முதலாம் குறிப்பு

2. Page

முதலாம் குறிப்பு:


காருண்ய நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'எனது சமூகத்தில் சீர்கேடு தலைதூக்கும் போது எனது ஸூன்னாவைப் பற்றிப்பிடிப்போருக்கு நூறு ஷஹீத்களின் கூலி கிடைக்கும்' உண்மைதான், நபிகளாரின் ஸூன்னாவைப் பின்பற்றுவது அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதில் ஐயமில்லை. குறிப்பாக பித்அத்கள் பரவி அதிகாரம் செலுத்தும் காலத்தில் அதனைப் பின்பற்றுவது மிக உயர்வானதாகவும் கருதப்படுகின்றது. குறிப்பாக சமூகத்தில் சீர்கேடு தலைதூக்கும் போது நபிகளாரின் ஸூன்னாவிலுள்ள சாதாரண விடயங்களை-பண்பாடுகளை-ப் பேணிப் பாதுகாப்பது கூட நிச்சயமாக உறுதியான ஈமானையும் மகத்துவமிகு இறையச்சத்தையுமே உணர்த்துகின்றது.

'நபிகளாரின் ஸூன்னாவைப் பின்பற்றுதல்' என்பது நேரடியாக நபி (ஸல்) அவர்களை நினைவுபடுத்துவதோடு அல்லாஹ் எம்மை அவதானித்துக் கொண்டிருக்கின்றான் என்ற இஹ்ஸானிய உணர்வையும் ஏற்படுத்துகின்றது. நிச்சயமாக சாதாரண செயற்பாடுகளிலும் உண்ணுதல், பருகுதல் தூங்குதல் போன்ற ஒழுங்குமுறைகளிலும் கூட நபிகளாரின் ஸூன்னாவைப் பின்பற்றுவோரின் செயற்பாடுகளும், வழமையான நடைமுறைகளும் அங்கீகரிக்கப்பட்ட ஷரீஆ நடைமுறையாகவும் கூலிகொடுக்கப்படும் இபாதத்தாகவும் மாறுகின்றது. ஏனெனில் அவனது குறித்த செயற்பாட்டில் 'நபிகளாரைப் பின்பற்றுகின்றேன்' என்ற பிரக்ஞை இருக்கும். மேலும் தான் 'ஷரீஆவின் ஒழுங்குகளைப் பின்பற்றுகின்றேன்' என அவன் கற்பனை செய்வான். இதனால் அவனது உள்ளத்தில் 'நபி (ஸல்) அவர்களே ஷரிஆவைக் கொண்டு வந்தவர்' என்ற சிந்தனை உதிக்கும். பின்னர் உண்மையான சட்ட வகுப்பாளனான அல்லாஹ்வின் பால் அவனது உள்ளம் திரும்பும். அப்போது அவன் இஹ்ஸானிய உணர்வை தன்வயப்படுத்திக்கொள்வதோடு தனது செயற்பாட்டை இபாதத்தாகவும் மாற்றிக் கொள்கின்றான்.

  இந்த இரகசியத்தின் அடிப்படையில், யார் நபிகளாரின் ஸூன்னாவை தனது வழக்கமாக எடுத்துப் பின்பற்றுகின்றாரோ அவர் தனது வழக்கங்களை இபாதத்தாக மாற்றிவிட்டார். இதனால் தனது வாழ்வு முழுவதையும் விளைச்சல் தரக்கூடியதாக, கூலிபெறத்தக்கதாக அவரால் மாற்ற முடியுமாக இருக்கும்.