மீள எழுப்புதல் (ஹஷ்ர்) பற்றிய முன்னுரை ஒன்பதாவது ஒளிக்கீற்று
NAVIGATION
16. Page
09. மீள எழுப்புதல் (ஹஷ்ர்) பற்றிய முன்னுரை ஒன்பதாவது ஒளிக்கீற்று
'(முஃமின்களே!) நீங்கள் மாலையி(லாகும் பொழுதி)லும், நீங்கள் காலையி(லாகும் பொழுதி)லும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள். இன்னும் வானங்களிலும், பூமியிலும். அவனுக்கே புகழனைத்தும்.
இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலாகும் பொழுதும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்). அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.
மேலும், அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்.
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுவதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும். உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும். உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றறிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.
இன்னும், இரவிலும் பகலிலும், உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும். அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும். பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை - அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. வானமும், பூமியும் அவனுடைய கட்டளையினால் நிலைபெற்று நிற்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன. பின்னர் ஓர் அழைப்பைக் கொண்டு உங்களை அழைத்த உடன் நீங்கள், பூமியிலிருந்து வெளிப்பட்டு வருவீர்கள். வானங்களிலும் பூமியிலும் இருப்பவை எல்லாம் அவனுக்கே உரியவை - எல்லாம் அவனுக்கே கீழ்ப்படிந்து நடக்கின்றன.
அவனே படைப்பைத் துவங்குகின்றான். பின்னர் அவனே அதை மீட்டுகிறான். மேலும், இது அவனுக்கு மிகவும் எளிதேயாகும். வானங்களிலும் பூமியிலும் மிக்க உயர்ந்த பண்புகள் அவனுக்குரியதே. மேலும் அவன் மிகைத்தவன். ஞானம் மிக்கவன்.' (சூறதுர்-ரும்:17-27) ஈமானின் மிகப்பெரிய அடிப்படைகளில் ஒன்றைச் சுட்டி நிற்கின்ற இந்த இறைவசனங்களில் பொதிந்துள்ள ரகசியங்களும் அவ்வசனங்கள் கூறும் கருத்துக்களுக்கான ஆதாரங்களும் இந்த ஒன்பதாவது ஒளிக்கீற்றில் விளக்கிக் கூறப்படும்.
அற்புதமான இறை கரிசனை:
இற்றைக்கு முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பழைய சயீத் தப்ஸீருக்கான முன்னுரையாகத் தான் எழுதிய அல் - முஹாகமாத் (ரஸாஇலுந்நூர் தொகுப்பிலுள்ள நூல்களில் ஒன்று) என்ற நூலின் கடைசிப்பகுதியில் குறிப்பிடுகின்ற குர்ஆனிய இலக்குகளில் இரண்டாவது இலக்கில் பின்வருமாறு கூறியிருந்தார்: 'மீள் எழுப்புதலைச் சுட்டி நிற்கின்ற இரு வசனங்கள் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்படும்'. எனினும் 'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்று ஆரம்பித்ததோடு அவர் நின்று விட்டார்ளூ அதற்கப்பால் அவரால் எழுத்தைத் தொடர முடியவில்லை. முப்பது வருடங்களின் பின்னர் எனக்கு அந்தப் பணியைச் செய்வதற்கு வாய்ப்பேற்படுத்தித் தந்த என்னைப் படைத்த அந்த அருளாளனை இந்த பிரபஞ்சத்தில் விரவிக் கிடக்கும் மீள் எழுப்புதலை நியாயப்படுத்தும் ஆதாரங்கள், அடையாளங்களின் எண்ணிக்கையின் அளவுக்குப் புகழ்ந்து நன்றி கூறுகின்றேன்.
நிச்சயமாக அல்லாஹ், ஒன்பது அல்லது பத்து வருடங்களுக்கு முன்னர் இறை நியதியை வெளிப்படுத்தும் அந்த இரு வசனங்களில் ஒன்றுக்கான மிகப் பலமான, தீர்க்கமான ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ள 'பத்தாவது வார்த்தை', 'இருபத்தொன்பதாவது வார்த்தை' என்ற இரு தொகுப்புகளையும் எழுதுவதற்கு அருள்பாலித்திருந்தான். '(நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச் சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்? (இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிப்பவனாக இருக்கிறான். மேலும் அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.' என்பதே அவ்வசனமாகும். அவ்வசனத்தினூடாக அவன் இணைவைப்பாளர்களை மௌனிக்கச் செய்து விட்டான்.
மீள் எழுப்புதல் தொடர்பான நம்பிக்கையைக் கட்டிக்காக்கின்ற அவ்விரு பலமான கோட்டைகளையும் நிறுவி ஒன்பது அல்லது பத்து வருடங்கள் கழிந்த பின்னர் இது தொடர்பாக வந்துள்ள மிகப்பெரிய வசனமான இரண்டாம் வசனத்துக்கான விளக்கத்தைத் தாங்கிய இந்த தொகுப்பை வெளியிட அவன் எனக்கு வாய்ப்பளித்திருக்கிறான். இந்த ஒன்பதாவது ஒளிக்கீற்று அவ்வசனத்தில் பொதிந்துள்ள ஒன்பது உயர்ந்த படித்தரங்கள் பற்றியும் மிக முக்கியமான முன்னுரை பற்றியும் அலசுகிறது.
17. Page
முன்னுரை
இது இரு பகுதிகளைக் கொண்டது. அவை மீள் எழுப்புதல் தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் ஆன்மீக ரீதியான பல நன்மைகளை விளக்குகின்றனளூ நடைமுறை வாழ்வில் அவை ஏற்படுத்தும் விளைவுகளைச் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றன. மனித வாழ்வுக்கு குறிப்பாக மனிதனது சமூக வாழ்வுக்கு அதன் அவசியத்தை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. மீள் எழுப்புதல் தொடர்பான நம்பிக்கை பற்றி விரவிக் கிடக்கின்ற ஆதாரங்களில் முக்கியமானவற்றைச் சுருக்கமாக விளக்குகின்றன. மீள் எழுப்புதல் தொடர்பான நம்பிக்கை சந்தேகங் கொள்ள முடியாதளவு எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன.
முதலாவது பகுதி: மறுமை பற்றிய நம்பிக்கைதான் மனிதனது தனிப்பட்ட, சமூக வாழ்வின் மிக அடிப்படையான விடயம்ளூ அதுவே அவனது சுபீட்சத்தினதும் பூரணத்துவத்தினதும் அச்சாணி என்பதை உணர்த்தும் நூற்றுக்கணக்கான ஆதாரங்களில் - எடுகோளாக - நான்கு ஆதாரங்களை இப்பகுதியில் நோக்க இருக்கிறோம்.
முதலாவது ஆதாரம்:
மனித இனத்தின் பாதியளவாக இருக்கும் சிறுவர்கள் அவர்களது கண்முன்னே அகோரமாகத் தோன்றும் மரணங்களுக்கு முன்னால் துவண்டு போகாமல் இருக்க வேண்டும் என்றால் சுவனம் பற்றிய சிந்தனையால்தான் அது அவர்களுக்கு முடியுமாகவிருக்கும்.இந்த சிந்தனையின் மூலம் அவர்களது பலவீனமான மென்மையான உள்ளார்ந்த ஆளுமைக்குள்ளே மானசீக ரீதியான ஒரு பலத்தை அவர்கள் உணர்வார்கள்.எந்தவொரு இலேசான விடயத்துக்;கு முன்னாலும் துவண்டு போய் அழுதுவிடக் கூடிய மிகப் பலவீனமான அவர்களது ஆன்மாவினுள்ளே ஒரு வகையான எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் இந்த சுவனம் பற்றிய சிந்தனை அவர்களுக்கு வழங்கி விடுகிறது. எனவே அவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
உதாரணமாக சுவனம் பற்றிய இந்த சிந்தனையுடன் ஒரு சிறுவன் கூறுவான்: 'எனது இளைய சகோதரன் அல்லது எனது நண்பன் மரணித்து விட்டான்ளூஅவன் இப்போது சுவனத்தின் சிட்டுக்குருவிகளில் ஒன்றாய் மாறிப் போய் விட்டான்ளூஅங்கே சுற்றித்திரிந்து எம்மை விட அழகான முறையில் இன்பங்களை அனுபவித்து வாழ்கிறான்...' இல்லாவிட்டால் அவர்களைப் போன்ற சிறுவர்கள் அல்லது அவர்களைச் சூழவுள்ள பெரியவர்கள் மரணித்து விடும் போது பலவீனமான அந்த அப்பாவிகளின் கண் முன்னே அம்மரணங்கள் பேரிடியாய் வீழ்ந்து அவர்களது உறுதியையும் உள்ளார்ந்த பலத்தையும் உடைத்தெறிந்து விடும்.அவர்களது கண்களோடு சேர்த்து அவர்களது ஆன்மாவையும் உள்ளத்தையும் ஏன் அறிவையும் கூட அழ வைத்துவிடும்.எனவே அவர்கள் ஒன்றில் தட்டழிந்து வீணாகிப் போவார்கள் அல்லது மிருகங்களைப் போல் அலைந்து திரிவார்கள்.
இரண்டாவது ஆதாரம்:
வயது முதிர்ந்த ஆண்களும் பெண்களும் - மனித இனத்தின் பாதி என்ற அடிப்படையில் மறுமை பற்றிய சிந்தனையின் மூலம் மாத்திரம் தான் அவர்களால் அவர்களுக்கு மிக நெருக்கமாகக் காத்துக் கொண்டிருக்கும் மண்ணறைக்கு முன்னால் துவண்டு போகாமல் நிலைத்து நிற்க முடியும்.அவர்களோடு மிக நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த இந்த வாழ்வு மிக அண்மையில் அணைந்து விடப் போகிறதுளூஅவர்களது இந்த அழகிய உலகம் அவர்களுக்கு முன்னால் மூடுண்டு போகப் போகிறது என்ற கவலையைப் போக்குகின்ற மருந்தை இந்த சிந்தனையால் தான் அவர்களுக்கு வழங்க முடியும்.மரணத்தைக் கண்டு தோன்றுகின்ற கசப்பான நம்பிக்கையீனம்,மிக விரைவாக உணர்ச்சி வசப்படக் கூடிய குழந்தை போல் மாறிப் போயிருக்கின்ற உளவியல் நிலை என்பவற்றுக்கு முன்னால் நிலைத்து நிற்கக் கூடிய மனோதிடத்தை நிலையான வாழ்வு பற்றிய எதிர்பார்ப்பினூடாகத்தான் வழங்க முடியும்.
அவ்வாறில்லாவிட்டால் இரக்கம் செலுத்தப்பட வேண்டிய அந்த கணவான்களும் அமைதியையும் மன ஆறுதலையும் மிக அதிகமாகவே தேடுகின்ற அந்தத் தாய்,தந்தையரும் அவர்களது உள்ளங்களிலே தோன்றக்கூடிய,இந்த உலகத்தையே அவர்களுக்கு சிறையாகவும் வாழ்வை மிகக் கொடிய வேதனையாகவும் மாற்றி விடக் கூடிய கவலை அலைகளால் அவஸ்தைப்பட நேரிட்டுவிடும்.
மூன்றாவது ஆதாரம்:
மானிட சமூக வாழ்வின் மிகப் பலமான மையப்புள்ளியாக இளைஞர்கள் உள்ளனர். உணர்ச்சி வசப்படுதல், அத்துமீறல், அநியாயம் இழைத்தல், அழிவுகளை ஏற்படுத்தல் போன்றவற்றை விட்டும் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமூக வாழ்வை அதனது இயல்பான போக்கோடு நடாத்திச் செல்ல உதவுவதென்றால் அது நரகம் பற்றிய சிந்தனையேயாகும்.நரகம் பற்றிய அச்சம் மாத்திரம் இல்லாவிட்டால் கட்டற்ற அந்த இளைஞர்கள் தமது மனோ இச்சைகளின் பின்னாலும் கீழ்த்தரமான ஆசைகளின் பின்னாலும் சென்று பெரும்பான்மைக்கே அதிகாரம் என்ற விதிக்கேற்ப பலவீனமான அப்பாவிகளின் விடயத்தில் அத்துமீறி நரகில் நுழையக்கூடிய நிலை வந்து விடும். அத்தோடு உயர்ந்த இடத்தில் வைத்து நோக்கப்பட வேண்டிய மனிதம் மிக மோசமான மிருகத்தனத்தால் தன்னைப் போர்த்திக் கொள்ளும்.
நான்காவது ஆதாரம்:
மனித உள்ளங்களை ஒன்றிணைக்கக் கூடிய மிகப்பெரும் மத்திய நிலையமும், மிகப் பலமான அடிப்படை கொண்ட நிறுவனம் என்ற ஒன்றும், மனித இனம் உலக வாழ்வில் மகிழ்;ச்சியைத் தேடிச் செல்லக்கூடிய, அதனை அனுபவிக்கக் கூடிய ஒரு இடமும் இருக்குமென்றால் அது குடும்ப வாழ்வாகத்தான் இருக்க முடியும்.ஒவ்வொருவருடைய வீடும் அவரவரது சிறிய உலகமாகும். அந்த வீட்டில் வாழ்வதும் அந்த குடும்பத்தில் வாழ்வதும் அந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதும் பரஸ்பர நம்பிக்கையுடன் கூடிய கண்ணியமளித்தலோடும் தியாகத்துடன் கூடிய உண்மையான அன்பை வெளிப்படுத்துவதோடும் தொடர்புபட்டதாகும். இந்தத் தூய கண்ணியமளித்தலும் உண்மையான அன்பை வெளிப்படுத்துதல் என்பதும் முடிவில்லாத நட்புடனும் நிலையான இரக்கத்துடனும் எப்போதும் ஒன்றித்து வாழ்வதோடும் தொடர்புபட்டதாகும். முடிவுறாத கால, வரையறையற்ற தந்தை, பிள்ளை, சகோதரத்துவம், நட்பு என்ற உறவுகளால் நிறைந்த வாழ்வைப் பற்றிய சிந்தனையும் நம்பிக்கையும் இத்தொடர்பை ஏற்படுத்துவதில் பெரும் பங்கை வகிக்க முடியும்.
18. Page
உதாரணமாக ஒருவர் எனது இந்த மனைவி முடிவுறாத வாழ்வில் நிலையாக கிடைக்க இருக்கின்ற எனது வாழ்க்கைத் துணையாக இருப்பாள்ளூ அவள் இப்பூவுலக வாழ்வில் வயது முதிர்ந்தவளாக மாறுவதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் முடிவே இல்லாத அழகுடன் கூடிய வாழ்வொன்று எமக்கு வர இருக்கிறது எனக் கூறுவார். எனவே வயது முதிர்ந்த தனது மனைவியுடன் அவள் ஓர் அழகிய தேவதை என்ற உணர்வுடன் அன்போடும் பரிவோடும் அவனால் நடந்து கொள்ள முடியும். இது போன்ற நிரந்தரமான நட்புக்காக நான் அனைத்து விதமான தியாகங்களையும் மேற்கொள்ளத் தயார் என அவன் கூறுவான். அவ்வாறில்லாவிட்டால் சில மணி நேரங்கள் மாத்திரம் இருந்துவிட்டு நிரந்தரமான பிரிவுக்கு உட்படக்கூடிய நட்பின் மூலம் போலியான இரக்கமும் பரிவும் தான் ஏற்பட முடியும்.அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை மையப்படுத்திய கால வரையறைக்குட்பட்ட உறவாகவே தென்படும். மிருகங்கள் கொண்டுள்ள உறவைப் போல அதிலே எந்த அர்த்தமும் இருக்காது. சிலவேளை அம்மிருகங்கள் அனுபவிப்பது போல அந்த அன்பு, பரிவு என்பதற்கும் அப்பால் அவர்கள் வேறுவகையான சில நலன்களையும் இன்பங்களையும் அனுபவிக்கக் கூடும். எனினும் அவை உலகில் கிடைக்கும் அந்த சுவன வாழ்வை நரகமாகவே மாற்றி விடும்.
மறுமை பற்றிய நம்பிக்கையின் நூற்றுக்கணக்கான விளைவுகளில் ஒன்று மனிதனின் சமூக வாழ்வோடு தொடர்புபட்டிருக்கிறது. பல கோணங்களில் அமைந்த ஏனைய அந்த விளைவுகளையும் அந்த ஒரு விளைவின் பயன்களையும் இந்த நான்கு ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது மறுமை நிகழ்வதென்பது மானிட இருப்பும் அதன் தேவைகளும் எந்தளவு நிதர்சனமானதோ அந்தளவு நிதர்சனமானது என்பது புரியும். மனிதனின் வயிற்றில் உருவாகின்ற பசி என்ற தேவை உணவு என்ற ஒன்று இருப்பதற்கான ஆதாரமாக இருப்பதைவிட மறுமையானது ஆதாரபூர்வமானதாகும்.
மறுமையின் விளைவாக வருகின்ற அம்சங்கள் மானிட வாழ்விலிருந்து நீங்குகின்ற போது மிக முக்கியத்துவம் வாய்ந்த உயர்ந்த இடத்திலிருக்கின்ற மனிதம் என்ற அந்தஸ்த்திலிருந்து மனிதன் இறங்கி புழுக்களும் நோய்க்கிருமிகளும் உற்பத்தியாகின்ற இறந்த சடலத்திற்கு ஒப்பானவனாக அவன் மாறிவிடுவான். மனிதர்களை முகாமை செய்து அவர்களது பண்பாடுகளையும் சமூகவியல் நடத்தைகளையும் ஒழுங்கமைப்பதில் அதிக கரிசனை எடுக்கின்ற சமூகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் பண்பாட்டுப் போஷகர்களும் இதற்கு செவிசாய்க்கட்டும். இந்த இடைவெளியை எதன் மூலம் நிரப்ப முடியும் என்பதையும் இந்தக் காயங்களுக்கு எவ்வாறு மருந்திடுவதென்றும் அவர்கள் கூறட்டும்...
இரண்டாவது பகுதி:
இந்தப் பகுதி மீள் எழுப்புதலை நிறுவக்கூடிய எண்ணிலடங்காத ஆதாரங்களில் ஒன்றைப் பற்றி விளக்குகிறது.அந்த ஆதாரம் ஈமானின் ஏனைய அடிப்படைகள் கூறும்; சாட்சியங்களின் சாரமாகத் திகழ்கிறது.அதாவது நபி முஹம்மத்(ஸல்) அவர்கள் தனது தூதை நிறுவுவதற்காகக் கொண்டு வந்த அற்புதங்கள் அனைத்தும்,அவரது நுபுவ்வத்தையும் அவரது உண்மைத்தன்மையையும் நிறுவும்ஆதாரங்கள் அனைத்தும் மொத்தமாகவே மீள் எழுப்புதல் என்பது நிகழக்
கூடியது என்பதற்குச் சான்று பகர்கின்றன.ஏனெனில் இந்தத் தூதர் கொண்டு வந்த செய்திகள் அனைத்துமே தவ்ஹீதுக்கு அடுத்த படியாக மீள் எழுப்புதலை மையப்படுத்தி அமைந்துள்ளதைக் காணமுடிகிறது.அவர் கொண்டு வந்த அனைத்து அற்புதங்களும் அவ்வாறே அனைத்து நபிமார்களையும் உண்மைப்படுத்தக்கூடியதும் அவர்கள் அனைவரையும் மக்;;;கள் உண்மைப்படுத்துவதற்கும் அடிப்படையாக இருக்கின்ற அவர் கூறும் ஆதாரங்களும் இதே அம்சத்துக்கு வலுச்சேர்க்கின்ற ஆதாரங்களாய் இருக்கின்றன.
'அவனது தூதர்களையும்(ஈமான் கொள்கின்றேன்)' என்ற சாட்சியத்துக்கு அடுத்ததாக வருகின்ற 'அவனது வேதங்களையும்(ஈமான் கொள்கின்றேன்)' என்ற சாட்சியமும் இதே உண்மையை நிறுவுகிறது. எவ்வாறெனில் அற்புதங்களுக்கெல்லாம் அற்புதமான அல்-குர்ஆனும் அதன் உண்மைத்தன்மையை நிறுவுகின்ற ஆதாரங்கள் ஆகிய அனைத்தும் சேர்ந்து மொத்தமாகவே மீள் எழுப்பப்படுதல் என்ற இந்த உண்மையை நிறுவிக் கொண்டிருக்கின்றன. அல்-குர்ஆனின் மூன்றிலொரு பகுதி மீள் எழுப்பப்படுதல் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறதுளூ அதிகமான சிறிய சூறாக்கள் மீள எழுப்புதல் தொடர்பான வசனங்களுடன் ஆரம்பிப்பதைக் காண்கிறோம்... அல்-குர்ஆன் ஆயிரக்கணக்கான வசனங்களுக்கூடாக நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த உண்மையை உரத்துக் கூறிக் கொண்டிருக்கிறது.
உதாரணமாக அல்-குர்ஆன் முப்பது அல்லது நாற்பது சூறாக்களின் ஆரம்பத்தில் மீள எழுப்புதல் என்ற இந்த விடயம் பிரபஞ்ச விதிகளில் மிக முக்கிய விதி என்ற கருத்தை முன்வைத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். நிச்சயமாக அது ஒரு கட்டாய விதியாகும். 'சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது', 'மனிதர்களே! நீங்கள் உங்களுடைய இறைவனை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக (கியாமத்து நாளாகிய) அவ்வேளையின் அதிர்ச்சி, மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும்', 'பூமி பெரும் அதிர்ச்சியாக - அதிர்ச்சி அடையும் போது', 'வானம் பிளந்துவிடும் போது', 'எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?', 'சூழ்ந்து மூடிக்கொள்வதின் (கியாம நாளின்) செய்தி உமக்கு வந்ததா?'..... போன்ற ஆரம்ப வசனங்கள் இதற்கு சான்றாகும். இந்த உண்மையை நிறுவக்கூடிய இன்னும் பல்வேறுபட்ட ஆதாரங்களை ஏனைய பல வசனங்களுக்கூடாகவும் அல்-குர்ஆன் முன்வைக்கிறது.
ஒரேயொரு வசனம் மட்டுமே பல்வேறுபட்ட பிரபஞ்ச மற்றும் அறிவியல் உண்மைகளை அள்ளி வீசக்கூடிய அல்-குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள தெட்டத்தெளிவான ஆதாரங்கள் மூலம் நிறுவப்படக்கூடிய இந்த மீள எழுப்புதல் பற்றிய நம்பிக்கை பிழையாக இருப்பதற்கு இனிமேலும் ஏதும் ஆதாரங்களோ வழிமுறையோ இருக்க முடியுமா?! அவ்வாறு கூறுவதானது சூரியனையே மறுப்பது போன்று ஏன் இந்த பிரபஞ்சமே இல்லை எனக் கூறுவது போன்று இருக்காதா?!...அது நூற்றுக்கு நூறு வீதம் பிழையான ஒன்றாக இருக்காதா?!
19. Page
ஒரு அரசனின் ஒரு சைகை பொய்யாகிப் பிழைத்துப் போய்விடக் கூடாது என்பதற்காக முழுப் படையுமே போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில் மிகப்பெரும் வலிமை நிறைந்த அந்த அரசனின் பல்லாயிரம் வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் எச்சரிக்கைகளையும் பொய்ப்பிப்பதற்கான ஏதும் வழிமுறைகள் இருக்க முடியுமா?!! அத்தகைய அந்த அரசனின் பல்லாயிரம் வார்த்தைகளும் வாக்குறுதிகளும் வழிகாட்டல்களும் உண்மைக்குப் புறம்பானதாக அமைந்து விட முடியுமா?!! எண்ணிலடங்காத ஆத்மாக்களையும் உள்ளங்களையும் சத்தியத்தின் பிடியில் கட்டுப்படுத்தி வைத்துள்ளதோடு பதின்மூன்று நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக அவற்றைப் போஷித்து நிர்வகித்து வருகின்ற அத்தகைய வலிமை கொண்ட அரசனின் ஒரு சைகையானது இவ்வாறான ஒரு உண்மையை நிறுவப் போதுமானதாக இருந்தால், ஏ மனிதனே! ஆயிரக்கணக்கான தெளிவான ஆதாரங்கள் மூலம் இந்த அரசன் விளக்கிக் கூறிய பின்னரும் இந்த உண்மையை அறிந்து கொள்ளாமல் இருக்கின்ற முட்டாளுக்கு நரக வேதனை அல்லாமல் வேறு எதுதான் வெகுமதியாகக் கிடைக்க முடியும்?? அவ்வாறு இடம்பெறுமாக இருந்தால் அதனை நீதி என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்?? எல்லாக் காலங்களுக்குமுரிய வழிகாட்டல்களைத் தழுவிய அல்-குர்ஆன் மிகத்தெளிவாகத் திரும்பத் திரும்ப உறுதியாகக் கூறிக் கொண்டிருக்கும் மீள எழுப்புதல் என்ற இந்த உண்மையை குறிப்பிட்ட ஒவ்வொரு காலத்திற்கென வரையறுக்கப்பட்ட விதத்தில் இறக்கப்பட்ட அனைத்து இறை வேதங்களும் வேதக்கட்டளைகள் எனப்படும் ஸுஹுபுகளும் ஒருமித்து ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த உண்மையை இவை சுருக்கமாக அதே நேரம் பலமாகக் கூறிக்கொண்டிருப்பதும் அல்-குர்ஆனின் வாதத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமைகிறது.
இந்த ஆய்வின் இடையில் ஈமானின் ஏனைய அடிப்படைகளின் (அர்கான்கள்) குறிப்பாக முனாஜாத் (இறைஞ்சுதல்) என்ற நூலின் இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தூதர்கள்,வேதங்கள் பற்றிய நம்பிக்கை என்ற அடிப்படைக்கு ஊடாக சாட்சியங்கள் முன்வைக்கப்படுகின்றன. அவை சுருக்கமாக அதே நேரம் பலமான ஆதாரங்களாக இருப்பதோடு அனைத்துவிதமான சந்தேகங்களையும் துடைத்தெறியக் கூடியதாகவும் இருக்கின்றன. 'முனாஜாத்' என்ற நூலில் அதன் ஆசிரியர் குறிப்பிடுகிறார்: பேரிரக்கமுள்ள இரட்சகனே!, நான் தூதரின் கற்பித்தலுக்கு ஊடாகவும் அல்-குர்ஆன் கற்றுத்தந்த பாடங்களுக்கு ஊடாகவும் விளங்கிக் கொண்ட ஒரு விடயம் இருக்கிறது. புனித வேதங்களும் நபிமார்களும் அவர்களுக்கும் மேலால் உள்ள அல்-குர்ஆனும் தூதரும் - இந்த உலகின் நாலா புறங்களிலும் வெளிப்படுகின்ற அல்லாஹ்வின் பெயர்கள் கூறும் கருத்துக்களின் வெளிப்பாடுகள் மிக மிகத் தெளிவான முறையில் இந்த உலகம் அழியும் வரை தொடர்ந்திருக்கும் என்ற விடயத்தில் ஏகோபித்த கருத்தைக் குறிப்பிட்டுள்ளனர் என்பதுவே அந்த விடயமாகும்.அவ்வாறே அழியக் கூடிய இந்த உலகில் உனது அருளால் நிரம்பியிருக்கின்ற உனது கருணையின் வெளிப்பாடுகள் எப்போதும் நிரந்தரமாய் இருக்கும்.நாளை மறுமையிலும் மிக அழகிய வடிவில் அது தொடர்ந்து வரும். மேலும் இந்தக் கருணையைக் கண்டு அதனை அனுபிக்க வேண்டும் என ஆசிப்பவர்களும் குறுகிய இந்த உலக வாழ்விலே அதனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களும் அழியாத மறு உலகிலும் அதனை அனுபவிப்பர்.
நான் விளங்கிக் கொண்ட இன்னொரு விடயம் இருக்கிறது.அதுதான் ஒளி பொருந்திய ஆத்மாக்களைக் கொண்ட, மிகத் துல்லியமான அற்புதங்களையும் அத்தாட்சிகளையும் கொண்ட அனைத்து நபிமார்களும் குறிப்பாகத் தூதர் அவர்களும் ஞானம்மிக்க உனது குர்ஆனும் அவ்வாறே தூய உள்ளங்கொண்ட அனைத்து இறைநேசர்களும் தெரிவு செய்யப்பட்ட கனிமம் போன்ற அறிவும் தெளிவும் ஒருங்கே கொண்ட ஸித்தீகீன்கள் அனைவரும் நீ வழங்க இருக்கின்ற அழிவில்லாத இன்பத்தைக் கொண்டு மக்களுக்கு நன்மாராயம் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.நீ பரிசுத்த வேதங்களிலும் வேதக்கட்டளைகள் அனைத்திலும் ஒன்றுக்குப் பல நூறு தடவை வாக்களித்துள்ள ஆயிரக்கணக்கான வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தி அவர்கள் மக்களை விழிப்பூட்டுகிறார்கள். சக்தி, ஆற்றல், வல்லமை, இரக்கம், கரிசனை, ஞானம், மேன்மை, அழகு போன்ற மறுமை என்ற ஒன்று தேவை என்பதை உணர்த்துகின்ற உனது புனிதம்மிக்க பண்புகளை முன்வைத்தும் அவர்கள் மக்களை அழைக்கின்றார்கள்.அவர்கள் உள்ளத்தால் கண்டறிந்த உண்மைகள், மறுமையை வெளிப்படுத்தக் கூடிய சான்றுகளாக அவர்கள் கண்களால் காண்பவை என்பவற்றின் துணைகொண்டு மக்களுக்கு உபதேசிக்கிறார்கள்.மிக உறுதியான தரத்தை அடைந்த அவர்களது ஈமானை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மக்களை அழைக்கிறார்கள்.அவ்வாறே வழிகேடர்களுக்கு நரகமும் நேர்வழியில் செல்வோருக்கு சுவர்க்கமும் கிடைக்கும் என அவர்கள் கூறுவதோடு அவையிரண்டையும் மிக உறுதியான முறையில் ஈமான் கொள்கிறார்கள். மிகப் பலமான முறையில் அதற்கு சாட்சியமும் கூறுகிறார்கள்.
வல்லமையும் ஞானமும் கொண்டவனே!, பேரன்பும் பேரருளும் நிறைந்தவனே!, வாக்குறுதியை நிறைவேற்றுபவனே!, சங்கையாளனே! அடக்கியாள்பவனே! மேன்மையும் மாட்சிமையும் வலிமையும் பொருந்தியவனே! பல நூறாயிரம் மடங்குகள் தூய்மை பொருந்தியவன் நீ! உனக்கிருக்கின்ற உண்மையான நல்லடியார்களதும் உனது வாக்குறுதிகளினதும் உனது பண்புகள்,செயற்பாடுகளினதும் எண்ணிக்கையின் அளவுக்கு முடிவுறாத வகையில் நீ உன்னைப் பொய்ப்படுத்துவதை விட்டும் தூய்மையானவன்.உனது இரட்சகத்தன்மை வேண்டி நிற்கின்ற விடயங்களைப் பொய்ப்பிப்பதை விட்டும் அந்த விடயங்களை மேற்கொள்ளாதிருப்பதால் ஏற்படும் குறைபாடுகளை விட்டும் நீ தூய்மையானவன். உனக்குக் கட்டுப்பட்டு உன்னை உண்மைப்படுத்தி வாழ்கின்ற எண்ணிலடங்காத உனது விருப்பத்திற்குரிய நல்லடியார்கள் மறுமைக்காகக் கேட்கின்ற துஆக்களையும் முறைப்பாடுகளையும் கேட்டு பதிலளிப்பதாலும் அவற்றை அறவே கேட்காமலிருப்பதாலும் உனது தூய்மையில் எந்தவொரு குறைவும் ஏற்படப் போவதில்லை.உனது வாக்குறுதிகளைப் பொய்ப்பித்து மாறு செய்வதன் மூலம் உனது மகத்துவத்துக்கு குந்தகம் விழைவித்து உனது கண்ணியத்துக்கு குறைவை ஏற்படுத்த முயற்சிப்பதோடு உனது இறையாண்மைக்கும் இரட்சகத்தன்மைக்கும் எதிராகச் செயற்படுகின்ற வழிகேடர்களையும் நிராகரிப்பாளர்களையும் கருத்திற் கொள்ளாமல் அவர்களை அவர்களது வழிகேட்டிலேயே விட்டுவிடுவதாலும் உனது தூய்மைக்கு எதுவித களங்கமும் ஏற்படப் போவதில்லை...
நீதம், அழகு, அன்பு என்பவற்றின் முழு வடிவமான உன்னை அநீதி, அலங்கோலம் என்பவற்றின் முழு வடிவங்களை விட்டும் நாம் தூய்மைப்படுத்துகிறோம். இன்னும் உனது அதிகாரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் பல நூறாயிரம் தூதர்கள்,நபிமார்கள், இறைநேசர்கள் மறு உலகில் நீ வெளிப்படுத்த இருக்கும் உனது அன்பிற்கும், பரிவு எனும் கருவூலத்திற்கும், மறுமையில் முழுமையாக வெளிப்படவிருக்கும் உனது அழகிய திருநாமங்களின் வெளிப்பாட்டிற்கும் வழங்கியுள்ள சாட்சியம் என்பது உண்மையானதுளூ நடைமுறைக்குப் பொருத்தமானதுளூ யதார்த்தமாக இடம்பெறக்கூடியது என்பதை நாம் வலுவாகவே ஈமான் கொள்கிறோம்.
20. Page
அவர்கள், அனைத்து வகையான உண்மைகளினதும் அடிப்படையாக இருக்கின்ற ஹக் என்ற அல்லாஹ்வின் திருநாமத்திலிருந்து வெளிப்படும் மிகப்பெரும் ஒளிக்கீற்றாக இருப்பது இந்த மிகப்பெரிய மீள எழுப்புதல் பற்றிய விடயமே ஆகும் என ஈமான் கொள்கின்றனர். இந்த உண்மையை சத்தியத்தின் வட்டத்துக்குள் நின்றுகொண்டு இதுதான் சத்தியமானது என உனது அடியார்களுக்கு அவர்கள் கற்றுக் கொடுக்கிறார்கள். இறைவா! எங்களுக்கும் ரஸாஇலுந்நூரைக் கற்கின்ற மாணவர்களுக்கும் அவர்களது பொருட்டிலும் அவர்களது கல்வியின் பொருட்டிலும் பூரணமான ஈமானையும் நல்ல முடிவையும் தந்தருள்வாயாக! அவர்களது ஷபாஅத்தையும் எங்களுக்கு அருள்வாயாக! ஆமீன்!!
அல்-குர்ஆன் மட்டுமல்ல ஏனைய அனைத்து இறைவேதங்களினதும் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்ற அனைத்து ஆதாரங்களும் அவ்வாறே முஹம்மத் (ஸல்) அவர்கள் மட்டுமல்லாது அனைத்து நபிமார்களதும் நபித்துவத்தை உறுதிப்படுத்துகின்ற அனைத்து அற்புதங்களும் ஆதாரங்களும் ஏக நேரத்தில் அவர்கள் அனைவரும் கூறிச்சென்ற மிகப்பெரும் உண்மையான மறுமை நிகழ்வதற்கான ஆதாரங்களாகவும் திகழ்கின்றன. அவ்வாறே அல்லாஹ்வின் உள்ளமையையும் அவனது தனித்துவத்தையும் நிறுவக்கூடிய ஆதாரங்களும் ஏககாலத்தில் அவனது இறையாண்மையினதும் இரட்சகத்தன்மையினதும் மிகப்பெரும் வெளிப்பாடாகத் திகழும் நிலையான மறுமை என்ற என்றும் இருப்பதற்கான ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
ஏனெனில் அல்லாஹ்வும் அவனது அதிகமான பெயர்களும் இரட்சிப்பு, இறைமை, அன்பு, கரிசனை, ஞானம், நீதி போன்ற அவனது பண்புகளும் இருப்பதானது மறுமை என்ற ஒன்றும் கட்டாயம் இருந்தாக வெண்டும் என்பதை வேண்டி நிற்கின்றன.அவை நிலையான ஒரு உலகம் இருக்க வேண்டும்ளூ கூலியும் தண்டனையும் வழங்குவதற்காக மனிதர்கள் மீள எழுப்பப்பட வேண்டும் என்ற அவசியப்பாட்டை வலியுறுத்துகின்றன. உண்மைதான்.... நித்திய ஜீவனான அல்லாஹ் இருக்கின்றான் என்றால் அவனது இறைமையின் அதிகாரத்தை நிறுவும் அச்சாணியான மறுமையும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் பிரபஞ்சத்திலும் அதிலிருக்கின்ற ஒவ்வொரு உயிரியிலும் மகத்துவம், ஞானம், இரக்கம் என்று உயர்ந்தளவில் தென்படுகின்ற முழுமொத்த இரட்சகத்தன்மை என்ற ஒன்று இருக்கின்றதென்றால் அந்த இரட்சகத்தன்மை விழுவதை விட்டும் அந்த ஞானம் வீணாகிப் போவதை விட்டும் அந்த இரக்கம் அநியாயமாகிப் போவதை விட்டும் அவற்றின் மகத்துவத்தைப் பாதுகாக்கக் கூடிய நிரந்தர மகிழ்சிக்குரிய இடமொன்றும் கட்டாயமாக இருக்கும்...
கண்ணுக்குத் தெரிகின்ற எண்ணற்ற அருள்களும் அன்பு, இரக்கம், கரிசனை போன்ற பண்பின் வெளிப்பாடுகளும் உயிர்த்துடிப்புள்ள இதயங்களுக்கும் அறிவுக்கும் புலப்படாத ஒரு அளவற்ற அருளாளனின் இருப்பை உணர்த்திக் கொண்டிருக்கிறதென்றால் அத்தகைய அருள்கள் கேலி செய்யப்படுவதை விட்டும் காக்கின்ற எதிர்ப்பு என்ற பண்பை விட்டும் கரிசனை என்ற பண்பையும் வேதனை அளித்தல் என்பதை விட்டும் அன்பு காட்டுதல் என்பதையும் இழிவு படுத்துவதை விட்டும் கருணை காட்டுதல் என்ற பண்பையும் பிரித்துக் காட்டக்கூடிய நிரந்தரமான ஒரு உலகத்தில் அருளை அருளாகக் காட்டக் கூடிய நித்திய வாழ்வொன்று இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பூமியின் மிக ஒடுங்கிய பக்கமொன்றில்... வசந்த காலமொன்றில் நூறாயிரம் புத்தகங்களை எதுவித பிழைகளுமின்றி எழுதிய பேனையொன்று எம் கண்முன்னே எதுவித களைப்புமின்றி இயங்கிக் கொண்டிருக்கிறதுளூ அந்தப் பேனையின் உரிமையாளன் 'நான் உங்களுக்கு இந்த ஒடுங்கிய இடத்தில் ஒன்றுக்குள் ஒன்று இணைந்ததாக எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தை விட இலகுவான அடிப்படையில் விசாலமான இடத்தில் நிரந்தரமாகவே கவர்ச்சிகரமான ஒரு புத்தகத்தை எழுதித் தருகிறேன்' என நூறாயிரம் தடவைகள் வாக்களித்துள்ளான்ளூ தான் குறிப்பிட்டுள்ள அனைத்து சட்டதிட்டங்களின் பின்னாலும் இந்த புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளான் எனின், அந்தப் புத்தகத்தின் அடிப்படையான அம்சங்கள் எழுதப்பட்டுவிட்டன – அதன் உசாத்துணைகள், குறிப்புக்கள் போன்ற சிறு விடயங்கள் மீள எழுப்புதல் மூலம் எழுதி முடிக்கப்படும். அதில் அனைவரது செயற்பாடுகளும் பதியப்படும் என்பதில் எதுவித சந்தேகமும் இருக்க முடியாது.
இந்த உலகிலே எவ்வளவோ படைப்புக்கள் உள்ளன. பல நூறாயிரம் வகையான உயிரிகள் இங்கேயே பிறந்து இங்கேயே வளர்ந்து மடிந்தும் விடுகின்றன. அந்த உலகம் இந்த பிரபஞ்சத்தின் இதயமாகவும் அதன் உருவாக்கத்தின் காரணியாகவும் இருக்கின்றது.எனவே அதற்கென்றொரு முக்கியத்துவம் உள்ளது.அதனது அளவு சிறியதாக இருப்பினும் இந்தப் பிரமாண்டமான வானங்களுக்கு நிகராக அது பேசப்பட்டுள்ளது.இறைவசனங்களில் எப்போதுமே 'வானங்களினதும் பூமியினதும் இரட்சகன்' (சூரதுஸ்ஸாத்:66) என்றே குறிப்பிடப்படுகிறது.
இந்த உலகின் அனைத்துப் பகுதிகளையும் மனிதன் ஆள்கின்றான். அவன் இவ்வுலகிலுள்ள அதிகமான படைப்பினங்களில் செல்வாக்குச் செலுத்துகின்றான். உயிருள்ள படைப்புக்களில் அதிகமானவற்றை வசப்படுத்தி அவனைச் சூழ வைத்துள்ளான்.இந்த உலகில் பெரும்பாலான உற்பத்திகளை மேற்கொண்டு அதனை அழகுபடுத்துகிறான். அவனது தேவைக்கும் ஆசைக்குமேற்ப மிக உயர்ந்த நுட்பத்தில் இவற்றைச் செய்து முடிக்கிறான். மிக அரிதான சில பொருட்களைச் சேர்த்தெடுத்து அவற்றை அலங்காரமாக்குகிறான். இவற்றிற்கு ஊடாக அவன் மிகப்பெரும் முக்கியத்துவத்திற்குரிய ஒருவனாக மாறிவிடுகிறான். மனித, ஜின் இனத்தின் பார்வையை மட்டும் அவன் தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளவில்லை. வானங்களிலும் இந்தப் பிரபஞ்சத்திலும் நிறைந்துள்ள அனைவரதும் பார்வைகளை அவன் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டுள்ளான்ளூ இந்தப் பிரபஞ்சத்தின் உரிமையாளனின் பார்வையைத்தன் பக்கம் ஈர்த்துக் கொண்டுள்ளான்.
இந்த அடிப்டையில் தனது அறிவாலும் ஆற்றல்களாலும் இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டதன் பின்னாலுள்ள சூட்சுமமும் அதற்கான மிகப்பெரும் காரணியும் தானாகத்தான் இருப்பதையும் தான் இந்தப் பூமிக்கே பிரதிநிதியாக இருப்பதையும் அறிந்து கொள்கிறான்.அவன் இவ்வுலகில் ஒரு குறிப்பிட்ட காலம் வாழவைக்கப்படுள்ளதையும் அவன் இறைவனை மறுத்த போதிலும் அல்லது அவனுக்கு மாறுசெய்த போதிலும் அவனுக்கான தண்டனை உடனே வழங்கப்படாது பிற்போடப்படுகிறது. ஏனெனில் அவன் இவ்வுலகினைப் படைத்த அல்லாஹ்வின் அற்புதம் நிறைந்த படைப்புக்களை நிருவகித்து அழகிய முறையில் ஒழுங்குபடுத்துகிறான். இந்தப் பணிகளுக்காக அவனுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது என்பதை அவன் தெரிந்து கொள்கிறான்.
21. Page
இப்பிரமாண்டமான பூமிப்பந்தை மனித இனத்தின் சக்திக்கும் அப்பாற்பட்ட வகையில் உருவாக்கியுள்ள வல்லமையும் ஞானமும் இரக்கமும் நிறைந்த ஒருவன் இருக்கின்றானல்லவா?.. தனது இயல்பிலும் படைப்பிலும் பலவீனமான நிலையிலுள்ள போதும் மனிதன் தனக்கென எண்ணற்ற தேவைகளையும் ஆசைகளையும் வரைந்து வைத்துள்ளான் அல்லவா?.... அந்த இறைவன் இந்தப் பிரமாண்டமான உலகை மனித இனத்துக்குத் தேவையான அனைத்துவித அத்தியவசியக் கனியங்களினதும் அனைத்துவித உணவு வகைகளினதும் களஞ்சியமாக ஆக்கியுள்ளான்ளூ மனித இனத்துக்குத் தேவையான அனைத்துவிதமான பொருட்களையும் விற்பனை செய்யும் வியாபாரத் தளமாக ஆக்கியுள்ளான்... இவ்வாறுதான் அவன் மனித இனத்தைப் போஷித்து உணவளித்து மனிதனுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கி வருகிறான் அல்லவா?..
இந்த உண்மைகளுக்குச் சொந்தக்காரனான இரட்சகன் மனிதனை விரும்புகிறான்.மனிதனிடம் தன்னை விருப்பத்திற்குரியவனாகக் காட்டுகிறான்.அவன் நிலையானவன்ளூஅவனுக்கென்று நிலையான உலகங்கள் இருக்கின்றன. அவன் அனைத்து விடயங்களையும் நீதியான முறையிலும் ஞானத்துடனுமே செய்கிறான். குறுகிய இந்த உலக வாழ்வும் மிகக் குறுகிய வாழ்நாளும் அழியக்கூடிய காலவரையறைக்குட்பட்ட இந்த பூமியும் நித்தியமான அந்த ஆட்சியாளனதும் அவனது அதிகாரத்தினதும் மகத்துவத்துக்கு ஈடாகாது.இந்தப் பிரபஞ்ச நியதிகள்,அதன் ஒழுங்குகள், கட்டுக்கோப்புகள், அதன் அழகு என்பவற்றுக்கு மாற்றமான முறையில் மனித இனம் செய்து கொண்டிருக்கின்ற அநியாயங்களும் பெரும்பெரும் பாவங்களும் இந்த அருள்களை எல்லாம் வாரிவழங்குகின்ற அல்லாஹ்வை அவன் இழிவுபடுத்தி மறுப்பதும் இந்த உலகில் எதுவித தண்டனைக்கும் உட்படாமல் இருப்பதைக் காண்கிறோம். மிகப்பெரும் அநியாயக்காரன் மிக நிம்மதியாக வாழ்வைக் கழிக்கிறான்ளூ அநியாயத்துக்குட்பட்ட அப்பாவி கஷ்டங்களுடனேயே தன் வாழ்நாட்களைக் கழிக்கிறான். ஆனால் இந்தப் பிரபஞ்சம் பூராகவுமே நிரம்பி வழிகின்ற நீதியானது அநியாயம் இழைத்தோரும் இழைக்கப்பட்டோரும் மரணித்துப் போவதோடு அவர்களுடைய வாழ்வு முற்றுப் பெறுவதையோ அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பு இடம்பெறாமல் விடுவதையோ முற்றாக மறுக்கிறது.
இந்தப் பிரபஞ்சத்தின் சொந்தக்காரன் இப்பிரபஞ்சத்திலிருந்து இப்பூமியையும் இப்பூமியில் மனிதனையும் தெரிவு செய்து அம்மனிதனுக்கு மிகப்பெரும் இடத்தையும் முக்கியத்துவத்தையும் வழங்கியுள்ளான். அவ்வாறே மனித இனத்துக்குள்ளிருந்தே நபிமார்களையும் இறைநேசர்களையும் தேர்ந்தெடுத்துள்ளான். அவர்கள் அவனது அவனது இரட்சகத்தன்மையின் இலக்குகளுக்கேற்ப செயற்படுகின்றனர்ளூ அவனுக்கு உவப்பான செயல்களின் மூலம் அவனது விருப்பத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அத்தகைய இறைநேசர்களுக்கு மத்தியிலிருந்து அவர்களுக்கெல்லாம் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்களை அவன் தேர்ந்தெடுத்து அவரது ஒளியால் மிக நீண்ட நூற்றாண்டு காலமாக புவியின் மிக முக்கிய அரைவாசிப் பகுதியையும் மனித இனத்தின் மிக முக்கிய ஐந்து வகையினரையும் ஒளியூட்டி விட்டான். இறைவனின் அனைத்து இலக்குகளும் அவருக்கூடாகவும் அவர் கொண்டு வந்த மார்க்கம், குர்ஆனுக்கூடாகவும் வெளிப்படுகின்றன. இந்தப் பிரபஞ்சமே அவருக்காகத்தான் படைக்கப்பட்டுள்ளது போலும். ஏனெனில் அவர் கஷ்டம் நிறைந்த மிகக்குறுகிய அறுபத்து மூன்று ஆண்டு கால ஆயுளையே பெற்றிருந்தார். எனினும் அவர் பெறுமதியை வரையறுக்க முடியாத தனது பணிகளால் வரையரையற்ற பல மில்லியன் ஆண்டுகால கூலிக்குச் சொந்தக்காரராக மாறிவிட்டார்.
ஓ மனிதா! இந்தத் தூதர் தனது சகோதர நபிமார்கள் அனைவரோடும் மீண்டும் எழுப்பப்படாமல் இருப்பதற்கும், ஆன்மீக உலகில் வாழ்ந்து கொண்டிருக்காமல் நிரந்தரமாகவே அழிந்து போயிருப்பதற்கும் ஏதாவதொரு சாத்தியப்பாடோ வாய்ப்போ இருக்கின்றதா? அவ்வாறு கூறுவது எவ்வளவு ஆச்சரியமானது!!! நிச்சயமாக! முழுப்பிரபஞ்சமும், இந்த உலக நியதியும் அந்தத் தூதர் மீள எழுப்பப்பட வேண்டும் என விரும்புவதோடு இப்பிரபஞ்சத்தின் சொந்தக்காரனிடம் அத்தூதரை வாழவைக்குமாறும் கோருகிறது...ஏழாவது ஒளிக்கீற்றான 'மிகப் பெரும் அத்தாட்சி' எனும் நூலில் உள்ள முப்பத்து மூன்று ஏகோபித்த முடிவான கருத்துக்களும் இந்த பிரபஞ்சமானது ஒரேயொரு சக்தியால் மாத்திரமே படைக்கப்பட்டுள்ளது என்றும் இது ஒரேயொருவனான இறைவனுக்கு மாத்திரமே சொந்தமானது என்றும் உறுதிபடக் கூறிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறே அவை அல்லாஹ்வின் பூரணத்துவத்துக்குச் சான்றுபகர்கின்ற அவனது ஏகத்துவத்தை மிகத் தெளிவாக வெளிப்படுத்திக் காட்டுகின்றன.இந்த ஏகத்துவத்தினதும் தனித்துவத்தினதும் காரணத்தினால் முழுப்பிரபஞ்சமுமே அந்த ஏக இறைவனின் சக்தியாக மாறிப்போய்விடும்.
அவனது அனைத்துப் படைப்புகளும் அவனது கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கின்ற படையினராக மாறி விடும்ளூ மறுமை ஏற்படுவதனூடாக அவனது பூரணத்துவம் இன்னும் நிலைபெறும்ளூ அவனது முழுமையான நீதி தெளிவாக வெளிப்படுவதற்கு களம் கிடைக்கும்ளூ அவனது அளப்பெரும் ஞானமும் அருளும் எவ்வளவு விசாலமானது என்பதைப் புரிந்து கொள்ளும் தருணங்கள் உருவாகும்ளூ அவனது வலிமையின் மாட்சிமை தெளிவாகும்.... எனவே இங்கு குறிப்பிடப்பட்ட உண்மைகள் இடம்பெற வேண்டும் என்றால் கட்டாயம் மறுமைநாள் என்ற ஒன்று ஏற்பட்டேயாக வேண்டும். அவ்வாறு ஏற்படும் போது மனிதன் மீள எழுப்பப்படுவான்ளூ அப்போது ஏலவே குறிப்பிடப்பட்டவாறு பூமியினதும் அதில் வாழ்ந்த மனிதனதும் முக்கியத்துவம் உறுதிப்படுத்தப்படுவதற்காக வேண்டி வெகுமதிகள் வழங்குவதற்கும் தண்டனைகள் நிறைவேற்றப்படுவதற்குமான தங்குமிடங்கள் திறக்கப்படும்.
இந்த உலகையும் அதில் மனிதனையும் படைத்துப் பரிபாலிக்கும் ஞானம் பொருந்திய இறைவனின் நீதி, ஞானம், அன்பு, அதிகாரம் போன்ற பண்புகள் உறுதிப்படுத்தப்படும். நித்தியமான அந்த இரட்சகனின் உண்மையான நேசர்கள் நீடித்த மரணத்திலிருந்து விடுதலை பெறுவார்கள்.அந்த இறைநேசர்களுக்கெல்லாம் பெரியவரான முஹம்மத் (ஸல்) அவர்கள் இப்பிரபஞ்சம் முழுவதையுமே திருப்திப்படுத்தக் கூடியளவு தான் செய்த தூய பணிகளுக்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்வார்கள். அவர் செய்த பணிகள் இப்பிரபஞ்சத்தை அருள் பெறச் செய்தனளூ அல்லாஹ்வின் பூரணத்துவத்தையும் வல்லமையையும் ஞானத்தையும் நீதியையும் அவற்றிற்கு எதிரான பண்புகளால் மாசுபடுவதை விட்டும் தூய்மைப்படுத்திக் காட்டின..
முடிவு: அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கின்றமையால் மறுமை என்ற ஒன்றும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.
22. Page
ஏலவே இங்கு குறிப்பிடப்பட்ட ஈமானின் மூன்று அடிப்படைகளும் மீள எழுப்புதலுக்கு சான்று பகர்வதோடு அனைத்து ஆதாரங்களையும் முன்வைத்து அதனை நிறுவுவது போல மலக்குமார்,கழா கத்ர் மீது ஈமான் கொள்ளல் ஆகிய மற்ற இரு அடிப்படைகளும் சான்று பகர்வதோடு நிலையான ஒரு உலகம் உண்டு என்பதனைப் பலமாக நிறுவுவதைக் காண்கிறோம். எவ்வாறெனில் மலக்குமாரையும் அவர்களது பணிகளையும் நிறுவுகின்ற எண்ணற்ற ஆதாரங்களும் சான்றுகளும் ஆன்மாக்கள் வாழும் மறைவான, நிலையான மறு உலகமொன்று இருக்க முடியும் என்பதற்கு கட்டியம் கூறுகின்றன. அங்கு மனித, ஜின் இனங்கள் சுவர்க்கத்தில் அல்லது நரகத்தில் அழிவற்ற வாழ்வு வாழ முடியும் என்பதை அவை உணர்த்துகின்றன. ஏனெனில் அல்லாஹ்வின் அனுமதியுடன் மலக்குகளால் இந்த மறைவான உலகங்களைப் பார்ப்பதற்கும் அவற்றில் நுழைவதற்கும் முடியும்.
ஜிப்ரீல் (அலை) போன்ற மலக்குளைச் சந்திக்கக் கூடிய அனைத்து மலக்குகளும் இந்த உலகங்கள் இருப்பதாகவும் அவர்கள் அவற்றிலே சஞ்சரிப்பதாகவும் கூறிச் சென்றுள்ளனர். அமெரிக்கக் கண்டத்தைக் காணாத ஒருவர் அங்கிருந்து வருகின்ற ஒருவர் சொல்வதை நம்பி ஏற்றுக் கொள்வது எம் எல்லோருக்கும் தெரியும். அவ்வாறுதான் மிக உறுதியான அந்த நிலையான மறுமையையும் அங்கு இருக்கின்ற சுவர்க்கம், நரகம் பற்றியும் மிக மிகப் பலம் பொருந்திய மலக்குகள் கூறுவதை நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவ்வாறுதான் இருபத்து ஆறாம் வார்த்தையான 'அல்-கத்ர்' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விதியைப் பற்றிய நம்பிக்கையை நிறுவக்கூடிய அனைத்து ஆதாரங்களும் மீள் எழுப்புதலையும் மனித நடத்தைகள் மீஸானில் நிறுக்கப்பட்டு அவர்களின் ஏடுகள் அவர்களுக்கு வழங்கப்படுவதையும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
ஏனெனில் எமது கண்முன்னால் இருக்கின்ற ஒவ்வொரு பொருளினதும் அளவுகள் வரையறுக்கப்பட்டு அவை ஒழுங்காகப் பதிவு செய்யப்பட்டிருப்பதானதும் உயிருள்ள ஒவ்வொன்றினதும் வாழ்வில் நடக்கின்ற ஒவ்வொரு அம்சமும் அவற்றின் ஞாபகத்திலும் ஏனைய பதிவேடுகளிலும் பதிவு செய்யப்பட்டிருப்பதும் ஒவ்வொரு உயிரியினதும் -குறிப்பாக-மனிதனது செயற்பாடுகள் பாதுகாக்கப்பட்ட ஏடுகளில் பதியப்படுவதுமான அனைத்தும் ஒரு உண்மையை உரத்துக் கூறிக் கொண்டேயிருக்கின்றன. மிகப்பெரும் நீதிமன்றத்திலே அனைவருக்கும் பொதுவான ஒரு வழக்கு விசாரணையின் பின்னர் வெகுமதியளிப்பதற்காகவே இவ்வனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பதே அவ்வுண்மையாகும். அவ்வாறில்லாவிட்டால் இத்தகைய ஏற்பாடுகள் அனைத்தும் எவ்வித அர்த்தமுமற்றுப் போய்விடும். மீள் எழுப்புதல் என்ற ஒன்று இடம்பெறாது போனால் கத்ரின் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த பிரபஞ்ச ஒழுங்கின் பின்னாலுள்ள அனைத்து நோக்கங்களும் பிழைத்துப் போய்விடும். அவ்வாறான ஒரு நிலை ஒருபோதும் ஏற்பட்டுவிட முடியாது. இந்த எடுகோள் சாத்தியமற்றது என்பது மாத்திரமன்றி இந்தப் பிரபஞ்சத்தையே மறுப்பது போன்ற அர்த்தமற்ற வாதமாகும்.
இறுதியாக,
ஈமானின் ஐந்து அடிப்படைகளும் அவை கூறும் அனைத்து ஆதாரங்களுக்கூடாகவும் மீள எழுப்பப்படுதல் என்பதையும் அது நிகழ்வதற்கான சாத்தியப்பாட்டையும் மறுமையின் தோற்றத்தையும் நிறுவுவதோடு அவற்றுக்கு சான்றாக இருந்து அவற்றை வேண்டி நிற்கின்றன. 'மீள எழுப்பப்படுதல்' என்ற இந்த விவகாரத்தை நிறுவும் இத்தனை வலுவான ஆதாரங்களும் அதற்கான அங்கீகாரமும் இருக்கையில் அல்-குர்ஆனில் கிட்டத்தட்ட மூன்றிலொரு பகுதி மீள எழுப்பப்படுதல், மறுமை ஆகிய விடயதானங்களைப் பேசுவதோடு அது கூறுகின்ற உண்மைகள், நம்பிக்கைகள் அனைத்தினதும் அடிப்படை அம்சமாக இவற்றை முன்வைப்பதை அவதானிக்கலாம்.
ஆரம்பத்தில் சுருக்கமாக சுட்டிக்காட்டிய வசனங்கள் குறிப்பிடுகின்ற மீள்எழுப்புதலுக்கான ஆதாரங்களை ஒன்பது படித்தரங்களாகப் பிரித்து நோக்கினால் அதில் முதலாவது நிலையையே இங்கு விளக்க முனைகின்றோம். இன்ஷா அல்லாஹ் மஹ்ஷர் நிகழ்வும் அதற்கான ஆதாரமும் பின்வரும் வசனங்களின் மூலம் விளக்கப்படும்.
'அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்' '(முஃமின்களே!) நீங்கள் மாலைப் பொழுதிலும், நீங்கள் காலைப் பொழுதிலும் அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருங்கள். இன்னும் வானங்களிலும், பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும். இன்னும், இரவிலும் நீங்கள் ளுஹருடைய நேரத்திலும் (அல்லாஹ்வைத் துதியுங்கள்). அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.' (ரூம்: 17-19)
(இதன் தொடர் எழுதப்படவில்லை.)


