எட்டாம் குறிப்பு

9. Page

எட்டாம் குறிப்பு:


'உங்களிலிருந்தே ஓர் தூதர் உங்களிடம் வந்தார், அவர் உங்கள் மீது ஆர்வம் கொண்டவராகவும் நீங்கள் சிரமப்படுவதை சகிக்கமுடியாதவராகவும் முஃமின்கள் மீது அன்பும் கருணையும் கொண்டவராகவும் இருக்கின்றார்' (அத்தௌபா: 128) எனும் வசனம் நபி (ஸல்) அவர்கள் தனது உம்மத்தின் மீது வைத்துள்ள அதிவுயர்ந்த அன்பையும் பூரண இரக்கத்தையும் விளக்குகின்து.

தொடர் வசனத்தில் 'அவர்கள் புறக்கணித்தால்...' எனும் பகுதி பின்வரும் கருத்தை வலியுறுத்துகின்றது: 'மனிதர்களே...! முஸ்லிம்களே...! உங்கள் மீது எல்லையற்ற அன்பு கொண்டு வழிகாட்டிய இரக்கம் கொண்ட அந்த மனிதர் எத்திவைத்த சட்டங்களையும் ஸூன்னாவையும் புறக்கணித்து நடப்பது எவ்வளவு பெரிய அநீதி, மடமை என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அவர் தனது முழு சக்தியையும் முயற்சியையும் உங்களது நலனுக்காகவே செலவளித்துள்ளார். மேலும் தனது பூரண இரக்கத்தின் காரணமாக தான் கொண்டு வந்த சட்டங்கள், ஸூன்னா எனும் அருமருந்தால் அவர் உங்களது ஆத்மீக காயங்களைத் துடைத்து ஒத்தடம் போட்டுள்ளார். ஆனால் நீங்களோ அவரது ஸூன்னாவைப் புறப்பணித்தால்... இந்தத் தெளிவான இரக்கத்தை மறுத்து கண்களுக்குப் புலப்படும் அந்த அன்பை குற்றம் சுமத்துவதாகவே கருதப்படுவீர்கள்!! 

அன்புடைய மாநபியே..! காருண்ய இறைத்தூதரே..! இவர்கள் உமது மகத்துவமிக்க அன்பையும் மாபெரும் கருணையையும் அறிந்துகொள்ளவில்லையாயின், அதற்குரிய கௌரவத்தை வழங்கவில்லையாயின், அவர்கள் தமது மடமையால் உம்மைப் புறக்கணித்து உமக்கு செவிசாய்க்கவில்லையாயின் நீங்கள் கவலைப்படவேண்டாம்! கலங்கப்பட வேண்டாம்! நிச்சயமாக வானங்கள், பூமியிலுள்ள படைகளின் பரிபாலனத்தை தன்னகத்தே கொண்டுள்ள கண்ணியமிக்க உண்மையாளனும்;, அனைத்தையும் அறிந்துவைத்துள்ள அர்ஷின் அதிகாரத்தை கொண்டவனுமாகிய அல்லாஹ் உம்முடன் இருக்கின்றான். அவன் உமக்குப் போதுமானவன். சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய கூட்டத்தை அவன் உம்மைச் சூழ ஒன்றுசேர்ப்பான். அவர்களை உமக்கு செவிசாய்க்கக்கூடியவர்களாகவும் உமது சட்டங்களை ஏற்றுநடக்கக்கூடியவர்களாகவும் ஆக்குவான்.'

உண்மைதான், நபியவர்கள் கொண்டுவந்த ஷரீஆவிலும், ஸூன்னாவிலும் உள்ள அனைத்து விடயங்களுக்கும் சட்டங்கள10க்கும் பின்னால் பலதரப்பட்ட ஹிக்மத்களும் நலன்களும் இருக்கின்றன. எனது குறையறிவுக்கு எட்டியவகையில் நான் எனது அனைத்து பலவீனங்களுடன் இதனை வாதிடுகின்றறேன். இந்த வாதத்தை உறுதிப்படுத்தத் தயாராக இருக்கின்றேன். இதுவரை என்னால் 'ரஸாஇலுந் நூர்' இல் எழுதப்பட்டுள்ள எழுபது அல்லது எண்பதுக்கு மேற்பட்ட கட்டுரைகள் நபியவர்கள் கொண்டுவந்த ஷரீஆவும், ஸூன்னாவும் எத்தனை எத்தனை யதார்த்தங்களையும் நலன்களையும் கொண்டுள்ளன என்பதற்கான எழுபது அல்லது எண்பது சான்றுகளாகும். இந்தத் தலைப்பின் கீழ் அவற்றைத் தொகுக்க முயற்சித்தால் எழுபதல்ல எழுபதாயிரம் கட்டுரைகள் எழுதினாலும் அந்த நலன்களை வரையறுக்க முடியாதுள்ளது.

நிச்சயமாக ஷரீஆ சட்டங்களும் நபிகளாரின் ஸூன்னாவும் ஆன்மீக, சிந்தனா, உள நோய்களுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய மிகப் பயன்மிகு மருந்து என்பதை நான் அறிந்து அனுபவித்த நிலையில் மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான அனுபவத்தின் மூலமும் பகிரங்கமாகவே கூறுகின்றேன். குறிப்பாக அவை சமூக நோய்களுக்கான நிவாரணியாகும். நான் இதனை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கின்றேன். மேலும் அவற்றின் இடத்தை ஒருபோதும் தத்துவ சித்தாத்தங்களால் நிரப்பமுடியாது என்பதை நான் 'ரஸாஇலுந் நூர்' மூலம் ஓரளவு பிறருக்கு உணர்த்தியுமுள்ளேன். நான் கூறுவதில் சந்தேகப்படுபவர்கள் 'ரஸாஇலுந் நூர்' கிரந்தங்களை ஆய்வுசெய்யட்டும்!! நபிகளாரின் ஸூன்னாவை முடிந்தளவு பின்பற்ற முயற்சிப்பதில் எவ்வளவு இலாபம் உள்ளது என்பதையும் அதில் நிரந்தர வாழ்வுக்கான சந்தோசம் எவ்வளவு உள்ளது என்பதனையும் உலக வாழ்வுக்கான நன்மை, நலன் எவ்வளவு உள்ளது என்பதனையும் மதிப்பிட்டுக்கொள்ளட்டும்!!