பத்தாம் குறிப்பு
NAVIGATION
11. Page
பத்தாம் குறிப்பு:
'நீங்கள் அல்லாஹ்வை நேசிக்கின்றவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள், அல்லாஹ் உங்களை நேசிப்பான் என நபியே! நீர் கூறுவீராக!' (ஆல இம்ரான்: 31) எனும் வசனம் சொற்சுருக்கமானதும் கருத்தாழம் கொண்டதுமாகும். ஏனெனில் இந்த ஆயத்தில் அதிகமான வசனங்கள் உள்ளடங்கியுள்ளன. அவை பின்வருமாறு: நீங்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டவர்களாக இருந்தால் அவனை நீங்கள் விரும்புகின்றீர்கள் என்பதில் ஜயமில்லை. நீங்கள் அல்லாஹ்வை விரும்புகின்றீர்கள் என்றால் அவன் விரும்புவதைப் போன்று நீங்கள் செயற்படுவீர்கள். மேலும் அவன் யாரை விரும்புகின்றானோ அவரைப் போன்றிருக்க நீங்களும் விரும்புவீர்கள். அவரைப் பின்பற்ற முயற்சிப்பீர்கள்.
நீங்கள் எப்பொழுது அவரைப் பின்பற்றுகின்றீர்களோ அப்பொழுது அல்லாஹ் உங்களை விரும்புவான். நீங்கள் அல்லாஹ்வை விரும்புவது அவன் உங்களை விரும்புவதற்கேயாகும். இந்த வசனங்கள் அனைத்தும் மேற்படி குர்ஆன் வசனத்துக்கான சுருக்கமான விளக்கமாகும். அதன் சாரம்சம் மனிதனின் மிக முக்கிய உயர்ந்த இலக்கு உயர்ச்சிமிகு உண்மையாளனான அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுக்கொள்வதாகும். இந்த உயர்ந்த நிலையை அடைவதற்கான வழி அல்லாஹ்வின் தூதரைப் பின்பற்றி அவரது ஸூன்னாவை முன்மாதிரியாகக் கொள்வதுவே என மேற்படி குர்ஆன் வசனம் விளக்குகின்றது. இந்நிலையில் மூன்று விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டால் மேலே கூறப்பட்ட யதார்த்தம் தெளிவாக புலப்பட்டுவிடுகின்றது.
1.இப்பிரபஞ்சத்தின் படைப்பாளன் மீது மனிதன் இயல்பிலேயே வரையறையற்ற அன்பு, நேசம், காதல் கொண்ட இயல்பிலேயே படைக்கப்பட்டுள்ளான். ஏனெனில் மனித இயல்பில் 'அழகை நேசிக்கும் பண்பும்', 'பூரணத்துவத்தைக் கவரும் இயல்பும்', 'தயாள குணத்தை விரும்பும் சுபாவமும்' உண்டு. இந்த அழகு, பூரணத்துவம், தயாளம் என்பவற்றின் தராதரத்துக்கேற்ப அன்பும் அதிகரித்து சிலவேளை அதன் உச்சகட்டமான 'இஷ்க்' எனும் காதல் நிலையை அடைகின்றது.
எனவே மனிதனின் சிறிய உள்ளத்தில் 'காதலுணர்வு' பிரபஞ்சத்தின் விசாலத்தைக் கொண்டுள்ளது.
உண்மைதான், மனிதனினுடைய உள்ளத்தின் ஒருபகுதியான, கடுகளவு பருமனைக் கொண்ட மிகச் சிறிய நினைவாற்றலில் வாசிகசாலையளவு ஆயிரமாயிரம் புத்தகங்களைப் பதிய முடியுமெனின் இந்தச் சிறிய உள்ளத்தால் முழுப் பிரபஞ்சத்தையும் உள்ளடக்க முடியும்| பிரபஞ்சத்தின் அளவு அன்பையும் சுமக்க முடியும் என்பதையே அது சுட்டிக்காட்டுகின்றது.
எனவே ஒருபுறத்தில் 'அழகு', 'பூரணத்துவம்', 'தயாளம்' என்பவற்றுக்கு முன்னால் மனித இயல்பு தனது வரையறையற்ற அன்பை வழங்கத் தயாராக இருப்பதால்...| மறுபுறத்தில் பிரபஞ்சத்தின் இரட்சகன் வரையறையற்ற தூய அழகைக் கொண்டிருக்கின்றான். பிரபஞ்சத்திலுள்ள படைப்புக்களில் அந்த அழகு பிரதிபலிப்பதன் மூலம் அவனது அழகைத் தெளிவாக உறுதிப்படுத்த முடியுமாக இருப்பதால்...| மேலும் அவன் வரையறையற்ற முழுமையான பூரணத்துவத்தைக் கொண்டிருக்கின்றான்.
பிரபஞ்சத்திலுள்ள படைப்புக்களில் அந்த பூரணத்துவத்தின் செதுக்கல்கள் பிரதிபலிப்பதன் மூலம் அவனது பூரணத்துவத்தைத் தெளிவாக உறுதிப்படுத்த முடியுமாக இருப்பதால்...| மேலும் அவன் வரையறையற்ற தயாளனாக இருக்கின்றான். அதனை அனைத்து ஜீவராசிகளிலும் பிரதிபலிக்கின்ற எண்ணற்ற பல்வகைப்பட்ட அருட்கொடைகளை காண்பதன் மூலம் உறுதிப்படுத்த முடியுமாக இருப்பதால்...| நிச்சயமாக அந்த 'அழகு', 'பூரணத்துவம்', 'தயாளம்' என்பன -அதிகம் தேவையுடையவனும் அதிகம் சிந்திக்கக்கூடியவனும் அதிகம் நேசிக்கக்கூடியவனும் உணர்வும், அறிவும் கொண்டவனுமான-மனிதனிடத்தில் வரையறையற்ற அன்பை வேண்டிநிற்கின்றன.
உண்மைதான், அந்த கண்ணியமிகு படைப்பாளனுக்கு முன்னால் வரையறையற்ற அன்பை வழங்க ஒவ்வொரு மனிதனும் தயாராகவே இருக்கின்றான். அதவேளை அந்தப் படைப்பாளன் தனது 'அழகு', 'பூரணத்துவம்', 'தயாளம்' என்பவற்றுக்கு முன்னால் வேறொருவரைவிட அன்புசெலுத்தப்பட அதிகம் தகுதியானவனாக இருக்கின்றான். ஒரு முஃமின் தனது வாழ்வு, இருத்தல், உடல், உலகம், உயிர், பிற உயிரிகள் என்பவற்றின் மீது கொள்கின்ற பல்வகைப்பட்ட அன்பும், இறுக்கமான உறவும் அந்த தெய்வீக அன்பை வழங்குவதற்கான சில துளிகளாகும். அதுமாத்திரமன்றி மனிதனின் பல்வகைப்பட்ட உணர்வுகளும் கூட அந்த அன்புக்கான திருப்பங்களும், பல தோற்றங்களிலுள்ள சில துளிகளுமாகும்.
மனிதன் தனது தனிப்பட்ட சந்தோசத்தின் மூலம் இன்பமடைவதைப் போன்று தன்னுடன் தொடர்புற்றோரின் சந்தோசத்தின் மூலமும் இன்பமடைகின்றான். அவ்வாறே தன்னை சோதனைகளிலிருந்து காப்பாற்றுவோரை அவன் விரும்புவதைப் போன்று தனது நேசத்துக்குரியவர்களை சோதனைகளிலிருந்து காப்பாற்றுவோரையும் அவன் விரும்புகின்றான் என்பது அறியப்பட்ட விடயமாகும்.
எனவே, இந்த ஆன்மீக நிலையிலிருந்து- ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கியுள்ள பல்வகைப்பட்ட தயாளத்தன்மைகளில் ஒன்றை மாத்திரம் மனிதன் சிந்தித்துப் பார்த்தால் அவன் கூறுவான்: நிரந்தர இருளான இல்லாமையிலிருந்து எனது படைப்பாளன் என்னைப் பாதுகாத்து இந்தப் பிரபஞ்சத்தில் இந்த அழகிய வாழ்வை எனக்கு வழங்கியதைப் போல் எனது தவணை முடிந்தால் நிரந்தர அழிவான இல்லாமையிலிருந்தும் அவன் என்னைப் பாதுகாப்பான். மேலும், நிரந்தர நித்திய உலகத்தில் அற்புதமான நிரந்தர வாழ்வொன்றை அவன் எனக்குத் தருவான். அந்த உலகிலுள்ள அனைத்துவித இன்பத்தையும் அழகையும் அனுபவிக்கக்கூடிய உள்ளார்ந்த மற்றும் வெளிப்புற உணர்வுகளையும் அவன் எனக்கு வழங்குவான்.
அவ்வாறே நான் அதிகமதிகம் விரும்பக்கூடியவர்களும் உறவு பாராட்டக்கூடியவர்களுமான எனது உறவினர்கள், எனது நேசர்கள், மனிதர்கள் அனைவருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளையும் வழங்குவான். இந்த உதவியும் உபகாரமும் ஒருவகையில் என்னையும் சார்ந்திருப்பதால் நான் இவர்களது சந்தோசத்தின் மூலம் இன்பமடைகின்றேன். 'மனிதன் உபகாரத்தின்' அடிமை என்பதற்கேற்ப உபகாரத்துக்கு முன்னால் ஒவ்வொரு மனிதனிடமும் அடிமைப்படுமளவு அன்பு இருக்குமானால் வரையறையற்ற நிரந்தர இறை உபகாரத்துக்கு முன்னால் அவன் சந்தேகமின்றி இவ்வாறு கூறுவான்: ''எனது உள்ளம் பிரபஞ்சத்தின் விசாலத்தின் அளவைக் கொண்டிருந்தால் இறை உபகாரத்துக்கு முன்னால் அது அன்பால் நிரம்பி வழிந்திருக்கும். நானும் அதனை அன்பால் நிரப்பவே விரும்புகின்றேன். உண்மையில் என்னால் அந்த அன்பை சுமக்க முடியாவிடினும் ஈமான், நிய்யத், ஏற்புடைமை, மதிப்பு, நேசம், நாட்டம், விருப்பம் என்பவற்றால் நான் அதனை சுமக்கின்றேன்.''
இறை உபகாரத்தக்கு முன்னால் (மேலே சுருக்கமாக சுட்டிக்காட்டியதைப் போல்) மனிதன் எவ்வாறு தனது அன்பை வெளிக்காட்டுகின்றான் என்பதை வைத்து அழகு, பூரணத்துவம் என்பவற்றுக்கு முன்னால் மனிதன் தனது அன்பை எவ்வாறு வெளிக்காட்டுகின்றான் என்பதை ஒவ்வொருவரும் ஒப்புநோக்கிக்கொள்ளட்டும். ஆனால், ஒரு இறை நிராகரிப்பாளனைப் பொருத்தவரையில் அவன் தனது நிராகரிப்பின் காரணமாக வரையறையற்ற எதிர்ப்பை மறைத்து வைத்திருக்கின்றான். அதுமாத்திரமன்றி பிறபடைப்பினங்களுக்கு முன்னால் இழிவையும் அநீதியையுமே சுமந்துள்ளான்.
2.இறை நேசம் என்பது நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதை வேண்டிநிற்கின்றது. ஏனெனில் இறை நேசம் அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தும் செயலாகும். அவனது திருப்தி முஹம்மத் (ஸல்) எனும் ஆளுமையில் பூரணமாக வெளிப்படுகின்றது.
எனவே ஒருவர் தனது உடை, நடை, செயற்பாடுகளில் அந்த முஹம்மதின் ஆளுமைக் குணங்களைப் பின்பற்றுவது அல்லது அவரைப் போன்று வாழ்வது இரு வகையில் அவசியப்படுகின்றது.
(அ)இறை நேசம் எனும் புறத்திலிருந்து: அல்லாஹ்வின் திருப்திக்குட்பட்டவகையில் செயற்பட்டு அவனது கட்டளைக்கு அடிபணிந்து வாழவிரும்பினால் இத்துறையில் முன்னோடியாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்த முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவது அவசியமாகும்.
(ஆ)மனித சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள வரையறையற்ற அருட்கொடைகளுக்கு நபி (ஸல்) அவர்கள் மிகப் பிரதான ஊடகமாக இருப்பதால் நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்காக வரையறையற்றளவு நேசிக்கப்படத் தகுதியானவர். மனிதன் முடிந்தளவு தான் விரும்புபவரைப் போன்றிருக்க இயல்பில் விரும்புகின்றான். அப்படியெனில் அல்லாஹ்வின் நேசத்துக்குரியவரை விரும்புபவர்கள் கட்டாயம் அத்தூதரின் ஸூன்னாக்களைப் பின்பற்றுவதன் மூலம் அவரைப் போன்றிருக்க முனைய வேண்டும்.
3. அல்லாஹ் எல்லையற்ற அருளாளனாக இருப்பதைப் போன்று எல்லையற்ற நேசனாகவும் இருக்கின்றான். அவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் படைப்புக்களின் அழகின் மூலமும் அவற்றை அழுகுபடுத்துவதன் மூலமும் தன்னை நேசிக்கச்செய்கின்றான். அவ்வாறே அவன் தனது படைப்புக்களை விரும்புகின்ற அறிவும் உணர்வுமுள்ளவர்களையும் விரும்புகின்றான். குறிப்பாக, அவர்கள் அல்லாஹ்வின் படைப்புக்களை நேசிப்பதாலே அல்லாஹ் அவர்களை நேசிக்கின்றான். அப்படியெனின் அல்லாஹ்வின் அன்பைப் பெற விரைவது எவ்வளவு உயர்ந்த முக்கிய இலக்கு என்பதை ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்துகொள்ளட்டும். நிச்சயமாக - சுவனலோகத்தின் அழகு, சொகுசு, இன்பம் அனைத்தையும் கொண்டுள்ள - அல்லாஹ்வின் அன்பு அவனின் அருளின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். எனவே இறைவாக்கின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்களின் ஸூன்னாவைப் பின்பற்றுவதன் மூலமேயன்றி அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுக்கொள்ள முடியாது. நிச்சயமாக நபிகளாரின் ஸூன்னாவைப் பின்பற்றுதல் மனிதனின் உயர்ந்த இலக்கும், மிக முக்கிய பணியுமாகும்.


