ஒன்பதாம் குறிப்பு

10. Page

ஒன்பதாம் குறிப்பு:



உண்மையில் நபிகளாரின் ஸூன்னாவின் அனைத்துப் பகுதிகளையும் முழுமையாகப் பின்பற்றுவது விஷேடர்களுக்கன்றி இலகுவான விடயமன்று. எனினும் ஒவ்வொருவரும் தனது எண்ணம், நோக்கத்தின் மூலமும் நபியவர்களை சார்ந்திருப்பதன் மூலமும் அந்நிலையை அடைய முடியும் -அவரை முழுமையாகப் பின்பற்ற முடியாவிடினும் சரியே-

நபிகளாரின் ஸூன்னாவிலுள்ள கடமையான, பர்ளான விடயங்களைப் பின்பற்றுவது அடிப்படையாகும். இபாதத்திலுள்ள விரும்பத்தக்க ஸூன்னத்துக்களைப் பொறுத்தவரையில் அவற்றை விட்விடுவதால் பாவம் கிடைக்காவிடினும் அதிகமான நன்மைகளை இழக்கவேண்டிவரும். ஆனால் அவற்றில் மாற்றம் ஏற்படுத்துவது பெரும் தவறாகும்.

ஆனால் சமூக உறவுகள் மற்றும் வழக்காறுகளில் நபிகளாரின் ஸூன்னாக்களைப் தொடர்ந்தும் பின்பற்றுவதால் அந்த வழக்கங்கள் இபாதத்களாக மாறுகின்றன. அவற்றை ஒருவர் பின்பற்றாவிடின் எவ்விதத் தவறும் கிடையாது. எனினும் அல்லாஹ்வின் நேசத்துக்குரிய (ஸல்) அவர்களின் வாழ்வியல் ஒழுங்கிலுள்ள பேரொளியிலிருந்து கிடைக்கும் பயன் குறைவடைகின்றது.

நிச்சயமாக இபாதத் சட்டங்களில் புதிய விடயங்களை உருவாக்குவது பித்அத் ஆகும். பித்அத் எனும் நூதனங்கள் மறுக்கத்தக்கவை. ஏனெனில் அவை 'இன்றைய தினம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்ததை பூரணப்படுத்திவிட்டேன்' எனும் வசனத்தை மறுக்கின்றன. எனினும் (ஸூபித் தரீக்காக்களில் இருப்பதைப் போன்று) திக்ர், அவ்ராத்களைப் பொறுத்தவரையில் அவற்றின் அடிப்படைகள் குர்ஆன் ஸூன்னாவிலிருந்து பெறப்பட்டதாகவும், நபிகளாரின் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை ஸூன்னாக்கு முரண்படாமலும் அவற்றை மாற்றாமலும் இருந்தால் அவை- பல தோற்றங்களில் வித்தியாசமான அமைப்பக்களில் இருந்தாலும்- ''பித்அத்'' ஆகக் கருதப்படமாட்டாது.

எனினும் சில அறிஞர்கள் இவற்றை பித்அத்துக்குள் உள்ளடக்கி 'பித்ஆ ஹஸனா' எனக் குறிப்பிடுகின்றனர். இமாம் ரப்பானி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: 'நபி (ஸல்) அவர்களினூடாக அறிவிக்கப்படும் வார்த்தைகள் அன்னாரின் ஸூன்னா மூலம் மின்னும் ஒளி என்பதை எனது ஆன்மீக பயணத்தில் நான் கண்டுகொண்டேன். ஆனால் நபி (ஸல்) அவர்களினூடகவன்றி அறிவிக்கப்படும் வலுவான அவ்றாத்களில் அந்த ஒளியிருப்பதாக நான் காணவில்லை. இத்தகு பகுதியிலுள்ள மிக உயர்ந்த திக்ர் முதலாம் பகுதியிலுள்ள மிகத் தாழ்ந்த தரத்தையும் கொண்டதல்ல. நபிகளாரின் ஸூன்னா எனும் ஒளிக்கீற்று ஓர் அமுத சுரப்பி என்பதையும் ஒளியைத் தேடுபவருக்கு ஸூன்னா மாத்திரம் போதுமானது, அதற்கு வெளியே ஒளியைத் தேட எவ்வித அவசியமுமில்லை என்பதையும் இதிலிலிருந்து நான் புரிந்தகொண்டேன்.'

ஷரீஆவைத் துறைபோகக் கற்ற இமாம் ரப்பானி போன்ற சான்றோரின் இத்தகைய தீர்ப்பு நபிகளாரின் ஸூன்னா ஈருலக வெற்றிக்குமான அத்திவாரக்கல், பூரணத்துவத்தின் அடிப்படையும் ஊற்றும் என்பதை விளக்குகின்றது.

'யா அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் ஸூன்னாவைப் பின்பற்றி வாழ அருள்புரிவாயாக! 'எமது இரட்சகனே! நீ இறக்கியதை நாம் ஈமான் கொண்டோம். மேலும் தூதரைப் பின்பற்றியுள்ளோம். எம்மை அதற்கு சான்றுபகர்வோருடன் சேர்த்துவிடுவாயாக!'