபல தத்துவஞானி கார்லியல் பின்வருமாறு கூறுகின்றார்: 'ஏனைய நூல்கள் எவ்வகையிலும் குர்ஆனின் தரத்தை அடைய மாட்டாது. அதனுடைய வார்த்தை சத்தியமானது. அதற்கு நாம் செவிசாய்ப்பது அவசியமாகும்' இது தெளிவான சான்றாகும். எல்லா இடங்களிலும் 'ரஸாஇலுந் நூர்' பரவி அடைந்த வெற்றிகளும் சிறந்த சான்றாகும். நிச்சயமாக ஐரோப்பாவிலிருந்து பிஸ்மார்க், கார்லியல் போன்ற அதிகமானவர்கள் உருவாகுவார்கள். தற்போது அதற்கான அடையாளங்கள் வெளிப்பட்டுவிட்டன. நாம் இதனை ; 'ரஸாஇலுந் நூர்' ஐப் பின்பற்றுகின்றவர்களுக்கு வலுசேர்க்க இங்கு சுட்டிக்காட்டுகின்றோம். இந்தக் கடிதத்தோடு பிஸ்மார்க்கின் பந்தியையும் இணைத்து அனுப்புகின்றோம்.


அனைவருக்கும் வாழ்த்துக்கள்

அல்லாஹ்வே நித்தியன்

உங்கள் சகோதரன்

ஸஈத் நூர்ஸி