ஆறாம் குறிப்பு

7. Page

ஆறாம் குறிப்பு:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அனைத்து பித்அத்களும் வழிகேடுகளாகும். அனைத்து வழிகேடுகளும் நரகத்துக்கு இட்டுச்செல்லக்கூடியனவாகும்' ... மேலும் 'இன்றைய தினம் உங்களுக்கு உங்களது மார்க்கத்தைப் பூரணப்படுத்திவிட்டேன்' என்ற வசனத்தின் படி இஸ்லாமிய ஷரீஆ சட்டங்கள், நபிகளாரின் ஸூன்னாவின் சட்டதிட்டங்கள் என்பன பூரணம் பெற்றறுவிட்டன. அதன் பின்னர் அவற்றில் புது விடயங்களை புகுத்துவது ஷரீஆவிலும் ஸூன்னாவிலும் குறைகாண்பதாக (அல்லாஹ் பாதுகாப்பானாக!) அல்லது அதனை வெறுப்பதாகவே அமைகின்றது. இவ்வாறு அவற்றை மதிக்காமல், நலவாகக் கருதாமல் புதிய விடயங்களை உருவாக்குவது வழிகேடும் நரகத்துக்கு இட்டுச்செல்லக்கூடியதுமாகும்.

நபிகளாரின் ஸூன்னா பல படித்தரங்களைக் கொண்டது. அதில் விடவே முடியாத 'வாஜிப்'-(பர்ழ்) எனும் ஒரு பகுதியுள்ளது. இஸ்லாமிய ஷரீஆவில் இப்பகுதி விரிவாகவே விளக்கப்பட்டுள்ளது. அது எக்கோணத்திலும் மாற்றமுற முடியாத அடிப்படை அம்சங்களைச் (முஹ்கமாத்) சார்ந்த பகுதியாகும்.  அடுத்து 'நவாபில்' எனும் பகுதியாகும். இதில் இரு பிரிவுகள் காணப்படுகின்றன. ஒன்று: இபாதத்களுடன் தொடர்புடைய பிரத்தியேக ஸூன்னாக்கள். இதுவும் ஷரீஆ நூல்களில் அவ்வாறே விளக்கப்பட்டுள்ளது. அதனை மாற்றுவது 'பித்அத்' ஆகும். அடுத்த பிரிவு: 'ஆதாப்' (ஒழுக்கங்கள்) எனும் பகுதி.

இப்பிரிவு பற்றி நபிகளாரின் ஸீரா நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை மீறுவது பித்அத்தாக கருதப்படமாட்டாது. எனினும் அது ஒருவகையில் நபியவர்கள் கடைபிடித்த ஒழுங்குகளுக்கு மாற்றமானதாகவும், அதன் ஒளியிலிருந்தும் உண்மையான பண்பாடுகளிலிருந்தும் பயன்பெறுவதைப் புறக்கணிப்பதாகவும் அமையும். இந்தப் பிரிவு நபி (ஸல்) அவர்களின் செயற்பாடுகளை-அவர் மனிதன் என்ற நிலையில் மேற்கொண்டதையும் மற்றும் சம்பிரதாயங்கள், வழக்காறுகள் போன்றவற்றால்- பின்பற்றியதையும் குறிக்கின்றது. உதாரணமாக உரையாடல் ஒழுங்குகள், உண்ணல், பருகுதல், உறங்குதல் என்பவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கு விதிகள், கூடிப்பழகும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என நபிகளார் கடைபிடித்த பல ஒழுக்கங்களை இப்பிரிவில் காணலாம். இத்தகு ஒழுக்கங்களே 'ஆதாப்' எனக் குறிப்பிடப்படுகின்றது. இத்தகு ஒழுக்கங்களைக் கடைபிடிப்பவர் தனது வழக்கங்களை இபாதத்தாக மாற்றுகின்றார். தனது வாழ்வில் அந்த ஒழுக்கங்களிலிருந்து அபரிவிதமாக ஒளியையும் பரகத்தையும் பெற்றுக்கொள்கின்றார். அவற்றில் மிகச் சாதாரண ஒழுக்கங்களை கடைபிடிப்பது கூட நபி (ஸல்) அவர்களை நினைவுபடுத்துவதாகவும் உள்ளத்தில் ஒளியை பாய்ச்சுவதாகவும் அமையும்.

நபிகளாரின் ஸூன்னாவில் மிக முக்கியமான கண்ணியமிக்க ஸூன்னாக்கள் வணக்கவழிபாடுளுடன் தொடர்புடையவைகளாகும். வணக்கவழிபாடுள் முழுச் சமூகத்துக்கும் குறிப்பாக்கப்பட்டுள்ள பொதுக் கடமைகளைச் சார்ந்ததாகும். அவ்வாறே அதனை ஒருவர் செய்வதன் மூலம் முழுச் சமூகமும் பயன்பெறுகின்றது. அதனை தவறவிட்டால் முழுச் சமூகமும் பொறுப்பாகும். இத்தகு வணக்கங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அவற்றில் முகஸ்துதி ஊடுறுவ மாட்டாது. இத்தகு வணக்கங்கள் நவாபிலாக (உபரியானதாக) இருந்தாலும் கூட தனிநபர் கடமைகளை விட முக்கியத்தவம் வாய்ந்ததாகும்.