நான்காம் குறிப்பு
NAVIGATION
5. Page
நான்காம் குறிப்பு
ஒரு நாள் ஆச்சரியமிக்கதொரு உலகில் என்னையே நான் கண்டேன். அது மரண சிந்தனையாலும் 'மரணம்' உண்மை என்பதனாலும், உலகம் அழியக்கூடியது என்பதனாலும் உருவான ஓர் ஆன்மீக நிலையாகும். ஓர் ஜனாஸாவாக (பிரேத உடல்) நான் என்னைக் கண்டேன். முக்கியமான மூன்று பாரிய ஜனாஸாக்களுக்கு முன்னிலையில் நான் நின்றேன்.
ஒன்று: கடந்த காலத்தில் மரணித்தோருடனும் என்னுடனும் தொடர்புடைய அனைத்து ஜீவராசிகளினதும் மானசீக ஜனாஸாவின் கப்ரடியிலுள்ள (கல்லறையிலுள்ள) மீஸான் கட்டையாக (கல்லறை நடுகல்லாக) நான் இருக்கின்றேன்
இரண்டாவது: கடந்த காலத்தில் புதைக்கப்பட்டுள்ள, மனித இனத்துடன் தொடர்புடைய அனைத்து வகை ஜீவராசிகளினதும் 'புவி' எனும் கப்ரடியிலுள்ள மீஸான் கட்டையாக காலம் இருக்கின்றது. அந்த மீஸான் கட்டையிலுள்ள, விரைவாக அழியக்கூடிய ஓர் புள்ளியாக அல்லது காலப் போக்கில் அவசரமாக அழியக்கூடிய ஓர் எறும்பாக நான் இருக்கின்றேன்.
மூன்றாவது: மறுமை நிகழும் போது இந்தப் பிரபஞ்சத்தின் மரணம் நிச்சயமானது. இதோ அது நிகழ்ந்துவிட்டதாக நான் கற்பனை செய்கின்றேன். இந்தப் பிரமாண்டமான ஜனாஸாவின் இறுதி நிலையைக் கண்டு நான் பேரதிர்ச்சியடைந்தேன். அதன் மரணத்தால் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தேன். –உறுதியானதும் எதிர்காலத்தில் நிகழும் என்பது நிச்சயமானதுமான- எனது மரணமும் இப்பொழுது நிகழ்ந்து எல்லாப் படைப்புக்களும் என் நேசத்துக்குரியவர்களும் -'அவர்கள் உம்மை புறக்கணித்தால்' என்பதற்கேற்ப- என்னைத் தனியே விட்டு விட்டு புறப்பட்டுவிட்டதாக நான் உணர்கின்றேன். எனது ஆத்மா நிரந்தர எதிர்காலத்தை நோக்கி அழைத்துச்செல்லப்படுகின்றது. அது முடிவே இல்லாத கடலை ஒத்தது. அந்தக் கடலில் விரும்பியோ விரும்பாமலோ குதிப்பது தவிர்க்கமுடியாதது.
நான் ஆச்சரியமான, கவலைதரும் அந்நிலையில் இருந்த போது 'அவர்கள் உம்மைப் புறக்கணித்தால் 'அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனையன்றி வேறு கடவுள் இல்லை. அவன் மீதே சார்ந்திருக்கின்றேன். அவன் மகத்துவமிக்க அர்ஷின் இரட்சகனாவான்' எனக் கூறுவீராக!' (அத்தௌபா: 129) என்ற வசனம் ஈமான் மற்றும் குர்ஆனிலிருந்து கிடைக்கும் பயன்களை எனக்களித்தது. அந்த வசனம் அதிவுயர்ந்தபட்ச பாதுகாப்புமிக்க கப்பலைப் போன்று மாறியது. எனது ஆன்மா அந்த வசனத்தினுள் பூரண பாதுகாப்புடனும் சந்தோசத்துடனும் நுழைந்தது.
ஆம், இந்த வசனம் கூறும் நேரடிக் கருத்துக்கு மேலதிகமாக மறைமுக கருத்தையும் நான் விளங்கிக்கொண்டேன். அக்கருத்து எனக்கு ஆறுதலளித்து அமைதியளித்தது. நான் திருப்தியுற்றேன்.
ஆம், இந்த வசனத்தின் நேரடிப் பொருள் நபி (ஸல்) அவர்களை நோக்கியது: 'வழிகேட்டிலுள்ளவர்கள் உங்களைப் புறக்கணித்து உங்களுடைய ஸூன்னாவையும் ஷரீஆவையும் புறந்தள்ளி குர்ஆனுக்கு செவிசாய்க்கவில்லையாயின் நபியே! நீர் கவலைப்பட வேண்டாம், கலங்கப்பட வேண்டாம். மேலும் 'அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன், அவனிடமே பொறுப்புச்சாட்டுகின்றேன். எனது ஸூன்னாவையும் எனது ஷரீஆவையும் பின்பற்றுவோர்களை பயிற்றுவித்து உருவாக்குபவன் அவனையன்றி நீங்களல்லர். அவனுடைய அர்ஷின் அதிகாரம் அனைத்தையும் சூழ்ந்து கொண்டுள்ளது. மாறுசெய்வோருக்கு அதிலிருந்து தப்பவும் முடியாது. அதிலிருந்து கிடைக்கப்பெறும் உதவி, கேட்போரைவிட்டும் தடுக்கப்படுவதுமில்லை' என நீர் கூறுவீராக!'
அவ்வாறே அந்த வசனத்தின் மறைமுகப் பொருள் இவ்வாறு கூறுகின்றது: 'மனிதா!, மக்களின் தலைவனே!, வழிகாட்டியே! எல்லாப் படைப்புக்களும் உன்னை விட்டுவிட்டு அழிவுப்பாதையில் அழிந்து போய்விட்டாலும், அல்லது உயிரினங்கள் அனைத்தும் மரணித்து உன்னை விட்டும் பிரிந்து சென்றாலும், மனிதர்கள் உன்னை விட்டுவிட்டு மண்ணறைக்குள் புகுந்துவிட்டாலும் அல்லது வழிகேடர்களும் பொடூபோக்காளர்களும் உனக்கு செவிசாய்க்காது இருளில் மூழ்கிவிட்டாலும் நீர் கவலைப்பட வேண்டாம், கலங்கப்பட வேண்டாம். மாறாக 'அல்லாஹ் எனக்குப் போதுமானவன்' எனக் கூறுவீராக!.., அவனை மாத்திரம் போதுமாக்கிக்கொள்வதால் அனைத்துப் படைப்புக்களும் இல்லாவிடினும் எவ்விதப் பிரச்சினையுமில்லை. அப்படியெனில் எம்மை விட்டும் பிரிந்து சென்றவர்கள் இல்லாமையை நோக்கிச் செல்லவில்லை. மாறாக மகத்துவமிக்க அர்ஷின் சொந்தக்காரனின் வேறொரு உலகுக்குப் பயணித்திருக்கின்றார்கள்.
நிச்சயமாக இவர்களுக்குப் பகரமாக அவன் தனது வரையறையற்ற படையிலிருந்து வேறொரு சாராரை அனுப்பியுள்ளான். கப்ரில் நுழைந்தவர்கள் அழியவில்லை. நிச்சயமாக அவர்கள் வேறொரு உலகுக்குப் பயணித்திருக்கின்றார்கள். நிச்சயமாக அவன் இவர்களது இடத்துக்கு வேறு பணியாட்களை அனுப்பியுள்ளான். நிச்சயமாக அவன் வழிகேட்டைப் பின்பற்றுவோருக்குப் பகரமாக தனக்கு முழுமையாக வழிப்பட்டு, சத்திய பாதையைப் பின்பற்றக்கூடிய அடியார்களை மாத்திரம் அனுப்ப சக்தி பெற்றவன். விடயம் இவ்வாறிருக்க அவன் அனைத்தை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான். மாறாக அனைத்தும் அவனின் திருப்பொருத்தத்தைப் பெற ஒரு துரும்பளவேனும் தேவையற்றதாக இருக்க முடியாது.'
என்னை அச்சுறுத்திய அந்த மூன்று படுபயங்கர மரணங்களும் இந்த மறைமுக கருத்தின் மூலம் வித்தியாசமானதொரு தோற்றத்தைப் பெற்றது. அதுதான் பிரபஞ்சம் குழம்பியள்ளது. அதில்; சிலர் பயணிக்க வருகின்றனர், வேறு சிலர் அதைவிட்டும் புறப்படுகின்றனர். அது மிக நுட்பமானதொரு பயணம், படிப்பினைக்குரிய சுற்றுலா, சில பணிகளைக் கொண்ட உல்லாச சுற்றுலா. கண்ணியமிக்க வல்லோன், நீதியாளன், அன்பாளன் மற்றும் ஞானமிக்கவனின் ஆட்சியினதும் திட்டமிடலினதும் கீழ் சிலர் பணிக்கு பிரியாவிடையளிக்கின்றனர். இன்னும் சிலர் பணிகளைப் பொறுப்பேற்கின்றனர்.


