மூன்றாம் குறிப்பு

4. Page


மூன்றாம் குறிப்பு:


இந்த ஸஈத் 'பழைய ஸஈத்' எனும் நிலையிலிருந்து வெளியேற முயற்சித்த போது பயங்கரமான மானசீக சூறாவளிக்கு முன்னால் தனது அறிவும் உள்ளமும் குழம்பிப்போயின. அதற்குக் காரணம் அவருக்கு ஓர் வழிகாட்டி இல்லாமையும் கெடுதியைத் தூண்டும் மனித ஆத்மாவின் கர்வமும் ஆகும். இதனால் அவரது அறிவும் உள்ளமும் ஆழ்ந்த குழப்பத்தில் மூழ்கிப்போயின. அப்பொழுது அவர் நபிகளாரின் ஸூன்னா -அதன் மிகச் சாதாரண ஒழுங்குகள10ம் கூட- கப்பல்களின் பயணதிசையை விளக்கும் திசைகாட்டி, அபாயமும் இருளும் சூழ்ந்த பாதைகளின் குறிகாட்டி என்பதாகக் கண்டுகொண்டார். 

எனது இந்த ஆன்மீகப் பயணத்தில் என் மீது விதிக்கப்பட்டிருந்த கடும் கஷ்டங்கள், நெருக்கடிகளுக்குக் முன்னால் நான் என்னைக் கண்டுகொண்டேன். அப்போது அவற்றுடன் தொடர்புபட்ட நபிகளாரின் ஸூன்னாவின் போதனைகளை நான் பின்பற்றிய போது ஓய்வையும் மென்மையையும் கண்டுகொண்டேன். அவை எனது சுமைகளை என்னை விட்டும் அகற்றுவதைப் போன்று இருந்தன. நான் ஸூன்னாவுக்கு முன் சரணடைவதன் மூலம் 'இத்தகு செயல் சரிதானா?', 'இதில் நன்மை உண்டா?' போன்ற ஐயங்களிலிருந்தும் தடுமாற்றத்திலிருந்தும் பாதுகாப்புப் பெற்றேன்.

வெறுமனே ஸூன்னாவை புறக்கணிப்பதால் பெரும் நெருக்கடியை நான் உணர்ந்தேன். ஆரம்பமும் முடிவும் அறியாத பல பாதைகளை என் முன்னால் கண்டேன். அவை எங்கே போய் முடிவடைகின்றன என்பதை அறியவில்லை. அப்போது எனது பொறுப்பு கனதியானது, என்னால் இலக்கை அடைய முடியாது, எனது பார்வை குறுகியது, பாதை இருள்மயமானது என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

நான் மீண்டும் ஸூன்னாவைப் பற்றிப்பிடித்த வேளையில் பாதை ஒளிபெற்றதைப் போன்று உணர்ந்தேன். பாதுகாப்பான பாதை தோன்றியது. பொறுப்பு குறைவடைந்தது. கஷ்டம் நீங்கியது. அப்போது நான் இமாம் ரப்பானியின் கூற்றை கண்களால் கண்டதைப் போல் ஏற்றுக்கொண்டேன்.