சில அப்பாவி இளைஞர்களுக்கு நான் வழங்கிய அபாய எச்சரிக்கை, விழிப்புணர்வு

6. Page

04. சில அப்பாவி இளைஞர்களுக்கு நான் வழங்கிய அபாய எச்சரிக்கை, விழிப்புணர்வு


  ஒரு நாள் கற்றறிந்த சில விவேகமிக்க இளைஞர்கள் என்னிடம் வந்தார்கள். வாழ்வில், இளமையில், ஆசாபாசங்களில் உருவாகும் அபாயங்களிலிருந்து பாதுகாப்புப் பெற தங்களுக்கு உருக்கமானதோர் உபதேசத்தை நிகழ்த்துமாறு வேண்டிக்கொண்டார்கள்.

  கடந்த காலத்தில் ரஸாஇலுந் நூரிலிருந்து விளக்கம் கேட்ட சில இளைஞர்களுக்கு நான் கூறியதையே இவர்களுக்கும் சொன்னேன்: நிச்சயமாக உங்களது இளமை ஒரு நாள் நீங்கிவிடும். நீங்கள் ஆகுமாக்கப்பட்ட வட்டத்துக்குள் அதனைக் கழிக்காவிட்டால் இளமை உங்களை விட்டும் வீணாகிவிடும். அதனுடைய இன்பங்களை விட அதிகமாக சோதனைகளும் வேதனைகளும் உலகிலும் கப்ரிலும் மறுமையிலும் உங்களைப்; பீடிக்கும். இளமை என்ற அருளுக்கு நன்றி செலுத்தும் முகமாக நீங்கள் அந்த இளமையை கற்பொழுக்கத்திலும் பாதுகாப்பிலும் கட்டுப்பாட்டிலும் கழித்தால் அது கருத்தியல் ரீதியில் நிலையானதாக மாறும். அது நிரந்தர இளமையைப் பெறுவதற்குக் காரணமாக இருக்கும்.

  வாழ்வைப் பொறுத்தவரையில் அதில் ஈமான் இருக்காவிட்டால் அல்லது பாவத்தால் அது கலங்கப்படாதிருந்தால் நிச்சயமாக அது மிகச் சிறிய வெளிப்படையான இன்பத்தையே அனந்தரமாக வழங்கினாலும் அந்த இன்பங்களைவிட பல்லாயிரம் மடங்கு அதிகமான கவலைகளையும் நோவினைகளையுமே மனிதனுக்கு வழங்கும். ஏனெனில் மனிதன் -மிருகத்தைப் போன்றவன் அல்ல, நிகழ்காலம் ஒருபுறமிருக்க இறந்த காலத்துடனும் எதிர்காலத்துடனும் கூட இயல்பிலேயே தொடர்புபட்டவனாக இருக்கின்றான். ஏனெனில் அவன் அக்காலங்களில் இன்பமுறவும் கவலைகொள்ளவும் கூடிய சிந்தனையையும் பகுத்தறிவையும் சுமந்திருக்கின்றான்.

  மிருகத்தைப் பொறுத்தவரையில் அதற்கு சிந்தனா சக்தி இல்லை. இதனால் கடந்தகால கவலைகளோ எதிர்கால அச்சங்களோ அதனுடைய நிகழ்கால இன்பங்களை தொந்தரவு செய்வதில்லை.ஆனால் மனிதனைப் பொறுத்தவரையில் அவன் வழிகேட்டிலும் பொடுபோக்கிலும் வீழ்கின்றான். அவனது கடந்தகால கவலைகளும் எதிர்கால அச்சங்களும் இந்த நிகழ்கால அற்ப இன்பங்களை மிகக் கசப்பானதாக மாற்றி அவற்றை சீர்கெடுத்துவிடுகின்றது. குறிப்பாக அந்த இன்பம் ஆகுமாகாததாக இருந்தால் அது நஞ்சு கலந்த தேனைப் போன்றிருக்கும். இது வாழ்வை அனுபவிப்பதில் மிருகத்தை விட நூறு மடங்கு மனிதனை கீழே வீழ்த்தும். நிச்சயமாக வழிகேடர்களதும் பொடுபோக்காளர்களதும் வாழ்வு மட்டுமல்ல இருப்பும் கூட அவர்களது கடந்த காலங்களும் உலகங்களும் இறந்தவை, இல்லாதவை. பகுத்தறிவின் மூலம் தொடர்புபட்டு நோக்குவதால் கடந்தகாலம் என்பது இருள்மயமான சூனியம். நம்பிக்கை கொள்ளாததால் எதிர்காலமும் கூட இல்லாதவை. இல்லாமையால் உருவாகும் பல்வகைப்பட்ட நிரந்தரப் பிரிவுகள் பற்றிய சிந்தனைகள் எப்பொழுதும் இருள்களை அனந்தரமாக வழங்குகின்றன.

ஈமான் வாழ்க்கைக்கு ஓர் உயிரோட்டத்தை வழங்குகின்றது. அப்பொழுது ஈமானின் ஒளியால் கடந்தகாலமும் எதிர்காலமும் ஒளிபெற்று இருப்பைப் பெறுகின்றது. அதனைப் போன்றே மனித ஆன்மாவுக்கும் உள்ளத்துக்கும் வெளிச்சங்களையும் உயர்ந்த மானசீக இன்பங்களையும் அது வழங்குகின்றது. இதனைப் பற்றிய விரிவான விளக்கம் 'முதியோர்கள்' எனும் கட்டுரையின் ஏழாம் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. வாழ்க்கை இவ்வாறுதான். நீங்கள் வாழ்வின் இன்பங்களை சுவைக்க விரும்பினால் உங்ககளது வாழ்வை ஈமானால் உயிரூட்டுங்கள். கடமையான வணக்கங்களால் அதனை அழகுபடுத்துங்கள். பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பதன் மூலம் அதனைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொழுதிலும் காண்கின்ற பயங்கர மரணத்தின் நிலை குறித்து ஏனைய இளைஞர்களுக்கு விளக்கியதைப் போல் உங்களுக்கும் ஒரு உதாரணத்தின் மூலம் நான் விளக்க முனைகின்றேன். உதாரணமாக எமது கண்களுக்கு முன்னால் தூக்கு மேடை நடப்பட்டுள்ளது. அதற்கு அருகாமையில் அதிர்ஷ்டச் சீட்டிழுப்பு உள்ளது. அது மிகப் பெரும் வெற்றிப்பரிசுகளை ஈட்டித்தரவல்லது. நாங்கள் பத்துப் பேர் விரும்பியோ வெறுத்தோ அங்கே அழைக்கப்படுவோம். எப்பொழுதும் எக்கணமும் அவர்கள் எங்களை அழைப்பார்கள்.

எமது பெயர் எப்பொழுது அழைக்கப்படும் என்பதை நாம் அறியாது அத்தருணத்துக்காகக் காத்திருக்கின்றோம். அப்போது அவர்கள் கூறுவார்கள்: 'வாருங்கள் தூக்குக்கான கடவுச்சீட்டைப் பெற்றுக்கெண்டு தூக்கு மேடைக்கு ஏறுங்கள் அல்லது பல்லாயிரம் தங்க நாணயங்களை பெற்றுத் தரும் பரிசுச் சீட்டைப் பெற்றுக்கொள்ளுங்கள்.' அப்போது இரு மனிதர்கள் கதவின் அருகாமைக்கு வந்தார்கள். அவர்களில் ஒருவர் அரைகுறை ஆடை அணிந்த, தந்திரகார அழகிய மங்கை, அவளுடைய கையில் வெளித்தோற்றத்தில் அருசுவையான இனிப்புப் பண்டம். ஆனால் அதில் நஞ்சு தடவப்பட்டுள்ளது. அவள் அதனை எமக்கு ஊட்டிவிடப்பார்க்கின்றாள். அடுத்தவர் அந்தப் பெண்னைத் தொடர்ந்து நுழைந்த ஒரு மனிதர். அவர் ஏமாற்றாத, ஏமாறாத ஒரு சங்கையானவர். அவர் சொன்னார்: நான் உங்களுக்கு ஒரு மருந்தும் ஒரு பாடமும் கொண்டுவந்திருக்கின்றேன். நீங்கள் அதனை வாசித்தால் அந்த இனிப்புப் பண்டத்தை சாப்பிடாது இருந்தால் இந்தத் தூக்கு மேடையிலிருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.

தன்னிகரற்ற அந்தப் பரிசுச் சீட்டையும் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் இந்தத் தூக்குக் கயிறை காண்கின்றீர்கள். யார் அந்தத் தேனை சாப்பிடுகின்றாரோ அவர் அதில் நுழைவதையும் காண்கின்றீர்கள். அவர் அதில் நுழையும் வரை அந்த இனிப்புப் பண்டத்திலுள்ள நஞ்சின் காரணமாக கடும் வயிற்று வலியை உணருவார். ஆனால் யாரெல்லாம் அந்த மாபெரும் பரிசுச் சீட்டைப் பெற்றுக்கொள்கின்றார்களோ அவர்கள் இந்த நோவினை அனுபவிக்கமாட்டார்கள். அவர்களும் வெளிப்படையில் தூக்கு மேடைக்கு ஏறுவதைப் போன்றுதான் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் தூக்கிலிடப்படுவதில்லை என பலர் சான்றுபகர்கின்றார்கள். மாறாக அவர்களுக்கு அங்கே தூக்கு மேடை படிக்கட்டுக்களாகவே இருக்கும். அதனூடாக அவர்கள் தமது பரிசை இலகுவாக பெற்றுக்கொள்ளவதற்கே ஏறுவார்கள். இதோ இந்த யன்னலினூடாக அவதானியுங்கள்! இந்த விடயத்துடன் தொடர்புடையவர்கள், மூத்த பணியாட்கள் அனைவரும் பிரகடனப்படுத்துகின்றார்கள் 'உறுதியாக சந்தேகமின்றி அறிந்துகொள்ளுங்கள் உங்களது பார்வையில் தூக்கு மேடை ஏறும் இத்தகையவர்கள் -இந்த பரிசுச் சீட்டை பெற்றுக்கொண்டவர்கள்- அவர்கள் தான் அந்த மருந்தை சொந்தமாக்கிக் கொண்டவர்கள்.

  இந்த உதாரணத்தில் உள்ளதைப் போல் நஞ்சு தடவப்பட்ட தேனைப் போன்று இளமையின் அற்ப இன்பங்கள் தடுக்கப்பட்ட வட்டத்தினுல் உள்ளடங்குகின்றன. ஏனெனில் அவை –நிரந்தர இன்பத்துக்கும் அருட்கடாட்சத்துக்கும் அழைத்துச்செல்லக்கூடிய ஆவணமாகவும் பயணச்சீட்டாகவும் உள்ள- ஈமானை இழக்கச் செய்துவிடும். நிச்சயமாக அந்த அற்ப இன்பங்கள் 'தூக்குக் கயிறை'ப் போன்றிருக்கும் மரண வேதனையில் வீழ்த்தும். நேரடி சான்றாக இருக்கும் 'நிரந்தர இருளான' கப்றில் உன்னை நுழைவிக்கும். ஏனெனில் உனது தவணை மறைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் உனது தலைகளை கொய்துவிட தவணை எனும் சண்டாளன் வரமுடியும். அவனுக்கு இளைஞர், முதியவர் என்ற பாகுபாடு கிடையாது.


7. Page

மனிதன் நஞ்சு தடவப்பட்ட தேனைப் போன்ற தடுக்கப்பட்ட தனது மனோ இச்சைகளையும் ஆசாபாசங்களையும் விட்டுவிட்டு, குர்ஆனிய அருமருந்தான ஈமானையும் பர்ளான கடமைகளையும் பற்றிப்பிடித்தால் -ஆச்சரியமான முறையில் சீட்டிழுப்பின் மூலம்- அவன் நிரந்தர சந்தோசப் பயணத்துக்கான பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்வான். இதனை எண்ணிலடங்கா இறை நேசர்களும், ஆதாரங்களுடன் ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களுடன் ஏகோபித்த வகையில் கூறுகின்றார்கள். அதன் விளைவுகளை எடுத்துக்கூறுகின்றார்கள்.

  முடிவு: இளமை நிரந்தரமற்றது, அழியக்கூடியது. ஒருவன் தனது இளமையை வீணான காரியங்களில், பாவங்களில் கழித்தால் அவன் பல்வகையான துன்பங்களையும் வேதனைகளையும் இவ்வுலகிலும் மறுமையிலும் அனுபவிப்பான். அதிகமான இளைஞர்கள் வீண்விரயங்கள், தவறான பயன்பாடுகளின் விளைவாக உருவாகும் ஊகங்களைக் கொண்ட நோயின் காரணமாக வைத்தியசாலைகளில் அல்லது சிறைச்சாலைகளில் நுழைகின்றார்கள். மேலும் தட்டுத்தடுமாறி கேடுவிளைவிக்கக் கூடிய வீடுகளில் அல்லது மானசீக வேதனைகளால் உருவாகும் சோர்வு நிலை, நெருக்கடிகளால் மதுபானசாலைகளில் நுழைகின்றார்கள். இதனை நீங்கள் தெளிவாக அறிந்து புரிந்துகொள்ள விரும்பினால் வைத்தியசாலைகளிலும் சிறைச்சாலைகளிலும் மையவாடிகளிலும் கேட்டுப்பாருங்கள்.

இளமையின் உத்வேகத்தாலும் இளமைப்பருவத்தை பிழையாகப் பயன்படுத்தியாலும் எல்லைமீறி வீணாக செயற்பட்டதாலும் பீடித்த நோய்களிலிருந்து மேலெழும் முணுமுணுப்புக்களையும் கைசேதங்களையுமே பெரும்பாலும் நீங்கள் வைத்தியசாலைகளிலிருந்து செவிமடுப்பீர்கள் என்பதில் ஐயமில்லை. அவ்வாறே நீங்கள் இளமையின் கெடுபிடியால் ஆகாத செயற்பாடுகளை வீரமாகச் செய்த அப்பாவி இளைஞர்களின் கைசேதத்தையும் கவலையையும் சிறைச்சாலையிலிருந்தும் பெரும்பாலும் செவிமடுப்பீர்கள். அவ்வாறே தினமும் தனது வாயிலை திறந்து மூடிக்கொண்டிருக்கும் கப்ருடைய வாழ்விலும் அதிக வேதனை இளமையை வீணான பாவங்களில் பயன்படுத்தியோருக்கே கிடைக்கும் என்பதை நீங்கள் செவிமடுப்பீர்கள். இதற்கு துறைசார்ந்த சான்றோரின் சாட்சிகள் போதுமானவையாகும்.

மனித இனத்தில் பெரும்பான்மையானோரான முதியோரிடமும் நோயாளிகளிடமும் கேட்டுப்பாருங்கள். அவர்களில் பெரும்பான்மையானோர் 'நிச்சயமாக நாம் எமது இளமையயை எவ்விதப் பிரயோசனமுமின்றி வீணாக்கிவிட்டோம், அதனை பெரும் நஷ்டத்தையும் கெடுதிகளையும் கொண்டு பாழ்படுத்திவிட்டோம், எங்களைப் போல் நீங்களும் ஆகிவிட வேண்டாம்' என மிகக் கவலையோடு கூறுவார்கள் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஐந்து அல்லது பத்து வருடங்களைக் கொண்ட இளமையை தகாத காரியங்களை அனுபவிப்பதற்காக வேண்டி உலகத்தில் கஷ்டத்தையும் கவலையையும் சுமந்த மனிதன், கப்ரில் வேதனையை எதிர்கொண்ட மனிதன், மறுமையில் நரகின் தண்டனையை எதிர்கொள்ளும் மனிதன் இறை அருளைப் பெற மிகவும் தேவையுடையவனாக இருந்தாலும் 'தீங்கை பொருந்திக்கொண்டவன் இரக்கம் காட்டத் தகுதியற்றவன்' என்ற கூற்றின் படி அல்லாஹ்வின் அருளைப் பெற அவன் ஒருபோதும் தகுதியுடையவனாக மாட்டான். அவன் அதன் பால் மிகவும் தேவையுடையவனாக இருந்தாலும் சரியே. ஏனெனில் அவன் தீமையால் ஏற்படும் விளைவுகளை விரும்பியே பொருந்திக்கொண்டான். அவன் அல்லாஹ்வின் அருளுக்குப் பாத்திரமானவனாக ஒருபோதும் ஆகமாட்டான்.

இந்த உலகின் கவர்ச்சிமிகு பித்னாக்களிலிருந்து அல்லாஹ் எம்மையும் உங்களையும் காப்பாற்றுவானாக!